நினைவே சங்கீதம் 17: ரோஜாவின் இதழ்களைப் போல்…

கடந்த 19-ம் தேதி அண்ணனுக்குப் பிறந்த நாள். மூன்றாம் வகுப்பு வரை டெல்லியில் படித்ததால், தமிழும், ஆங்கிலமும் தெரியாமல் இந்தியும், தெலுங்கும் மட்டுமே அறிந்த நான் திடீரென மதுரையில் படிக்க வேண்டிய குடும்பச் சூழலில் என்னை தலைவாரி பூச்சுட்டி உன்னை பாட்டைப் பாடி என் அண்ணன் என்னை பள்ளிக்கு தினமும் கொண்டுவிட்ட கதை நண்பர்களுக்கு ஏற்கெனவே தெரியும். அன்றிலிருந்து என்னைப் படிக்க வைக்க அவ்வளவு பாடுபட்டவர் அண்ணன். எனக்கு தமிழும் ஆங்கிலமும் பரிச்சயமாக தமிழ் அம்புலிமாமாவையும், ஆங்கில சந்தாமாமாவையும் மாதாமாதம் வாங்கித் தந்து அவர் படிக்க வைத்தது தான் இன்று நான் ஒரு மொழிபெயர்ப்பாளனாக உருவாகக் காரணமானது.

என்னைப் பள்ளியில் நடக்கும் அத்தனை கட்டுரைப் போட்டிகளுக்கும் பெயர் தரச் சொல்வார். கட்டுரையின் தலைப்பு சொல்லப்பட்டதும், கட்டுரை எழுதித் தந்து மனப்பாடம் செய்ய வைத்து எழுதிக் காட்டச் சொல்லி அண்ணனும், அக்காவும் பாடாயப் படுத்துவார்கள். எப்படியோ முதல்பரிசோ, இரண்டாம் பரிசோ கிடைத்துவிடும். பரிசளிப்பின் போது First Prize goes to C.Subba Rao என்று அறிவிக்கும் போது, அதுவரை எந்த மாணவருக்கும் இல்லாத அளவிற்கு கைதட்டலும் விசிலும் தூள் பறக்கும். காரணம் தம்பி பிரைஸ் வாங்கறான் என்று அண்ணன் எங்கள் தெருவிலிருந்து 10 -15 நண்பர்களை அழைத்து வந்திருப்பார். இது இன்றளவும், எனது நூல் வெளியீடுகளில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அண்ணனின் நண்பர்கள் குழு இப்போது 70 பிளஸ் என்பதால் விசில் சத்தம் மட்டும் இல்லை!

இப்படியான காலத்தில் ஒரு முறை நான் ஏதோ உடல்நலக் குறைவினால் ஒரு வாரம் பள்ளிக்குச் செல்லாமல் இருந்து அன்றுதான் பள்ளிக்குச்சென்றேன். அன்று சிறுசேமிப்பு வாரம் என்று சிறுசேமிப்பு பற்றி கட்டுரைப் போட்டி இருந்தது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. (அப்போது சஞ்சய்கா என்று ஒரு சிறுசேமிப்புத் திட்டம் இருந்தது என் வயதையொத்தவர்களுக்கு நினைவிருக்கலாம் ) கே.கே சார் – சேதுபதி பள்ளியில் அப்போது இரண்டு கே.கே சார்கள் இருந்தார்கள் .ஒருவர் கே.கிருஷ்ணமூர்த்தி என்று ஒன்பதாவது, பத்தாவதுக்கு எடுப்பவர். மற்றவர் கே.கிருஷ்ணப்பன் என்று எட்டாவது வரை எடுப்பார் – கே.கிருஷ்ணப்பன் சார் என்னை கட்டுரைப் போட்டிக்கு வாடா என்கிறார். நான் தயாரிப்போடு வரவில்லை என்று தயங்குகிறேன். சக மாணவர்கள் சார், அவனுக்கு சொந்தமா எழுதத் தெரியாது, மொதல்லயே சொல்லி அவங்க அண்ணன்கிட்ட எழுதி வாங்கிட்டு வந்து தான் எழுதுவான் என்று மானத்தை வாங்குகிறார்கள். கே.கே சார், எப்பவும் அண்ணன்கிட்டயே எழுதி வாங்க முடியுமா? நீ எப்ப ownஆ எழுதிப் பழகறது? வாடா, வந்து எழுது, என்று என்னை அதட்டி இழுத்துச் செல்கிறார். நான் போய் சிம்மக்கல் ஜெயவீர ஆஞ்சநேயரை நினைத்துக் கொண்டே, ஏதோ எனக்குத் தெரிந்த மட்டும் எழுதிவிட்டு வந்தேன்.

இரண்டு நாட்கள் கழித்து, பிரேயரின் போது, நானே எதிர்பாராத விதமாக எனக்கு முதல் பரிசு என்று அறிவித்தார்கள். ரயில்வே ஸ்டேஷன் எதிரே இருந்த ஸ்டேட் வங்கி மேலாளர் வந்திருந்தார். பிங்க் நிறத்தில் அழகான ஒரு பன்றிக்குட்டி உண்டியலும், ஒரு இங்க் பேனாவும், சான்றிதழும் தந்தார்கள். வழக்கமான அண்ணன் கோஷ்டியின் ஆரவாரமின்றி, நண்பர்களின் சோகையான கைதட்டலுக்கு மத்தியில் பரிசை வாங்கிக் கொண்டேன். மாலையில் வீடு வந்ததும் அண்ணனைத் தேடினேன். அப்போது அண்ணன் சட்டக்கல்லூரியில் படித்து வந்தார். அக்கா லேடிடோக்கில். அன்று சட்டப்படிப்பு நான்செமஸ்டர். மிகவும் கடினம்.

எப்போது பார்த்தாலும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். வீட்டில் நான், அக்கா, அண்ணன் எல்லோருமே கட்டபொம்மன் சிவாஜி போல் சத்தம் போட்டு வீராவேசமாகப் படிக்கும் பழக்கம் கொண்டவர்கள். நாங்கள் ஒரு சிறிய மாடி போர்ஷனில் வசித்த காலம் அது. மெதுவா படி எனக்கு கன்ப்யூஸ் ஆகுது என்று ஒருவரையொருவர் குரலை அடக்கி வாசிக்கச் சொல்லி சண்டை போட்டுக் கொண்டே இருப்போம்.

கண்டசாலா

எனவே பெரியவர்கள் பஞ்சாயத்து செய்து எனக்கு வீட்டின் ஹால், அக்காவிற்கு எங்கள் போர்ஷனுக்கு பின்னால் இருந்த சிறிய மொட்டை மாடி, அண்ணனுக்கு பக்கத்து வீட்டு மொட்டை மாடி என்று பாகப்பிரிவினை ஆனது. எங்கள் தெருவில் வீடுகள் எல்லாம் கில்லி படத்தில் வரும் வீடுகள் போல் சுவர் ஏறிக் குதித்து அடுத்தடுத்த வீடுகளின் மாடிக்கு எளிதாகப் போகலாம். தெருவின் கடைசி வீடு வரை அப்படிப் போக முடியும். பாகப் பிரிவினையின்படி, நான் பள்ளியிலிருந்து வந்த போது, அண்ணன் சுவர் ஏறிக் குதித்து பக்கத்து வீட்டு மாடியில் உலாவியபடி சத்தமாக படித்துக் கொண்டிருந்தார்.

நான் பன்றிக்குட்டி, பேனா, சான்றிதழை தூக்கிக் கொண்டு, சுவர் ஏறிக் குதித்து, அண்ணனிடம் கட்டுரைப் போட்டி பிரைஸ் அண்ணே என்று காட்டினேன். “எப்படா போட்டி, என்ன தலைப்பு ? சொல்லவே இல்ல !“ என்றார் அண்ணன் வியப்பாக. நான் கே.கே என்னை வம்படியாக எழுத வைத்த கதையைச் சொன்னேன். அண்ணனுக்கு ஒரே பெருமை. “இனிமே நீயே எழுதீருவ போலயே…” என்றார்.
தானாக படித்து வந்தான்
தங்கமென வளர்ந்த தம்பி
தள்ளாத வயதினில் நான்
வாழுகிறேன் அவனை நம்பி
அப்படீன்னு கண்டசாலா சும்மாவா பாடியிருக்காரு“ என்று பாடினார்.
பின்னாளில் நான் என் எழுத்துக்காக தமுஎகச விருது, கலைஇலக்கியப் பெருமன்ற விருது, நல்லி திசை எட்டும் விருது, பெரியார் விருது என்று வாங்கிய அனைத்து விருதிற்கும் அடித்தளமாக அமைந்தது அந்த பன்றிக்குட்டி உண்டியல் பரிசுதான் !அந்த கணத்திலிருந்து அந்தப் பாட்டைக் கேட்டால் எனக்கு இந்த சம்பவம் தான் நினைவிற்கு வரும். இப்போது அண்ணனே பின்பக்கம் சற்று வழுக்கை விழுந்து, ரங்கராவ் போல் தான் இருக்கிறார். சுப்பாராவின் அண்ணன் ரங்காராவாகத் தானே இருக்க முடியும் ! பின்னாளில் நான் இசை கற்று, நண்பர் குமணனின் தாக்கத்தால் சிவரஞ்சனி வெறியனாக ஆன பிறகு, என்றேனும் வயலினிலோ, கீபோர்டிலோ
பதஸ ரிகரி ஸா.. பதஸ ரிகரி ஸா… என்று முத்துக்கு முத்தாக பாடலை வாசிக்கும் போது, கரி கக ரீஸ ரி ரீ… ரிஸரிரி ஸாத ஸஸா… என்று தானாக படித்து வந்தான் என்ற வரி வரும் போது, அதற்கு மேல் வாசிக்க முடியாமல் எதுவோ ஒன்று தொண்டையை அடைக்கும்.
பிறந்த நாளுக்கு அண்ணனுக்கு ஒரு புத்தகத்தைத் தந்து , காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் போது, கண்டசாலா
ராஜாக்கள் மாளிகையில்
காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம் போல்
நாங்கள் கொண்ட
சொந்தமடா
ரோஜாவின் இதழ்களைப் போல்
தீராத வாசமடா
நூறாண்டு வாழ வைக்கும்
மாறாத பாசமடா…
என்று தேவலோகத்திலிருந்து பாடுவது காதில் ஒலிக்கிறது. தேவர்கள் துந்துபியில் பதஸ ரிகரி ஸா… ரிகரி ஸதப கபதா என்று பின்னணி இசை சேர்க்கிறார்கள் !
ச.சுப்பாராவ் ( தொடரும்)

இப்போதே பகிருங்கள்

5 Comments

  1. நம்மைச்சுற்றி நல்ல மனிதர்களும், ஊக்கப்படுத்த உற்சாக உறவுகளும், சங்கீத ஞானமுடைய ரசிகர் பட்டாளமும் அவசியம் என்பதை உணர்த்துகிறது கட்டுரை… 🎶

      • சினிமா பாடல்கள் நமது வாழ்க்கையுடன் ஒவ்வொரு கணத்திலும் ஒட்டிக்கொண்டு கூடவே வந்து கொண்டிருக்கின்றன, நமக்கு விருப்பமோ இல்லையோ. இப்போதும் கூட நான் கடந்த காலத்தின் ஏதாவது ஒரு வரலாற்று நிகழ்வை அல்லது சம்பவத்தை நினைவு கொள்ள வேண்டுமென்றால் அதை சரி பார்த்துக்கொள்ள அன்றைய தினம் அல்லது அன்றைய காலத்தில் படித்துக் கொண்டிருந்த வகுப்பு, வெளிவந்த திரைப்படம் அல்லது பார்த்து ரசித்த திரைப்படம், அன்றைய நாளில் கேட்ட பாடல் இவற்றோடு பொருத்திப் பார்த்து சரி செய்து கொள்கிறேன். நமது தமிழ் திரைப்பட பாடல்கள் நமது இன்ப துன்ப உணர்வுகள் எல்லாவற்றோடும் கூடவே வருகின்றன. அதுவும் 50 வருடங்களுக்கு முன்பு உள்ள பாடல்கள் எனில் இப்போது அவற்றின் தாக்கமும் பரிமாணமும் வேறாக உள்ளது. அருமை. இக்பால்

  2. முத்துக்கு முத்தாக எனும் திரைப்படம் இன்று கண்ணெதிரே வந்து போனது.
    அருமையான பதிவு. சகோதரர்கள் இன்னும் அதே பாசத்துடன் நடைப்பயிற்சி களத்தில் இன்றும் வலம் வருவது கண் கொள்ளா காட்சி. 🎉🎊 தம்பி சுப்பாராவ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *