நினைவே சங்கீதம் 21: எம்.ஆர்.ராதா குரலில் வாரியார் பாட்டு

1980களில் மதுரை நகரில் வாழ்ந்தவர்கள் ஷண்முகா என்ற ஆவின் பால் லாரிகளை கண்டிப்பாகப் பார்த்திருப்பார்கள். மதுரை சுற்று வட்டார கிராமங்களுக்கு ஊர் ஊராகச் சென்று பால் கேன்களை ஏற்றி வந்து சாத்தமங்கலம் ஆவின் பால்பண்ணைக்குக் கொண்டு வரும் ஒப்பந்தக்காரரின் லாரிகள் அவை. ஷண்முகா லாரி சா்வீஸ் எங்கள் ஏரியாவில் தான் இருந்தது. லாரி முதலாளி ஷண்முகம் பிள்ளையின் பெயரில் இருந்த லாரி கம்பெனி. 12 லாரிகள் இருந்தன. லாரி ஷெட்டும், பெரிய ஒர்க் ஷாப்பும் ஆற்றோரம் அண்ணாத் தோப்புத்தெருவில் இருந்தன. எல்லாம் பழைய அதே கண்கள் படத்தில் மைசூருக்கு ஒன்பது கிமீக்கு முன்னால் காஞ்சனா கோஷ்டி மீது மோத வருமே, அது போன்ற மூக்கு விடைத்த ஃபர்கோ லாரிகள். உண்மையில் 12 லாரிகளுக்கான பாடியும், இஞ்சினும் மட்டும் இருந்தன. மற்ற பாகங்கள் 8 லாரிகளுக்கு உள்ளவைதான். 2845 ல பேட்டரி ஒக்காந்துருச்சு என்பார் டிரைவர். 3773-ன் பேட்டரியைக் கழற்றி அதற்கு மாட்டு என்பார் ஷண்முகம் பிள்ளை. 1233க்கு கியர் ராட் உடைந்து இருக்கிறது என்றால் 2925-ன் கியர் ராட் மாற்றி வைக்கப்படும். 2367-க்கு 4777-ன் சீட்டைப் போட்டுக் கொண்டு உட்கார வேண்டும்.

இப்படியான வேலைகளுக்காக ஒரு சொந்த ஒர்க் ஷாப். மாறி மாறி எல்லா லாரிகளும் மஞ்சள் பெயிண்ட் அப்பிக் கொண்டு சமர்த்தாக ஆர்டிஓ அலுவலகம் சென்று ஃஎப் சி வாங்கி வரும். மிஞ்சிய மஞ்சள் பெயிண்ட்டை தனது பிரிட்டிஷ் காலத்து உயரமான சைக்கிளுக்கு அடித்துக் கொள்வார் பிள்ளைவாள். சைக்கிள் அவரை விட உயரமாக இருந்தாலும், மொடமொடவென்று கதர் வேஷ்டி, கடைசி இரண்டு பட்டன் மட்டும் போட்ட காமராஜர் ஸ்டைல் கதர் சட்டை, நெற்றி நிறைய பட்டையுடன் அவா் அந்த மஞ்சள் சைக்கிளில் பறப்பதை அக்காலத்தில் சிம்மக்கல் காரர்கள் அனைவரும் பார்த்திருப்பார்கள். பெரிய முருக பக்தர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது மயில் வாகனமான மஞ்சள் சைக்கிளில் திருப்பரங்குன்றத்திற்கு சிட்டாகப் பறந்து வருவார். எல்லா லாரிகளும் மாறி மாறி விபத்துக்குள்ளாகும். குற்றவியல் சட்டம் 279, 304 ஏ பிரிவுகளில் வழக்கு நடத்தும் நிபுணராக என் அண்ணன் மாற அவை பெரிதும் உதவின!

ஷண்முகம் பிள்ளை அவ்வப்போது வழக்கு விஷயமாக வீட்டுக்கு வரும் போதெல்லாம் என் தந்தையாருடன் ஆன்மீக உரையாடல்கள் நடத்துவார். என் தந்தை மூக்குப் பொடி போடுவார். ஒவ்வொரு முறையும் பிள்ளை அப்பாவிடம், “பொடி எங்க வாங்குறீங்க? இந்த மெர்குரி காப்பி கடைல வாங்காதீங்க.. அவன் காப்பி பொடில கலந்து மிஞ்சின சிக்கிரிய மூக்குப் பொடிலயும் கலப்படம் பண்றான். நா உங்களுக்கு மேலக் கோபுர வாசல் மண்டையாட்டி பொடிக் கடைலேர்ந்து நயமா வாங்கிட்டு வர்றேன்” என்று கடமையாக வாங்கிக் கொண்டு வருவார்.
அப்போது தான் நாங்கள் ஒரு பிலிப்ஸ் டூ- இன் ஒன் வாங்கிய நேரம். அந்த நாளில், மிகவும் பிரபலமாக இருந்த ஜேசுதாஸின் அறுபடைத் திருப்புகழ் கேசட் தான் அப்பா வீட்டில் இருக்கும் நேரம் முழுக்க ஓடும். ஒரு நாள் கேஸட்டில் ஜேசுதாஸ் மத்தியமாவதி ராகத்தில்
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

என்று உருகிக் கொண்டிருக்கிறார். உடன் எங்கள் அப்பாவும் உருகிக் கொண்டிருக்கிறார். அருள்வாய் குகனே என்ற வரியை ஜேசுதாஸ் மூன்று முறை பாடி நிறுத்தும் இடம் நிஜமாகவே மனதை உருக்கும்.

அந்த நேரம் சக முருக பக்தரான ஷண்முகம் பிள்ளை தன் மஞ்சள்சைக்கிளில் போக, அப்பா, அவரை “பிள்ளைவாள், ஒரு நிமிஷம்.. ஒரு நிமிஷம்..” என்று அழைத்தார். “இந்தப் பாட்ட மட்டும் கேட்டுட்டுப் போங்க…” என்றார். பிள்ளைவாள் “என்ன பாட்டு?” என்றார். அப்பா “உருவாய்… அருவாய்… திருப்புகழ்…” என்றதும், பக்திப் பரவசமான பிள்ளைவாள், “யாரு பாடியிருக்கா?” என்றார் பணிவாக. அப்பா “ஜேசுதாஸ் ” என்று சொல்லி முடிப்பதற்குள் ஷண்முகம் பிள்ளைக்கு ஆவேசம் வந்துவிட்டது. “ என்ன சாமி, நீங்க இந்த சினிமாக் கார ……. பய பாட்ட கேட்டுக்குட்டு இருக்கீங்க… அவனுக்கு என்ன சங்கீதம் தெரியும்… டேஷ்.. டேஷ்… பய… கூத்தாடிப் பய… மானே… தேனே .. கட்டிப் பிடின்னு பாடிட்டுத் திரியற பய… இந்த முண்டப்பய பாட்ட போயி கேட்டுக்கிட்டு இருக்கீங்க” என்று கத்த ஆரம்பித்து விட்டார்.

ஜேசுதாஸ் தன் வாழ்நாளில் யாரிடமும் அப்படி ஒரு திட்டு வாங்கி இருக்கவே மாட்டார் ! அப்பா மெதுவான குரலில், “ஜேசுதாஸ் மானே தேனே கட்டிப் பிடின்னு எல்லாம் பாட மாட்டாரே” என்றதை அவர் காதிலேயே வாங்கவில்லை.. “சாமி… சொன்னா கேளுங்க.. இந்த திருப்புகழ வாரியார் சாமி பாடி கேட்டவன் நானு… வேற ஆள் பாடறத கேக்க மாட்டேன்… வாரியார் சாமி எப்படி பாடுவாரு தெரியுமா…” என்றவர், ‘வேலும் மயிலும் துணை’ படத்தில் எம்.ஆர். ராதா படு ஆர்ப்பாட்டமாக பட்டு வேட்டி, அங்கவஸ்திரம், விபூதி பட்டை, உத்திராட்ச மாலைகளுடன் நின்றவாறே பயங்கரமான டான்ஸ் மூவ்மெண்ட்ஸுடன், ” கிருஷ்ணா, முகுந்தா, முராரே” என்ற தியாகராஜ பாகவதர் பாட்டு மெட்டில்
கந்தா.. கடம்பா, கூர் வேலா…. என்று பாடுவாரே, அந்த ஸ்டைலில் உருவாய் அருவாய் உளதாய் இலதாய் பாட்டை ரகளையாகப் பாடினார். எம்.ஆா்.ராதாவே நேரில் நின்று பாடுவது போல் இருந்தது ! வாரியார் எதற்கு எம்.ஆர்.ராதா குரலில் பாடுகிறார்?

எங்களுக்கு சிரிப்பு தாங்கவில்லை. என்ன செய்வது? பெரியவர் பக்தியாய் பாடுகிறாரே என்று நாங்களும் சிரிப்பை அடக்கிக் கொண்டு, முகத்தை பக்தியாய் வைத்துக் கொண்டு கேட்டோம். கிளம்பும் போது, டேப்பிலிருந்து கேஸட்டை வெளியே எடுத்து, “இந்த சனியன மொதல்ல வெளில தூக்கிப் போடுங்க.” என்று அறிவுரை தந்து விட்டு தன் மஞ்சள் சைக்கிளில் தாவி ஏறினார் எம்.ஆர்.ராதா பிள்ளை. உண்மையில் அந்த கந்தா கடம்பா பாடலை பாடியது எஸ்பிபி. ராதா குரலில் அத்தனை ரகளையாகப் பாடியிருப்பார் என்பது பின்னால் தான் தெரிந்தது ! அதன் பிறகு அப்பா பிள்ளைவாளிடம் சங்கீதம் பற்றி பேசக் கூடாது என்று உறுதியான முடிவெடுத்தார்!

அசோகர் மறைந்ததும், மௌரிய சாம்ராஜ்ஜியம் அழிந்தது என்று பாடங்களில் வருமே அது போல், பிள்ளைவாள் மறைந்ததும் லாரி பிசினஸ் ஓய்ந்தது. அவரது கடைசி மகன் தன் மனைவி பெயரில் எங்கள் எல்ஐசி அலுவலகத்தில் ஏஜென்சி எடுத்திருந்தார். அவ்வப்போது அலுவலகம் வரும் போது என்னிடம் சிறிது நேரம் பேசிவிட்டுப் போவார். என் பணிஓய்விற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, வாழ்த்து தெரிவிக்க வந்த சின்னப் பிள்ளைவாள், நீண்ட நேரம் பழைய கதைகளைப் பேசிவிட்டுப் போனார். பேச்சினூடாக, “ எங்க அய்யாவும், உங்க அய்யாவும் நல்ல பிரெண்ட்ஸ்… சங்கீதம்… சாமி பாட்டுன்னு ரெண்டு பேரும் பேசீட்டே இருப்பாங்க… அது ஒரு காலம்,“ என்றார்.
நான் “கந்தா.. கடம்பா… கூர் வேலா …“வை நினைத்துக் கொண்டே, “ஆமாம், ஆமாம், “ என்றேன் சிரித்துக் கொண்டே.
ச.சுப்பாராவ் ( தொடரும்)

இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *