மனிதர்கள் விசித்திரமானவர்கள். அவரவர்களுக்கான ஆசைகளை சுமந்தலையும் விசித்திர மனம் கொண்டலையும் தனித்த உயிரிகள் மனிதர்கள். அன்பு, கருணை,இரக்கம் போன்ற கல்யாண குணங்களோடு மட்டும் அலைபவன் இல்லை மனிதன். நித்தமும் எதிர்படும் தன் சக மனிதர்களின் மீது வெறுப்பை உமிழ்கிற மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எப்போதாவது பளிச்சென வெளிப்படும் இந்த காரிருள், பலசமயங்களில் மனம் எனும் இருட்குகைகக்குள் பதுங்கித்தான் கிடக்கிறது. அவனுக்கோ அல்லது அவளுக்கோ இருண்ட மனதின் பக்கம் என ஒன்று நிச்சயம் இருக்கும். அந்த இருள் பக்கங்களைப் பொதுவெளியில் பளிச்சென திறந்து காட்டிடும் துணிச்சல்தான் அவர்களுக்கு இருக்காது. மனதை இறுக்கிப் பிடித்து வெளித்தெரியாமல் காட்டிட விதவிதமான திறைமறைவுச் சட்டைகளை அவர்கள் போட்டுக் கொள்கிறார்கள்.
நேர்கண் கொண்டு பார்க்கிறபோது புரிதலுக்குள்ளாக சாத்தியமற்றது மனித மனம். ஏன் தெரியுமா?. இங்கு சரிபாதிக்கும் மேலானோர் இருட்டறைக்குள் பூட்டி வைத்திருக்கிறார்கள் தன்னையும் தன் மனதையும். வெகுசிலர் இதுதாண்டா நான். இப்படித்தான் நான் இருந்தேன். இனிமேலும் இப்படித்தான் இருப்பேன் என தன்னை மிக மிக வெளிப்படையாக காட்டிக் கொள்கிறார்கள். இப்படியானவர்களை இந்த உலகம் நேர்மறையாக எதிர்கொள்வதில்லை. ‘அவனை அகங்காரம் பிடித்தவன் என்றோ,கொழுப்பெடுத்தவ, என்ன பேச்சு பேசுறா பாரு எனவோ,இவந்திமிர அடக்க எங்கிருந்தாவது ஒரு ஆள் வராமலா போயிரும்’ என்றோ பொறுமுகிறார்கள். இப்பிடி சகலரின் வெறுப்பிற்கும் ஆளான பூஞ்சை மனிதனின் கதையே அய்யம்பெருமாள் என்றொரு மனிதர். இவர் மிக வெளிப்படையானவர். தோற்றத்திலும் நடவடிக்கையிலும் பூச்சற்று இருந்த மனிதன். அதனாலேயே அவரை அறிந்த எல்லோரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானவர். அவருடைய வாழ்வின் பக்கங்களை எழுத்தாளர் உதயசங்கர் அவருடையா பெயரிலேயே அய்யம்பெருமாள் என்றொரு மனிதர் எனும் சிறுகதையாக எழுதியிருக்கிறார்.
எழுத்தாளர் உதயசங்கர் தமிழகத்தின் நவீன இலக்கியத்தின் தனித்த அடையாளமாக எல்லோராலும் பார்க்கப்படுகிற கோவில்பட்டியைச் சேர்ந்தவர்.கோவில்பட்டிக்கு சாகித்ய அகாடமி விருதினைக் கொடுவந்து சேர்த்த எழுத்தாளர்கள் படைவரிசையைச் சேர்ந்தவர். அவர் பின்னாளில் தீவிரமாக கவனிக்கத் துவங்கிய சிறுவர் இலக்கியத்திற்காக சாகித்ய அகாதமி விருதினைப் பெற்றவர். இளையோர் நாவல் எனும் வகையில் எப்போதும் எழுத்தாளர் உதயசங்கரின் ‘ஆதனின் பொம்மை’ எனும் நூலுக்குத் தனித்த இடமுண்டு. அந்த புத்தகத்திற்காகவே அவர் சாகித்ய விருதினையும் பெற்றார். கவிதைகள், மொழிபெயர்ப்புகள், தமிழில் தற்காலத்தில் கவனம் பெறத் துவங்கியிருக்கும் குறுங்கதைகள், கலாச்சார பண்பாட்டு உள்ளடக்கங்களைக் கொண்ட கட்டுரைகள் என இலக்கியத்தின் எல்லாத் துறைகளிலும் கவனம் செலுத்துபவர் எழுத்தாளர் உதயசங்கர் ,என்றபோதும் அவருடைய இலக்கிய பங்களிப்புகளில் மிக மிக தனித்தவை அவருடைய சிறுகதைகள்.

யாவர் வீட்டிலும், மறதியின் புதைசேறு துவங்கி புத்தாயிரத்தில் அவர் எழுதிய துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர் வரையிலுமாக நூற்றி மூன்று சிறுகதைகளை எழுதியிருக்கிறார். தமிழ் கிளாசிக்கல் சிறுகதைகளின் வரிசையில் இடம் பிடிக்கத் தகுதிபெற்ற பல சிறுகதைகளை எழுத்தாளர் உதயசங்கர் எழுதியிருக்கிறார். டேவிட் பெரிய நாயகத்தின் புல்லாங்குழல், மறதியின் புதைசோறு, பால்ய சிநேகிதி, தூரம், அடி, பயணம், ஆனைக்கிணறு தெரு, மீனிளின் நீல நிறப்பூ, அப்பாவின் கைத்தடி, கிருஷ்ணனின் அம்மா என பலதைகளை தமிழ்ச்சிறுகதைத் துறைக்கு கொடையென வழங்கியவர் எழுத்தாளர் உதயசங்கர். அவருடைய ஆகச்சிறந்த கதைகளில் தனித்தது அய்யம் பெருமாள் என்றொரு மனிதர் எனும் சிறுகதை.
எழுத்தாளரும் அவருடைய நண்பருமாக பேசிக்கொள்ளும் தன்மையில் கதையை வடிவமைத்திருக்கிறார். அவரும், அவருடைய நண்பரும் இலக்கியம், அரசியல்,ஊர் நடப்பு என சகலவற்றையும் பேசிக் கழிக்கும் பேச்சு சேக்காளிகள். அப்படியான பேச்சு வெளியினில்தான் அய்யம் பெருமாளை சந்திக்கிறார்கள் இருவரும். அதிலும் எப்படித் தெரியுமா? பிணமாக. அதிலும் குறிப்பாக அநாதைப்பிணமாக. ஒலைப் பாயில் சுருட்டி எடுத்து நால்வர் பிணமாக அய்யம்பெருமாளை சுமந்து செல்லும் காட்சி கதையை வாசித்துக் கடக்கும் ஒவ்வொரு நொடியிலும் வாசகனுடனே வருகிறது. அத்தனை அழுத்தமாக அந்தக் காட்சி வாசக வசமாகிறது. ஏன் தெரியுமா. அநாதைப் பிணமாகப் போகிறாரே அய்யம்பெருமாள் இவர் யார் தெரியுமா, என்றே கதை விரிவு கொள்கிறது. பார்ப்பதற்கு தோற்றத்தில் எந்த வசீகரமும் அற்றவர் அந்த மனிதன். நெடு நெடுவென வளர்ந்து கருத்துக்கிடக்கும் தோல்பொம்மை போலானவர். எப்போதும் திறந்த வாயை மூடமுடியாத அளவிற்கு பல் எத்திக்கிடக்கும் அவருக்கு. தன்னுடைய போதாமைகள் இவை என புரிந்து கொண்ட பலரும் எல்லோரையும் தனக்கு எதிரிகளாக்கி விடுகின்றனர்.
ஆனால், அவருடைய மனைவியோ அதற்கு நேர் எதிராக அழகே வடிவாக அமைந்தவர்..இருவருக்கும் கல்யாணமாகி எட்டு வருசமாக குழந்தையும் இல்லை. பிறகென்ன வாயத் திறந்தாலே வசவுதான். தெருவில் ஒரு ஆம்பளைப் பையனையும் நடக்க விடமாட்டாரு அய்யம் பெருமாள். ஒரே கெட்ட கெட்ட வார்த்தையில வசவுதான். ஆனா அந்த அம்மா அய்யம் பெருமாளைப் போல இல்லை. எல்லோரிடமும் அன்பும் பிரியமுமாகப் பழகுவார். சின்னப் பையன்கள் அய்யம்பெருமாள் இல்லாத நேரத்தில் அந்த டீக்கடையைச் சுற்றி விளையாடிக் கொண்டிருப்பார்கள். கதையைப் பேசிக் கொண்டிருக்கும் இருவரும் அங்கே விளையாடிக் கொண்டலைந்தவர்களே. அய்யம்பெருமாள் கோபக்காரர் மட்டுமல்ல, கருமியும்கூட. பத்து பைசா யாருக்கும் ஈய்ய மாட்டாரு. அதற்கு எழுத்தாளர் கண்டுபிடிக்கும் காரணமும்கூட முக்கியமானது. அய்யம்பெருமாள் அவருடைய குடும்பத்தில் மூன்று அண்ணன்களுக்குப் பிறகு நாண்காவது பிள்ளை. அதிலும் அண்ணன்களால் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டவர். புறக்கணிப்பின் வலி எளிதில் ஆறுமா?. புறக்கணிப்பது மட்டுமல்ல, அய்யம்பெருமாளை அவமானப் படுத்துவதையும் குறைவில்லாமல் செய்து வந்தார்கள் அவருடைய அண்ணன்கள். எதுவெல்லாம் மனதின் பக்கங்களில் தடுப்பேறி,தடுப்பேறி அவரை இப்படி ஆக்கியிருக்கிறது என்பதும் புரிதலுக்குள்ளாகிறது. புறக்கணித்த உறவுகளை, சமூகத்தை போட்டி போட்டு தோற்கடிக்கவே சொத்துக்களைச் சேர்க்கத் துவங்கினார்.

எழுத்தாளரின் நண்பர் தான் அய்யம்பெருமாளை இருபது வருடம் கழித்து ஊர்க்கோவிலில் பார்த்த காட்சியைச் சொல்கிறார். அதைக் கேட்பதற்கே கவலையாகத்தான் இருக்கிறது. கோவில் வாசலில் தேங்காய் விடலையைப் பொறுக்கித் திங்க அங்கு சுற்றிக் கொண்டிருக்கும் சிறுவர்களோடு போட்டி போட்டு தெருப் புழுதியில் புரண்டு எழுந்திருக்கிறார் அவர். அத்தோடு அந்த சிறுவர்களை காதால் கேட்க முடியாத வசவுகளால் திட்டவும் செய்திருக்கிறார். அந்த வசவுகள்தான் நண்பருக்கு அது அய்யம்பெருமாள் என்பதைக் காட்டியிருக்கிறது. எப்பிடி வைராக்கியமா வாழ்ந்த மனுஷன் இப்பிடி கோட்டிக்காரனா போயிட்டாரே என வருத்தப்பட்டு இருவரும் கலைகின்றனர். கதை இத்துடன் முடியவில்லை. இனிமேல்தான் கதையே துவங்குகிறது.
என்னதான் நடந்திருக்கும் என நண்பர்கள் இருவரோடு கதை வாசித்துக் கொண்டிருக்கும் எல்லோருமே யோசிக்கிறோம். எழுத்தாளர் கதையின் முடிச்சை நண்பரின் துணை கொண்டு மெதுவாக அவிழ்க்கிறார். அய்யம்பெருமாளின் மனைவி அவருடைய டீக்கடைக்கு பால் ஊத்த வந்த பால்க்காரனோடு தலைமறைவாகியிருக்கிறார். போகும் போது அந்த அம்மா தனியாகப் போகவில்லை. அதுவரையிலும் அய்யம்பெருமாள் சேர்த்து வைத்திருந்த பணம் நகை என எல்லாவற்றையும் கையோடு எடுத்துக்கொண்டு போய்விட்டார். அய்யம் பெருமாளுக்கு புத்தியும், காலும் நிலை கொள்ளவில்லை. ஊர் ஊராக நாடோடியைப் போல அலைகிறார். நித்தமும் தேடி அலைவதும், எங்கும் தட்டுப்படவில்லை என திரும்பி வருவதும் தொடர் கதையாகவே நீடிக்கிறது. கீகாட்டில் ரெண்டுபேரும் டீக்கடை நடத்துகிறார்கள் எனும் செய்தி அவருக்கு கிடைக்கிறது. அவளிடம் எதுக்காக இப்பிடி செஞ்ச நீ என ஒரே ஒரு கேள்வி கேட்க வேண்டும். அந்த ஒரு கேள்வியை நேருக்கு நேராக பார்த்து கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்பிடி அலையோ அலை என அலைந்து கொண்டேயிருக்கிறார் அய்யம்பெருமாள்.
காலையிலேயே கிளம்பியவரின் மனதிற்குள் இருவரும் தனக்கிழைத்த துரோகத்தின் காட்சிகள் படமாக ஓடிக்கொண்டேயிருக்கிறது. ஊரை நெருங்கி அவர்களுடைய இருப்பிடத்திற்கு மிக அருகில் வந்துவிட்டார். தூரத்தில் இருந்து பார்க்கிறார். இவருடைய டீக்கடைக்கு பால் ஊற்றிய பால்க்காரன் அங்கே டீ ஆத்திக் கொண்டிருக்கிறான்.பத்து வருசமா தேடி அலைஞ்ச துக்கம் அய்யம்பெருமாளுக்கு தொண்டைய அடைக்குது. விடக்குடாது இவுங்க ரெண்டு பேரையும் எனும் வைராக்கியம் அவருக்கு மேலேறி வருகிறது. கடையை நெருங்கி விட்டார். ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என எல்லோரும் திகைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டிற்குள் இருந்து எட்டு வயது சின்னப்பெண் வெளியே வருகிறாள். இவரும் அந்தப் பெண் குழந்தையைத்தான் பார்க்கிறார்.
இவருக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. அச்சு அசலாக அவருடைய மனைவியைப் போலான தோற்றம் குழந்தைக்கு. கையில் அந்தப்பெண் கர்சீப்பில் எதையோ பொதிந்து கொண்டு வருகிறாள். வந்தவள் அந்தப் பொதிமூட்டையை அய்யம்பெருமாளின் முன் திறக்கிறாள். அவருடைய வீட்டில் இருந்து எடுத்துப் போன பணமும் நகையுமே அந்த விரிப்பில் கிடக்கின்றன. அய்யம்பெருமாள் எதுவும் சொல்லவில்லை. எதுவும் கேட்கவில்லை. அந்த குழந்தையின் தலையில் கைவைத்து ஆசீர்வதிக்கிறார். ‘நல்லா இரு மகளே’ என வாழ்த்திய மறுநொடியிலேயே அங்கிருந்து கிளம்பியும் விட்டார். அந்த வீட்டின் சன்னலோரத்தில் இருந்து அழுது விசும்பும் சத்தம் கேட்கிறது. அய்யம்பெருமாள் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டேயிருக்கிறார். மனிதன் மகத்தானவன் என்று கதையை முடிக்கிறார் எழுத்தாளர் உதயசங்கர்.
மனிதன் மனிதனாக வாழ்வதற்கான நொடித்துளிகளை வாழ்க்கை எப்போதும் அவன்முன் திறந்து வைத்துக்கொண்டேதான் இருக்கிறது. தருமியாக வாழ்ந்தவன். துரோகத்தை எதிர்கொண்டே தீர்வது என உறுதியாக இருந்தவனின் மனதிற்குள்தான் அன்பும் வற்றாத கருணையும் முகிழ்த்து வந்திருக்கிறது. மனிதன் மகத்தானவன்தான். அவனுடைய கீழ்மையான குணக்கேடுகளையும் சேர்த்தே.
– ம.மணிமாறன் (தொடரும்)
இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.



