
வைகாசி விசாகத்தை முன்னிட்டு எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
வைகாசி விசாகம் என்பது முருகப் பெருமான் அவதரித்த தினமாகவும், மிகவும் சிறப்புக்குரிய சக்தி வாய்ந்த தினமாகவும் கருதப்படுகிறது. வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டால் விரும்பிய வரங்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் பக்தர்கள் முருகன் குடிகொண்ட அறுபடை வீடுகளுக்குச் சென்று வழிபாடு நடத்துவார்கள். இந்த ஆண்டு வைகாசி விசாகம் மே 30-ம் தேதி (சனிக்கிழமை) அன்று வருகிறது.
இந்த நிலையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு எழும்பூர்- திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” வைகாசி விசாகத்தை முன்னிட்டு, எழும்பூர்-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து நாளை (மே 29) மதியம் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06155) மறுநாள் அதிகாலை 3 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.
மறுமார்க்கமாக, திருச்செந்தூரில் இருந்து மே 30-ம் தேதி இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ( வண்டி எண் 06156) மறுநாள் காலை 11.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று (மே 28) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.



