ஆன்லைன் மோசடியால் உயிரை இழந்த வாலிபர்: சடலத்துடன் பொதுமக்கள் சாலைமறியல்

ஆன்லைன் மோசடியால் உயிரை இழந்த வாலிபர்: சடலத்துடன் பொதுமக்கள் சாலைமறியல்

நத்தம் அருகே பண மோசடி சம்பவத்தில் பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவில் மர்மம் இருப்பதாக சடலத்தை நடுரோட்டில் வைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மேலூர், அலங்காநல்லூர் பகுதிகளில் எஃப்க்யூஎல் செயலி வாயிலாக கிரிப்டோகரன்சி மூலம் பணத்தை இரட்டிப்பாக்கலாம் என நடைபெற்ற ஆன்லைன் மோசடியில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் கோடிக்கணக்கில் பணத்தைப் பறிகொடுத்துள்ளனர். மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பலரும் புகார் அளித்துள்ளனர். ஒரே குடும்பத்தில் ஒருவருக்கொருவர் தெரியாமல் பணத்தை முதலீடு செய்து இழந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் 6 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, இதுவரையில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்து மீது பரிவர்த்தனை செய்ய தடைவிதித்து பதிவுத் துறைக்கு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த மோசடி வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பண மோசடி சம்பவத்தில் பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே காசம்பட்டியைச் சேர்ந்தவர் ராசு(26). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு எஃப்க்யூஎல் ஆன்லைன் நிறுவனத்தில் பணத்தைச் செலுத்தியுள்ளார். மேலும் இவர் தனக்கு தெரிந்த சிலரை இந்த நிறுவனத்தில் பணம் கட்டச் சொல்லி சேர்த்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் காசம்பட்டி செவக்காடு பகுதியில் உள்ள ஓரு மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து கிராம மக்கள் இறந்தவரின் சடலத்தை தூக்கி கொண்டு வந்திபட்டிக்கு இன்று(ஆகஸ்ட் 31) கொண்டு சென்றனர். தொடர்ந்து ராசு சாவில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி ராசு உடலை நடுரோட்டில் வைத்து அப்பகுதி மக்கள் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் கொலை குற்றவாளிகளை கண்டு பிடிக்க கோரியும், பணத்தை ஏமாற்றி சென்ற சிலரை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், துணை கண்காணிப்பாளர் சங்கர், தாசில்தார் டேனியல் பிரேம்குமார், இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நாளை(செப்டம்பர் 1) மாலைக்குள் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறினர். ஆனால், அதை மக்கள் ஏற்காமல் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் பாதுகாப்புடன் ராசு உடலை ஏற்றி கொண்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஆத்திரமடைந்த சிலர் போலீஸார் மீதும், வாகனங்கள் மீதும் கற்களை வீசி தாக்கினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. மேலும் இந்த மறியலால் நத்தம்- மதுரை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *