கனிம வளங்களை அரசே வெட்டி எடுக்க வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்

கனிம வளங்களை அரசே வெட்டி எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கனிம வளங்களை தமிழ்நாடு அரசே வெட்டி எடுத்து விற்பனை செய்ய வேண்டும். அதன் மூலமாக அரசு பெரும் வருவாயை ஈட்ட முடியும் என பல நாட்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. மணல், கிரானைட், கருங்கல் போன்ற கனிம வளங்களை தமிழக அரசே நேரடியாக வெட்டி எடுத்து விற்பனை செய்வதன் மூலமாக பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும். இந்த புதிய வாய்ப்புகள் சம்பந்தமாக அரசு யோசிக்க வேண்டும். மக்கள் மீது எந்த சுமைகளையும் ஏற்றாமல் அரசுக்கான வருவாயை திரட்டுவது எப்படி என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும். ஆளுநர் உரையிலும் இது சம்பந்தமாகதான் அவர்கள் கூறியிருந்தனர்.

கடந்த ஆட்சியில் பல்வேறு வழிகளிலும் மடைமாறிய அரசு வருவாயை இனி கருவூலத்திற்கு கொண்டு வருவோம் என தற்போது கூறியுள்ளார்கள்.இது எந்த வகையில் என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை. இது குறித்து நிதிநிலை அறிக்கையில் தெளிவுபடுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. எல்லா ஆட்சிக்காலத்திலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. காவல்துறையின் அத்துமீறல், சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக, பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள் போதையில் இருந்ததாக தான் அனைத்து விதமான எஃப்ஐஆர்களிலும் கூறப்படுகிறது. போதைக் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஆளுநர் உரையில் போதை இல்லா தமிழ்நாடு என்ற முழக்கத்தை முதல்வர் விடுத்திருக்கிறார். அதை 100 சதவீதமாக வெற்றிகரமாக நிறைவேற்றினாலே குற்றங்களை குறைக்க முடியும். சமூகத்திலும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அதிமுகவிலிருந்து எம்எல்ஏக்கள் நான்கு பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தபோது, இது ஆரோக்கியமற்ற அரசியல் என்று தெரிவித்திருந்தேன். இரண்டாவது வாக்களித்த மக்களை மதிக்காமல் இருபது நாட்களுக்குள் ராஜினாமா செய்வதெல்லாம் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் விரும்பி ராஜினாமா செய்திருந்தாலும், அவர்களை தவெக கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கக் கூடாது. இதை ஏற்கெனவே வெளிப்படையாக சொல்லி இருக்கிறோம். இது போன்ற விஷயங்களை ஊக்குவிக்கக் கூடாது” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *