
சன்னரக அரிசி எனும் பெயரில் ரேஷன் அரிசியைக் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்வதா என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அமுதம் அங்காடி, கூட்டுறவு சங்க கடைகளில் 17.10.2026 அன்று முதல் கிலோ 30 ரூபாய்க்கு சன்னரக அரிசி விற்பனையை தமிழக அரசு துவக்கியது. நேற்று வரை 16 மெட்ரிக் டன் சன்னரக அரிசி விற்பனையாகியுள்ளதாக தமிழ்நாடு கூட்டுறவுத்துறையும் அறிவித்திருந்தது.
ஆனால், இது ஒரு ஏமாற்று வேலை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அமுதம் கூட்டுறவுக் கடைகள் மூலம் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சன்னரக அரிசியின் தரம் மிகவும் மோசமாக இருப்பதால், அதன் விற்பனை மந்தமடைந்து, அரிசி மூட்டைகள் அதிகளவில் தேக்கமடைந்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதிலும், தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள நியாயவிலைக் கடை ஒன்றில், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தொடங்கி வைத்த சன்னரக அரிசி விற்பனையில், ரேஷன் அரிசியையே கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியதோடு, அதனைத் திருப்பி ஒப்படைத்த அவல நிகழ்வும் அரங்கேறியுள்ளது.
அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அமுதம் கூட்டுறவுக் கடைகளில் சன்னரக அரிசியைக் கிலோ 30ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டத்தின் தொடக்க நிகழ்வை பிரம்மாண்டமாக நடத்திய அமைச்சர்கள், பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் அரிசியின் தரத்தைப் பரிசோதித்தார்களா அல்லது தங்களது ரீல்ஸ் கண்டென்ட்காக சன்னரக அரிசி வழங்குவதாகக் காட்டிவிட்டு, இலவச ரேஷன் அரிசியைப் பாலிஷ் செய்து, சன்னரக அரிசி என மக்களுக்கு முறைகேடாக விற்பனை செய்து ஏமாற்ற முயல்கின்றனரா என்ற கேள்வி எழுகிறது.
எனவே, சன்னரக அரிசி என்ற பெயரில் தரமற்ற அரிசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி, இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தரமான சன்னரக அரிசியைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதையும் உறுதிசெய்ய வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்



