ஒரு கதை 20: உருப்பளிங்குகள்

யாவருக்குள்ளும் சொல்வதற்கான ஒரு நூறு கதைகள் சேகரமாகியிருக்கின்றன. அதிலும் தாங்கள் கற்றுத் தெளிந்த பள்ளிக்கூடங்களைப் பற்றிய பெருமிதங்களோ அல்லது எரிச்சலோ அற்ற மனிதர்கள் இந்த உலகினில் இல்லை என்பதே யதார்த்தமான நிஜம். பள்ளிக்கூட நினைவுக் கதைகளால் நிறைந்திருக்கிறது எல்லோரின் பால்யமும். அந்த ஞாபகங்களையே எழுத்தாளர்கள் கதைகளாக உருமாற்றித் தருகிறார்கள்.அதிலும் பள்ளிக்கூட ஞாபகங்கள் மிக மிக தனித்தவை. ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தன்மையிலான அனுபவங்கள் இருக்கின்றன.என்னுடைய பள்ளித்தோழன் ஒருவனை பஸ்ஸ்டாண்டில் பாரவண்டி தள்ளுகிறவராக பார்த்த நாளின் துக்கம் இப்போதுவரையிலும் எனக்குள் தீராத வலியைத் தந்து கொண்டேயிருக்கிறது.

அதே நாளில்தான் பாரஸ்ட் ஆபீஸராக மிடுக்கோடு வலம் வரும் பள்ளித் தோழனை அதே பஸ்ஸ்டாண்டில் பார்த்தேன். நாங்கள் மூவரும் ஒரே வகுப்பறையில் மூன்று நான்கு வருடங்கள் ஒன்றாகப் படித்திருக்கிறோம். நான் அவர்கள் இருவரையும் தனித்தனியேதான் சந்தித்தேன். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டார்களா? இன்றுவரையிலும் எனக்குத் தெரியவில்லை. இவர்களின் இருவேறு நேர் எதிர் உலகமும் உருவாகி வந்த இடம் அதே வகுப்பறை தான். ஒன்றிலிருந்து எப்படி விதவிதமான வாழ்க்கைமுறை கொண்ட மனிதர்கள் உருவாகுகிறார்கள். வாழ்க்கையை வடிவமைப்பதில் பள்ளிக்கூடத்தின் பங்கு என்னவாக இருக்கிறது.எப்போது நினைத்தாலும் ஆச்சரிம் மிகும் கேள்வியிது.

குழந்தைகள் மனஉலகம் குறித்து தமிழில் எழுதிய,எழுதிக் கொண்டிருக்கிற எழுத்தாளர்கள் பள்ளிக்கூட வாழ்வினைப் பற்றி என்னவெல்லாம் எழுதியிருக்கிறார்கள் என நிச்சயம் எழுத வேண்டும். அப்போது அது மாறிக் கொண்டிருக்கும் குழந்தை உலகத்தையும்,பள்ளிக்கூடம் உருமாறி வந்திருக்கும் வரலாற்றையும் நமக்கு உணர்த்திட போதுமானதாக இருக்கும். இன்றைக்கு பள்ளிக்கூடங்கள் வேறு ஒன்றாக மாறியிருக்கின்றன. தன்னுடைய மேட்டிமைத் தனத்தை பரிசோதித்திடும் கருவியென பள்ளிக்கூட வகுப்பறைகளை மாற்ற நினைக்கும் அரசியல் புரிதலற்றவர்களின் சமகால நடவடிக்கை நமக்கு எரிச்சல் ஊட்டுகிறது. குழந்தமையை மெதுவாக குழந்தைகளிடம் இருந்து அகற்றி ஒரே போலான ரோபோக்களை உருவாக்கிடும் இடமாக ஆகிக் கொண்டிருக்கின்றன பள்ளிக்கூடங்கள்.

மனிதகுல வாழ்வை,அதன் வளர்ச்சியைக் குறித்த அறிதல் முறை தான் இலக்கியம். வாழ்க்கையின் மிகமுக்கியமான காலம் பள்ளிநாட்கள். தமிழ் இலக்கியக்காரர்கள் பள்ளிக்கூட வாழ்க்கையைக் குறித்து என்ன தான் எழுதியிருக்கிறார்கள் என்பதை தொகுத்துப் பார்க்க வேண்டும். அப்போது இன்றைக்கு வெறும் தேர்வு தயாரிப்பு மையங்களாக சுருங்கிப் போயிருக்கிற இன்றைய கல்விக் கூடங்களைப் புரிந்து கொள்ள உதவும். எங்கிருந்து துவங்குவது என்பது மிகமுக்கியம். தமிழ் வாழ்க்கையினை தன்படைப்புகளின் வழி உலகறியச் செய்தவர் பூமணி.

தென்தமிழகத்தின் தனித்த வாழ்க்கை முறை கொண்ட நிலப்பகுதி கரிசல்..கரிசலின் வாழ்க்கையை அம்பாரத்தில் அள்ளித் தந்திருப்பவர் எழுத்தாளர் பூமணி. கரிசல் இலக்கியக்காரன் என தன்னைத் தனித்தொகுக்காதீர்கள். நான் முதலில் மனிதன். மனிதர்களைப் பற்றி கதை எழுத வந்தவன் என்று சொல்லியவர் அவர். வயிறுகள், ரீதி,பசை போன்ற காலத்தால் அழியாத அறுபதிற்கும் மேலான சிறுகதைகளை எழுதியிருக்கிறார். கச்சிதம்தான் பூமணியின் சிறுகதை அடையாளம். கரிசல் வாழ்க்கை எனத் தொகுக்கப்பட்ட கதைகளுக்குள் ஏன் எளியவர்களிலும் எளியவர்களான ஒடுக்கப்பட்ட உழைப்பாளி மக்களின் கதைகள் எங்கே என அவரே அவரைக் கேட்டுக் கொண்ட கேள்விகளுக்கான பதில்களே பூமணியின் கதைகள். அவருடைய பிறகு நாவல் வெளிவந்த போது அவரை ஆய்வாளர்கள் தலித் எழுத்தாளர் என்று வகைப்படுத்தினர். அப்படியான முத்திரை என்மீது விழுவதை என்னால் ஏற்க முடியாது என இன்றுவரையிலும் மறுத்துக்கொண்டிருப்பவர் எழுத்தாளர் பூமணி.

எழுத்தாளர் பூமணியின் பள்ளிக்கூடம், மாணவ,மாணவியர் வாழ்க்கைப் பகுதிகள் காட்சிப்படுத்தப்பட்ட கதையொன்றை ஒருகதைத் தொடருக்குள் எழுதுகிறேன். கரிசல் நிலமெங்கும் வெள்ளைப் பிளாட் கற்கள் நட்டப்பட்டிருப்பது உயிரை வதைக்கிறது. சொந்த நிலமிலருந்தும் விவசாயம் பொய்த்துப் போன காட்டில் உயிரைக் கைகளில் பிடித்துக்கொண்டு இன்றைக்கும் மனிதக்கூட்டம் கரிசல் காட்டில் வாழவே செய்கிறது. ஆனாலும் பெரும் கூட்டம் குழந்தை குட்டிகளை அழைத்துக் கொண்டு அருகமை நகரங்களுக்கு வாழ்வதற்காக வந்து இறங்குவது இன்றுவரையிலும் தொடரவே செய்கிறது. புலம் பெயர்தல் என்பதை கண்டம் விட்டு கண்டம். நாடு விட்டு நாடு இடம் பெயர்தல் என நாம் புரிந்து கொள்ள பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். நிஜத்தில் போட்டது போட்டபடி எல்லாவற்றையும் அப்படி அப்படியே கிளம்பி பத்து கிலோ மீட்டருக்குள் பதுங்கிக்கிடக்கும் ஊருக்கு வாழ்வைத்தேடி வருவதும்கூட புலம் பெயர்தல்தான்.

புலம் பெயர்ந்த குடும்பத்தை நிலைகுலையச் செய்த வாழ்வின் துக்கப் பகுதியே எழுத்தாளர் பூமணியின் கோலி எனும் சிறுகதை. அவரின் மிகமுக்கியமான சிறுகதை கோலி. கதை எங்கும் ஒடித் திரிகிறார்கள் வித விதமாக குழந்தைகள். எத்தனை பிள்ளை விளையாட்டினை தொலைத்திருக்கிறோம் என்பதை பூமணியின் கதை நமக்கு உணர்த்துகிறது. சேர்ந்து இயங்குகிற மனநிலையை இன்றைய பள்ளிக்கூடங்கள் தொலைக்கின்றன. மாணவர்கள் தனித் தனி தீவுகளாக இயங்குகிறார்கள். எத்தனை வசீகரமானதாக இருந்திருக்கிறது குழந்தைமை. காடெங்கும் சுற்றித் திரிந்த குழந்தைகள் இப்போது இல்லை. அற்றுப் போய்விட்டார்கள். விளையாட்டினைக் கூட செல்போனிலும்,எலக்ட்ரானிக் உபகரணங்கள் வழியாகவும்தான் இன்று நிகழ்த்துகிறார்கள்.

இதையே பூமணியின் கதைக்குள் ஒடித்திரிகிற குழந்தைகள் நமக்கு உணர்த்துகிறார்கள். எத்தனை பெரிய விளையாட்டிடம் தெரியுமா காடு என்பதை நமக்கு குழந்தைகளே உணர்த்துகிறார்கள்..நகர வாழ்க்கையில் மட்டுமல்ல,கிராமங்களிலும் விளையாட்டுகள் தொலைந்து விட்டன. ஆளற்ற கிராமத்துக் கண்மாய்க்கரைகள் இன்றைக்கு கிராமத்தின் அடையாளங்களாகி விட்டன. நீர் அற்று வறண்டுகிடக்கும் கரைகளில் உயர்ந்து நிற்கும் ஆலமரங்கள் குழந்தைகளின்றி வெறும் காற்றில் அசைகின்றன. ஆட்டம் போடுகிற குழந்தைககள் அற்ற அந்த விழுதுகளின் வெறுமை பார்ப்பவரின் மனதை இம்சிக்கிறது.

இந்த பின்னனியில் மிக எளிய மொழியில் நகரும் கதை கோலி. கிராமத்தில் விவசாயம் முற்றாக அழிந்த பிறகு வாழ்வைத் தேடி நகரத்திற்கு வந்த எளிய குடும்பத்தின் கதையிது.ரோட்டோரத்தில் இட்லிக் கடை நடத்தி வாழ்வை நகர்த்துகிறது குடும்பம். அந்த வீட்டிலிருந்து நகரத்துப் பள்ளிக்கூடத்திற்குப் போகிறான் சிறுவன். அவனைக் கவனித்து எழுத்தாளர் பூமணி சொன்ன கதையே கோலி. புலம் பெயர்தலின் வழியை சமகால சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.புலம் பெயர்தல் என்பதை நம்முடைய மனம் தூரம்,தொலைவோடு சம்பந்தப்படுத்திப் புரிந்து கொள்கிறது. குக்கிராமம் ஒன்றிலிருந்து இருபது கிலோ மீட்டர் பயணம் செய்து குடும்பத்தை நடத்துவதும் இடம்பெயர்தல் தான். எங்கிருந்தாவது இந்த மிச்சமிருக்கும் வாழ்க்கையை வாழத் துடிக்கும் குடும்பத்து பையனை பின்தொடர்கிறார் பூமணி.

கிராமத்தை விட்டு குடும்பம் வெளியேறறுகிறது. நடப்பது என்னவென்று அந்த குழந்தைக்கு தெரியவில்லை. தாயின் சேலைத் தலைப்பைப் பிடித்தபடி தன் ஊர்விட்டு வெளியேறுகிறது குழந்தை. ஊரின் மீதான ஏக்கமும், அந்த நிலத்திற்கு மட்டுமேயான ஏக்கமும் எப்படி அந்தக் குழந்தைக்கு இல்லாமல் போகும். நகரத்து பரபரப்போடு ஒட்ட முடியவில்லை அந்தச் சின்னக் குழந்தையால். எதனுடனும் ஒட்டமுடியாமல் தவிக்கிறது மனம். நிலத்தோடே ஒட்டமுடியாத மனம் எப்படி அந்த நிலத்தில் எழுந்து நிற்கும். தடுமாறுகிறான் அந்தச் சிறுவன். அவனுடைய குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் சின்ன சாப்பாட்டுக் கடையில் கூட அந்த சிறுவனால் பொருந்த முடியவில்லை. பள்ளிக்கூடத்தோடு மட்டும் எப்படி அவனுடைய மனம் ஒட்டும், உறவாடும். கிராமத்தில் தான் உருண்டு புரண்ட பள்ளிக்கூடத்துப் புழுதியின் வாசனை அவனை விட்டு அகலவே இல்லை.

கதைக்குள் அந்த மாணவனின் மனநிலைக்குள் நகரும் பள்ளிக்கூடம் குறித்த சொற்கள் மிகமுக்கியமானவை.விவாதத்திற்குரியவை. அவன் யோசிப்பதாக கதை விரிக்கும் சொற்கள் இவை. “என்னடா இது பள்ளிக்கூடம். நெருக்கும் போது ஒண்ணுக்கடிக்கனும். தவிக்கும் போது தண்ணீர் குடிக்கனும். தோணும் போது விளையாடனும். இன்ன. விளையாட்டு என்றில்லாமல் இஷ்டத்திற்கு விளையாடனும். செதுக்கு முத்து விளையாட்டு,கோலிக்குண்டு விளையாட்டு,நொண்டி,ஒடிப்பிடிக்கிறது என வித விதமாய் விளையாடித் தீர்க்கனும். இங்க என்னடான்னா அடைச்சே வச்சிருக்காய்ங்க”…

இந்தச் சொற்றொடர்கள் கோலி கதையின் மிக முக்கியமான பகுதி. பள்ளிக்கூடங்களில் நிலவுகிற அதீத ஒழுங்கை கண்டு எரிச்சல் அடைகிற பள்ளி மாணவனின் மனநிலையை தன் எழுத்தில் கண்டறிந்து சொன்னவர் பூமணி. விளையாட எவரும் அற்ற பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறுகிறான். எவ்வளவு பெரிய விளையாட்டிடம் காடு என்பது ஏன் இந்த நகரத்துக்காரர்களுக்குத் தெரியவேயில்லை என எரிச்சல் அடைகிறான் அந்தச் சிறுவன். அவனுடைய அப்பா நடத்துகிற ரோட்டோரத்தின் இட்டிலிக்கடை ஒரத்தையே அவன் விளையாட்டிடமாக உருமாற்றுகிறான். அவன் ஒருவனே இருவர் மூவர் ஆகி அந்த ரோட்டில் கோலிக்குண்டு விளையாடுகிறான். தன்னோடு விளையாட ஒருவன்கூட இல்லாமல் இருப்பது எவ்வளவு பெரிய துயரம். எவரும் அற்ற ரோட்டில் கோலிக்குண்டு அடித்து விளையாடுகிறான் சிறுவன். எல்லாமே ஒரு நொடியில் நிகழ்ந்து விடுகிறது.. எங்கிருந்தோ கரும்புகை கக்கி வந்த பஸ் அந்தச் சிறுவனின் மீது மோதிட எல்லாம் நிலை குலைந்து போகிறது. அவனுடைய தலை மட்டும் தனித்து தெறிக்கிறது.அவன் அடித்து விளையாடிய கோலிக்குண்டோடு குண்டாக மாறிவிழுகிறது அவன் தலை. மாணவ மனநிலையை அறிந்து கொள்ள மறுக்கும் நம் கல்விக்கூடத்தின் வன்முறையை தர்க்கம் செய்யும் கதையிது.

எழுத்தாளர் பூமணியின் கோலி கதையை எப்போது வாசித்தாலும் கு.அழகிரிசாமியின் காற்று கதையும்,காற்றோடு காற்றாகிப் போன குழந்தை கற்பகத்தின் முகமும் எனக்குள் எப்போதும் எழும். சிறுகதை எழுதுவது மிகவும் கச்சிதமாக நிகழ்த்த வேண்டிய மொழிச் செயல்பாடு. அதனை தன்னுடைய எல்லாக் கதைகளிலும் பரிசோதித்து வெற்றி கண்டவர் எழுத்தாளர் பூமணி.
ம.மணிமாறன்.. ( தொடரும்)

இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *