வேறுபாதிப்பை ஏற்படுத்தும்… இடைத்தேர்தல் அறிவிப்புக்கு எதிரான வழக்கில் பரபரப்பு

நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், அது வேறுவொரு பாதிப்பை ஏற்படுத்தும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்வெற்றி பெற்ற திருச்சி (கிழக்கு), மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் அந்த தொகுதிகள் காலியானதாக சட்டப் பேரவையின் செயலாளர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடாசலபதி பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், “காலியான தொகுதிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிப்புகள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் என்ற நிலையில் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 151- ஏ-வின் கீழ் காலியானது இல்லை என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வரை குறிப்பிட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்று அதில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 10) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் இடைத்தேர்தல் அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அதனால், இடைத்தேர்தல் அறிவிப்புகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார்.

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “ராஜினாமா செய்யப்பட்ட தொகுதிக்கு எதிரான தேர்தல் வழக்குகளை பொறுத்தவரை அதன் நிலைபாடுகள் நீதிமன்றத்தில் மாறுபடலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர் ராஜினாமா செய்வதற்கு முன் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அதை கருத்தில் கொள்ள வேண்டியது இல்லை எனவும் நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கை பொறுத்தவரை, வேட்பாளர்களின் ராஜினாமாவை உரிய ஆய்வுக்கு பின் சபாநாயகர் ஏற்று அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உத்தரவிட்டால் அது தேர்தல் நடவடிக்கைகளை பாதிக்கும். 10 ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்த பழமையான தேர்தல் வழக்கை தற்போது தான் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது” என்று வாதிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாசிலாமாணி, “காலியானதாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்க முடியும். தனி நபர்கள் தேர்தலை நடத்தக் கூடாது என வழக்கு தொடர முடியாது. இந்த வழக்கு விசாரணைக்கே உகந்தது இல்லை. இடைத்தேர்தல் நடத்துவதை எதிர்த்து குறிப்பிட்ட தொகுதி வாக்காளர்கள் மட்டுமே வழக்கு தொடர உரிமை உள்ளது. மனுதாரர் எந்த தொடர்பும் இல்லாமல் வழக்கை தொடர்ந்துள்ளார்” என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என 2018- ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் போதும் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடக் கூடாது எனவும், நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், அது வேறுவொரு பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பிட்ட வேட்பாளருக்கு எதிராக வழக்கு நிலுவையில் இருந்தால், எப்படி தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியும்? நிலுவையில் வழக்குகள் இல்லாதபோது ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது கட்டாயம் தான். அதே நேரத்தில் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால் அங்கே எப்படி தேர்தல் அறிவிப்பு வெளியிட முடியும்? இடைத்தேர்தலில் புதிய வேறு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்தால் என்ன செய்வது? அதனால் சற்று பொறுத்திருந்துப் பார்க்கலாம்” என்று கூறிய நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *