
கடந்த ஆண்டைவிட டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொடிய வைரஸ் தொற்றுகளான டெங்கு, பன்றிக் காய்ச்சலின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் பாதிப்பு அதிகமாக இருப்பதை பொது சுகாதாரத்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ம் தேதி வரையிலான நிலவரப்படி, 13,573 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 1,722 பேரும், பிப்ரவரி மாதம் 1,322 பேரும், மார்ச் மாதம் 1,228 பேரும், ஏப்ரல் மாதம் 1,201 பேரும், மே மாதம் 1,062 பேரும், ஜூன் மாதம் 1,384 பேரும், ஜூலை மாதம் 2,339 பேரும், ஆகஸ்ட் மாதம் 3,315 பேரும்
பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் 1,880 பேர் என்றிருந்த பாதிப்பு இந்த ஆண்டில் 2,339 பேராக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1,832 என இருந்த பாதிப்பு எண்ணிக்கை, இந்த ஆண்டில் 3,315 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில்தான் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஜனவரி மாதத்தில் இருந்து ஆகஸ்ட் வரையிலான தமிழ்நாடு மொத்த டெங்கு பாதிப்பான 13,573 என்ற எண்ணிக்கையில் சென்னையில் மட்டும் 2,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கடுத்ததாக கோவையில் 1,999 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் சுமார் 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் தமிழ்நாட்டில் மட்டும் 1,558 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் பன்றி காய்ச்சல் பாதிப்பு பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து பன்றிக் காய்ச்சல் பாதிப்பை ஒப்பிடும்போது, 2024, 2025-ம் ஆண்டை விட நடப்பாண்டில் பாதிப்பு அதிகரித்து இருப்பது புள்ளிவிவரத்தின்படி தெரிய வந்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு 1,777 பேரும், 2025-ம் ஆண்டு1,288 பேரும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சூழலில் இந்த ஆண்டில் 1,791 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ஜூன், ஜூலை, ஆகஸ்டில் பல மடங்கு பாதிப்பு உயர்ந்திருக்கிறது. உதாரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் 46 ஆக இருந்த பன்றிக் காய்ச்சல் பாதிப்பு, இந்த ஆண்டில் 645 ஆக அதிகரித்துள்ளது. இந்த இரண்டு நோய்களும் மனிதனின் உடல்நலத்தைப் பாதிப்பதோடு மட்டுமின்றி, சமூகத்தில் ஒரு சுகாதார நெருக்கடியையும் ஏற்படுத்துகின. எனவே, உரிய விழிப்புணர்வு, சுற்றுப்புறத் தூய்மை, கொசு ஒழிப்பு மற்றும் அரசின் தடுப்பு நடவடிக்கைகளே இவற்றின் பிடியிலிருந்து மக்களைக் காப்பதற்கான அத்தியாவசிய தேவைகளாக உள்ளன. மேலும், தனிமனித நடவடிக்கை, சுகாதார பாதுகாப்பு போன்ற முன்னெச்சரிக்கை முன்னெடுப்புகளை மிகுந்த கவனத்தோடு மக்கள் பின்பற்ற வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.



