ஒரு கதை 25:மனம் சாய் தாய்மடி

மகிழ்வும், துயரமும் நிரந்தரமில்லை. ஒருதுளிநேரத்து மன உணர்வுதான் அவையாவும். பலரும் இந்த மன உணர்வுகளைத் தனக்குள் தேக்கி தேக்கி வைத்துக் கொள்ள பகீரதப் பிரயத்தனப்படுகிறார்கள். அவர்களுடைய மனத்திரையில் நகரும் காட்சிகளாக எப்போதும் பலருக்கு துயர நிகழ்வுகளே இருந்து வருகிறதே ஏன்? சந்தோஷத்தில் லயித்துக் கடந்துவிடுகிற மனதினால் சின்ன சின்ன வலிதரும் நிகழ்வுகளை கடந்து நகர்ந்திட முடிவதில்லை. தினமும் தன்னைப் பார்த்துச் சிரிக்கும் எதிர்வீட்டு மனிதர் இன்று இப்படி முகத்தை உம் என ஏன்வைத்துக் கொண்டார். ஒரு வேளை நாம் எதுவும் தவறிழைத்திருப்போமா எனத் தடுமாறுகிறது மனம். இந்த சின்ன சிக்கலில் மட்டுமல்ல. நாளைய பொழுதினை நகற்றி மேலேறிட என்னதான் செய்யப்போகிறோம் என நித்தமும் தடுமாற்றத்தைச் சுமக்க வைக்கிறது

சமகாலப் பொருள்சார் வாழ்வு. இப்படியான கணங்களைக் கடந்து தெளியும் வாய்ப்புகள் இந்த உலகில் இருக்கிறதா?. இந்தப் புள்ளியில் தான் அதீத பக்தி முளை விடுகிறது. என் பிரச்னையை தீர்க்கும் அருமருந்து கடவுள்களிடம்தான் இருக்கிறது என நம்புகிறார்கள் மனிதர்கள். இதில் எந்த மதத்திற்கும் பேதமில்லை. கடவுளிடம் சரணாகதி அடைவதே இறுதித்தீர்வு என எல்லோரும்தான் நம்புகிறார்கள். இத்தனை பகுத்தறிவு பிரச்சாரம் நிகழ்ந்து நடந்து கொண்டே இருக்கும்போதும், கூட்ட நெரிசலில் நெரிபடும் கடவுளர்களின் ஆலயங்கள் எதன் குறியீடு. மனித குலத்தை அன்றாடத்தின் அவஸ்தைகள் சுற்றி வளைத்து மூச்சை முட்டச் செய்கிறது என்பதுதானே யதார்த்தம். கடவுளும்கூட கவலைகளை அகற்றிடும் தற்காலிக ஏற்பாடுதான் என்பதை வாழ்க்கை மனிதர்களுக்கு கற்று தந்து கொண்டேயிருக்கிறது.
சிலர் ஆன்மீக விடுதலை என சாமியார்களின் மடங்களை நோக்கிப் போகிறார்கள். இது தற்காலிக துயரங்களில் இருந்து தப்பிச் செல்வதற்கான உடனடி ஏற்பாடாக அவர்களுக்குத் தோன்றுகிறது. இன்னும் வெகுசிலர் நீண்ட பயணங்களைத் திட்டமிட்டு பயணித்துத் திரும்புகிறார்கள். இசையில் தன்னைக் கரைத்துக் கொள்வதால் மனது லேசாகிறது என நம்புகிறவர்கள் இங்கு நிறைய உண்டு. இது தற்காலிக தீர்வினை மனதிற்கு வழங்கவே செய்கிறது. இப்படியான மனிதக்கூட்டத்தின் குறியீட்டு அடையாளமே மைதானத்து மரங்கள் எனும் சிறுகதையில் வருகிற அந்த மனிதன்.

எழுத்தாளர், கவிஞர் கந்தர்வனின் ‘மைதானத்து மரங்கள்’ எனும் கதை அவருடைய தலைசிறந்த சிறுகதை. கந்தர்வன் தன்னுடைய இலக்கியக் கொள்கையை முற்போக்கு என பகிரங்கமாக அறிவித்தவர். அதற்கு சாட்சியாக தன்னுடைய கவிதைகளை நிறுத்தியவர். அவருடைய கவிதைகள் உரத்த குரலில் உண்மையைச் சொல்பவை. பாரதியின் வசன கவிதைகளின் நீட்சியான வானம்பாடிகளின் தொடர்ச்சியே அவருடைய கவிதைகள். அவருடைய கவிதைகளின் தொனிக்கு நேர் எதிரானது அவருடைய சிறுகதைகள். சன்னமான குரலில் மனதோடு பேசும் மந்திரச்சாவிகளே கந்தர்வனின் கதைச்சொற்கள். கந்தர்வன் எண்பது,தொண்ணூறுகளின் இலக்கிய வாசகர்களின் மனதினில் இன்றும் அவருடைய கதைகளின் வலிமையால் நிறைந்து நிற்பவர்.

பொது இலக்கிய உலகம் என ஒன்றைக் கட்டமைத்துக் கொண்டு முற்போக்கு படைப்பாளிகளை தொடர்ந்து புறந்தள்ளும் போக்கு இன்றுவரையிலும் இருந்து வருகிறது. இவர்களுக்கு இலக்கியம் எழுத வராது. இவர்கள் தங்களுடைய படைப்புகளில் கொள்கைப் பிரச்சாரத்தையே முன் வைக்கிறார்கள் எனச் சொல்லும் பலரும் கந்தர்வனின் கதைகளை அப்படி விலக்கியதில்லை. கதைகளை கலையாக்கும் வித்தைகளின் சாட்சியாக இன்றுவரையிலும் கந்தர்வனின் கதைகள் இருந்து வருகின்றன. இலக்கிய அமைப்புகளை பொறுப்பேற்று நடத்துகிறவர்களின் கைகளில் சிக்காது நழுவிடும் நூதனம் இலக்கியம் எனும் சொத்தை வாதத்தை பொய்யாக்கியவர் எழுத்தாளர் கந்தர்வன். அவருடைய சிறுகதைகள் சாகாவரம் பெற்றவை. அவருடைய அமரத்துவமான கதைகளில் ஒன்றே ‘மைதானத்து மரங்கள்’.

பளிச்சென்று முதல்வரியிலேயே கதையை நகர்த்திச் செல்வது எழுத்துக் கலைஞர் கந்தர்வனின் எழுதுதல் முறை. ‘மைதானத்து மரங்கள்’ கதைக்குள் வருகிற மைதானம் கதை சொல்லியின் மனதைப் போல உலக நடப்புகள் எதிலும் பட்டுக்கொள்ளாமல் ஊருக்கு வெளியே தனித்து ஒதுங்கி நிற்கிறது. மைதானமும் இவரும் ஒன்றுதான். ஒருவிதத்தில் இரண்டும் ஒன்றாகிப் போனவர்கள் என கதையின் முதல்வரியிலேயே சொல்லிவிடுகிறார். ஒருவிதத்தில் அந்த மைதானத்திற்கு அருகில் இருக்கும் தனிவீட்டுக்காரர் அவர் என ஊர் சொல்லும்போது அவருக்கு பெருமையாகத்தான் இருக்கும். இந்த மைதானத்திற்கு அழகே அதன் பிரம்மாண்டமான விரிவு மட்டுமல்ல. அதன் ஓரங்களில் பரந்து விரிந்து நிற்கும் மரங்கள்தான். அதனை மரங்கள் எனச் சொல்ல முடியாது. அவையாவும் மைதானத்தில் நிழலை நிறைத்து குளிரூட்டிடும் விருட்சங்கள். காலை நடைபயணக்காரர்களின் சொர்க்கம் அது. ஊர் இளவட்டங்கள் எல்லாம் ஒதுங்கி நின்று தன்னுடைய சகல ரகசிய வேட்கைகளையும் பகிர்ந்து கொள்ளும் இடமாகவும் மரநிழல் இருந்து வருகிறது.

எப்போதிலிருந்து தாய்மடியென இந்த மர நிழலில் தஞ்சமடைகிற இந்தப் பழக்கம் உருவாகியது என்று தனக்குள் விடை தேடிப் பார்க்கிறார். எட்டாம் வகுப்பு படித்த நாளில்தான் முதன் முதலாக அந்த குளிர் நிழலில் அமர்ந்து கோபம் தனிக்கும் வழக்கம் வந்திருக்கிறது. பள்ளிக்கூடங்களில் அப்போதெல்லாம் இலவசக்கல்வியில்லை. பீஸ் கட்டனும். இரண்டு மாதமாக பீஸ் கட்டவில்லை. தினமும் பீஸ் கட்டாதவர்களின் பெயரை வாசித்து வகுப்பறையில் நிற்க வைப்பார்கள் வாத்தியார்கள். சக மாணவர்கள் பீஸ் கட்ட முடியாமல் நிற்பவர்களை எளக்காரமாக பார்ப்பார்கள். உயிர் போய் உயிர் வரும். இவரும் பீஸை அவருடைய தந்தையாரிடம் கேட்டு கேட்டு அலுத்துப் போனார். நித்தமும் எரிச்சலூட்டும் நிகழ்வில் இருந்து வெளியேற வழிவகை தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த நாள் ஒன்றில் வீட்டிற்குப் போகாமல் மைதானத்திற்கு வந்தார். வெயில் கொழுத்தும் உச்சிவேளையில் மைதானத்து மரங்களின் குளிர் நிழலில் அமர்ந்தார். அங்கேயே தூங்கியும் போனாராம்.

சக மனிதர்களுக்கு முன்பாக இல்லாமையின் பொருட்டு அவமானப்பட்டு நிற்பது எவ்வளவு பெரிய துயரம். துயரத்தில் இருந்து தற்காலிக விடுதலை பெறுவதற்கான வழிவகைகளையும் வாழ்க்கைதான் கற்றுத் தருகிறது. அதன்பிறகு எப்போதெல்லாம் மனம் சஞ்சலமும் அவஸ்தையும் படுகிறதோ அப்போது மைதானத்து மரநிழலில் தஞ்சமடைவது அவருக்கு வழக்கமாகிப் போனது. மனைவி நச்சுப் புடுங்குகிற போது மட்டுமல்ல, குழந்தைகள் அவர்களுடைய எளிய தேவைகளைக் கேட்கிறபோது, இதைக்கூட நம்மால் செய்ய முடியவில்லையே என மனம் பேதலிக்கும்போதும் மமரநிழலில்தான் தஞ்சம். அலுவலகத்தில் உயர் அதிகாரி திட்டினால்கூட பொசுக்குன்னு போய் மைதானத்து மரங்கள்கிட்ட சரணடைஞ்சிருவாரு. எதுக்குத்தான் இப்பிடி மரமே கதின்னு கெடக்கீரோ தெரியல, என்னைய கட்டி வைச்சதுக்குப் பதிலா பேசாம உமக்கு மரத்தையே கட்டி வைச்சிருக்கலாம்னு அவரு சம்சாரமும் சொல்லி சொல்லி அலுத்துப் போச்சு. ஆபீஸ், வீடு, மைதானத்து மரங்கள்ன்னு சின்ன வட்டமா அவருடைய வாழ்க்கைய சுருக்கி வைச்சுக்கிட்டாரு. இதுதான் கதைன்னு வாசிச்சிக்கிட்டிருக்கிறா எல்லோரையும் நம்பவச்சுட்டு அடுத்த வரியில அசாத்தியமா வேறு பக்கம் திருப்புற வித்தைய தன்னுடைய எல்லாக் கதைகள்லயும் செய்யிறவரு எழுத்தாளர் கந்தர்வன். ‘மைதானத்து மரங்கள்’ கதையும் வேற பக்கம் நகருது.

தியேட்டர் கட்டுவதற்காக அந்த இடத்தை ஊர் பெரிய புள்ளி ஒருத்தர் வாங்கிய பிறகு என்ன நடக்கும். அந்த மரங்களையெல்லாம் வெட்டி மைதானத்தை மூளியாக்கிறாரு. இருந்த நிழலும் போச்சு. குளிர்பிரதேசமாக விரிந்து கிடந்த மைதானம் வெம்பரப்பா கிடக்கு. வெட்டி வெட்டி அடுக்கப்பட்ட பெருத்த மரத்தூர்களப் பார்க்கவே முடியல. மனசு தடுமாறுனா தாய்மடியென தலைவைக்கும் பரந்து விரிந்த மைதானம் வெம்பரப்பாக போய்விட்டதே இனி நான் எங்கு போவேன் ஏன் கலங்கி நிற்கிறார். அப்போது அவருடைய மனைவி பேசுவதாக கந்தர்வன் உலகிற்கே சொல்கிறார். அதுவே இந்தக்கதையின் ஆதார சுருதி..”இருட்டி வெகுநேரம் கழித்து வீட்டிற்கு வந்தான். உள்ளே நுழைந்ததும் மனைவி சொன்னாள்.

“இனிமேலாச்சும் ஊருல ஒவ்வொருத்தரும் நம்மள மாதிரியும், நமக்கு மேலேயும் எப்பிடி கஷ்டப்பட்டு கிடக்கிறாங்கன்னு அலைஞ்சு திரிஞ்சு பாருங்க”.மறுநாள் காலையில் மைதானத்து ஓரச்சாலையில் தன்னையொத்த சனங்களைத் தேடிப் பார்த்திட அவனுடைய வாழ்விலேயே முதல்முறையாக கைவீசி நடந்து கொண்டிருந்தான். மைதானத்தை ஒட்டி மரங்கள் திண்டு முண்டுமாய் உயிரற்றுக்கிடந்தன. அவர் உயிரோடு அவைகளைத் தாண்டி நடந்தான்.
..
ஒரு கதைக்குள் மூன்று முடிச்சுகள் அத்தனையும் கச்சிதமானவை. துயருறும் மனிதர்கள் அடைக்கலமாக இடம் தேடும் உளவியலைப் பேசும் கதை. சட்டென மரங்கள் வெட்டப்பட்டு வெறுமையாக நிற்கும் போது அது சுற்றுச்சூழல் குறித்த கதைபோல வடிவம் பெறத் துவங்குகிறது. எப்பா நீ உனக்குள்ளேயே சுருங்கிக் கிடக்காதே, அக்கம் பக்கம் பார். உலகம் விரிந்து பரந்தது என புது வடிவம் எடுக்கிறது.இதுவே மைதானத்து மரங்களை உலகின் தலை சிறந்த கதைகளில் ஒன்றாக ஆக்கியிருக்கிறது.
ம.மணிமாறன் (தொடரும்)

இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *