
தவெக கூட்டணிக்கு தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி என பிரவீன் சக்கரவர்த்தி பெயர் சூட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் ஜூன் 18-ம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் அதிக எம்எல்ஏக்களைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம், தனக்கான ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுத்துள்ளது.
இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி பெயரை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்க வேண்டும் என்று சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்து குரல் கொடுத்து வந்தவர் பிரவீன் சக்கரவர்த்தி. அவருக்கு மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பை தமிழக வெற்றிக் கழகம் அளித்துள்ளது.
.இந்த நிலையில் பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் எம்.பி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன் என் மீது நம்பிக்கை வைத்த ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் விஜய்- க்கு மனமார்ந்த நன்றி. தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்..



