திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் ரூ.4,000 லஞ்சம்: 5 பேர் சஸ்பெண்ட்

திருச்செந்தூர் கோயிலில் விஐபி தரிசனம் என்ற பெயரில் அறநிலையத்துறை அமைச்சரிடம் அர்ச்சகர் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சரான ரமேஷ் பொறுப்பேற்ற பின்பு கள ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோயிலுக்கு ஆய்விற்கு சென்றிருந்தார். பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அன்னதான கூடத்திற்கு சென்று உணவின் தரத்தை ஆய்வு செய்தார். அப்போது கோயிலில் இருந்த அர்ச்சகர் ஒருவர் 4,000 ரூபாய் தந்தால் விஐபி தரிசனத்திற்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார்.

இதையடுத்து ஜிபே மூலம் பணத்தை செலுத்திவிட்டு அமைச்சர் ரமேஷ் தரிசனத்திற்கு சென்றுள்ளார். வந்தவர் அமைச்சர் என்பது தெரியாமல் அர்ச்சகர் வசூல் வேட்டை நடத்தியிருக்கிறார். முகக்கவசம் அணிந்து வந்ததால் அங்கிருந்த பாதுகாவலர்கள் முதல் அதிகாரிகள், ஊழியர்கள் வரை யாரென்று தெரியவில்லை. இதனால் விரைவு தரிசனத்திற்கு வசூல் வேட்டை நடத்தியுள்ளனர். பக்தரை போல கோயிலுக்கு வந்ததால் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. அதன்பிறகு ”நான் தான் அறநிலையத்துறை அமைச்சர்” என்று சொன்னதும் அர்ச்சகர் ஆடிப் போய் விட்டார். சம்பந்தப்பட்ட அர்ச்சகர் மீதும், கோயில் நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

லஞ்சம் வாங்கியது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அர்ச்சகர், வாயிற்காவலர்களாக பணியாற்றிய முன்னாள் ராணுவவீரர்கள் 2 பேர் என மூன்று பேர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் கட்டணமில்லா முடிக்காணிக்கை செலுத்தும் இடத்தில் பக்தர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்ட 2 ஊழியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து கோயிலில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு நடத்தி வருகிறார். அமைச்சரிடமே கோயில் அர்ச்சகர் லஞ்சம் வாங்கிய சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *