சிவகங்கை ஆகாஷ் உடல் 102 நாட்களுக்குப் பின் போலீஸாரால் தகனம்

காவல் நிலைய விசாரணையில் மரமணடைந்ததாக கூறப்படும் ஆகாஷின் உடல் 102 நாட்களுக்குப் பின் போலீஸாரால் தகனம் செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன், கொலை முயற்சி வழக்கு ஒன்றில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் காவல் நிலைய விசாரணையில் இருந்த சில தினங்களிலேயே உயிரிழந்தார். குறிப்பாக நீதிமன்ற நடுவர் முன்பு ஆகாஷ் அளித்ததாக கூறப்பட்ட வாக்குமூலம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதில், காவல்துறையினர் தன்னை தாக்கியதாகவும், தனது காலை உடைத்ததாகவும் அவர் கூறியிருந்ததாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்ததுடன் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அத்துடன் ஆகாஷ் மரணம் காவல் மரணமாக கருதப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன

இந்த நிலையில், விசாரணையின் போது ஆகாஷை அடித்துக் கொன்றதாக கூறி, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது வழக்குப்பதிய கோரி அவரது தந்தை ராஜேஷ்கண்ணன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், தனது மகனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். அத்துடன்சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது எஸ்.சி – எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும் ஆகாஷின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்த உடலை வாங்க மறுத்து 100 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘இறப்புக்கு பின்பும் மனித கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும். மதுரை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், அரசு மருத்துவமனை முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகள், ஆகாஷின் உடலுக்கு சட்டப்படி உடனே இறுதிச்சடங்கு நடத்த வேண்டும். இதனால், சிபிசிஐடி விசாரணை எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது. சட்டப்படி விரைவாக விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னும் ஆகாஷின் உடலை அவரது பெற்றோர் வாங்க மறுத்தனர். தங்களது மகனின் மரணத்திற்கு காரணமானவர்கள் முழுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும், நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்ற மனநிலையில் அவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை ஆர்டிஓ கருணாகரன், சிவகங்கை ஆர்டிஓ ஜெபி கிரீசியா, சிவகங்கை ஏடிஎஸ்பி சுகுமார் ஆகியோர் முன்னிலையில், மதுரை தத்தனேரி எரியூட்டும் மைதானத்தில் ஆகாஷ் உடல் இன்று (ஜூன் 17) தகனம் செய்யப்பட்டது. ஆகாஷ் டெலிசனின் தந்தை ராஜேஷ் கண்ணன், தாய் ஆனந்தி மற்றும் சகோதரி ஆகியோர் ஆகாஷ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். ஆகாஷ் மரணமடைந்து 102 நாளுக்குப் பிறகு அவரது உடல் போலீஸாரால் தகனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *