மதுரையில் ரூ.2 கோடி தீபாவளி சீட்டு மோசடி: எஸ்.பியிடம் கிராம மக்கள் புகார்

தீபாவளி சீட்டு நடத்தி விட்டு தலைமறைவாகியுள்ள பி.கீதா

மதுரையில் ரூ.2 கோடி தீபாவளி சீட்டு மோசடி செய்த பெண் குறித்து கருவனூர், மந்திகுளம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எஸ்.பியிடம் மனு கொடுத்துள்ளனர்.

மதுரை கருவனூர் ஊராட்சியைச் சேர்ந்த கருவனூர், மந்திகுளம் கிராமங்களைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (அக்டோபர் 9) புகார் அளித்துள்ளனர். அந்த மனுவில், மதுரை கருவனூர் கிராமத்தில் வசிக்கும் ஆர்.பவுன் தாஸ் என்பவரின் மனைவி பி.கீதாவிடம் தீபாவளி சீட்டு, மாதச்சீட்டு, ஏலச்சீட்டு கட்டினோம். அவரிடம் 54 வாரத்திற்கான தொகையை செலுத்தியுள்ளோம். அக்டோபர் 2-ம் தேதி நாங்கள் கட்டிய பணத்தைத் தருவதாக சொன்ன பி.கீதா குடும்பத்தாருடன் தலைமறைவாகி விட்டார்.

இது தொடர்பாக சத்திரபட்டி காவல் நிலையத்தில் அக்டோபர் 4-ம் தேதி புகார் அளித்தோம். எந்த விசாரணையில் எங்களிடம் நடத்தவில்லை. சுமார் 2 கோடி ரூபாய் அளவில் நடைபெற்றுள்ள தீபாவளி சீட்டு மோசடி குறித்து தாங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுப்பதுடன், எங்களுக்கு உரிய நிவாரணத் தொகையை பெற்றுத்தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த மனு கொடுத்த கருவனூர், மந்திகுளம் கிராம மக்கள் கூறுகையில்,“ கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளி சீட்டு நடத்திய பி.கீதாவை நம்பி தற்போது ஏமாந்து விட்டோம். சில நாட்களுக்கு முன்பு அனைவரின் பணமும் தந்து விடுகிறேன் என்றும், என்னிடம் பணம் உள்ளது என்றும் வாய்ஸ் ரெக்கார்டு அனுப்பினார். ஆனால், அதற்கு அடுத்த நாள், வீட்டைப்பூட்டி கணவருடன் தலைமறைவாகி விட்டார். அவரது செல்போனை தொடர்பு கொண்டால், சுவிட் ஆஃப் என்று வருகிறது. நாங்கள் மட்டுமின்றி எங்கள் குடும்பம், உறவினரையும் இந்த தீபாவளி சீட்டில் சேர்த்து விட்டுள்ளோம். இப்போது அவர்கள் எங்களிடம் அந்த பணத்தைக் கேட்டு சண்டை போடுகின்றனர்.

இதனால் பலருடைய குடும்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தீபாவளி சீட்டு மட்டுமின்றி ஏலச்சீட்டு போட்டவர்களுக்கும், தவணைக்காக பணம் கட்டியவர்களுக்கும் என எங்கள் கிராமத்திலேயே 400-க்கும் மேற்பட்டோர் ஏமாந்துள்ளனர். இது போல ஊமச்சிகுளம் மட்டுமில்லாது பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அவரிடம் தீபாவளி சீட்டு பணம் கட்டி ஏமாந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. ரூ.2 கோடி ரூபாய்க்கு மேல் இந்த தொகை வரும் என்று கூறுகிறார்கள். எனவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், நாங்கள் செலுத்திய தொகையைப் பெற்றுத்தர நடவடிக்கைஎடுக்க வேண்டும்” என்றனர்.

இது தொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், “ கிராம மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பி.கீதா மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. அவரைப் பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். விரைவில் அவர் சிக்குவார்” என்றனர். ஊமச்சிகுளம், மந்திகுளம் , கருவனூர் என பல கிராமங்களில் தீபாவளி சீட்டு என கைவரிசை காட்டி தலைமறைவாகியுள்ள பி.கீதாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *