
உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு பெ.சண்முகம், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்பொதுவெளியில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரசியலில் நாகரிகமாகப் பேசுவது மிகவும் அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.
வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சையில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வரம்பு கடந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை விமர்சனம் செய்து பேசி இருப்பது கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும். ‘யாகாவராயினும் நா காக்க’ எனும் குறள் மொழியை ,எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் உள்ள உதயநிதி கடை பிடிக்க வேண்டும். அதை விடுத்து முதலமைச்சர் மீது மலிவான இழி மொழிகளை வீசுவது அவர் வகித்து வரும் பொறுப்பிற்கு உகந்தது அல்ல.
அரசுக்கு இடையூறு செய்வதற்கும், அரசியல் நடத்துவதற்கும் காவிரி பிரச்னையைப் பயன்படுத்தி திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு, நாலாந்தர பேச்சாளர் பட்டியலில் அவரை சேர்த்து இருக்கிறது என்பதை அவர் உணர வேண்டும். காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் குரல் அரசியல் எல்லைகளைத் தாண்டி ஒன்றுபட்டு ஒலிக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட முடியும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.



