
நான் புத்தகங்களை மொழிபெயர்க்க ஆரம்பித்தது 2000-வாக்கில் தான் என்றாலும், அதற்கு முன்பாகவே சிறிய அளவில் மொழிபெயர்ப்பாளனாகத் தான் இருந்தேன். என் சிறுவயதில் நான் டெல்லியிலிருந்து மதுரைக்குக் குடியேறியது நண்பர்களுக்குத் தெரியும். 1970-களில் இந்திப் படங்களும், பாடல்களும் மதுரையில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தன. பாபி, யாதோன்கி பாராத், ஷோலே போன்ற படங்கள் தமிழ் படங்களை விட நன்றாக ஓடிய காலம் அது. அப்போது இது போன்ற இந்திப் படங்களைப் பார்க்கச் செல்லும் எனது அண்ணனின் நண்பர்கள் கோஷ்டி மொழி பெயர்ப்பாளனாக என்னையும் அழைத்துச் செல்வதுண்டு. நானும் எனக்குத் தெரிந்த வரை திரையில் தெரியும் படத்திற்கு நேர்முக வர்ணனை செய்வேன். சசிகபூரும், ஷர்மிளா டாகூரும் நடித்த ஆ கலே லக் ஜா விற்கு வா, என்னை கட்டிப் பிடி என்று நான் மொழிபெயா்த்துச் சொல்லி இருக்க, தமிழில் சிவாஜி, மஞ்சுளாவை வைத்து அதை உத்தமன் என்று எடுத்த போது, என் மொழிபெயர்ப்புத் திறமை குறித்து மக்களுக்கு சற்று சந்தேகம் வந்த கொடுமையும் உண்டு ! என்ன செய்வது?

வாதா கரோ நஹி சோடோ என்று ஸ்கேட்டிங் செய்தபடி பாடும் புதுமையான பாட்டை படகு படகு , ஆசை படகு போவோமா பொன்னுலகம் என்று பாடல், மெட்டு எல்லாவற்றையும் தான் படத்தில் மாற்றி இருக்கிறார்கள் என்று நான் சண்டை போட்ட காலம் அது. அப்போது, எங்கள் அம்மாவின் தாய் மாமன்கள் அனைவரும் எங்கள் தெருவில்தான் இருந்தார்கள். ஒரு மாமாவின் பேரன் என் அண்ணன் செட். ராஜு என்ற அந்த அண்ணன் நன்றாகப் பாடுவார். அவருக்கு பரிட்சை அட்டையில் தானே தாளம் போட்டுக் கொண்ட பாடினால் தான் பாட வரும். அதனாலேயே அவரால் இசைக்குழுக்களில் பாட முடியாமல் போனது. எனக்கு சிதம்பரம் ஜெயராமன் மீது ஒரு தனி ஈர்ப்பு வர அவர்தான் காரணம். சந்தனப் பொதிகையின் தென்றல் எனும் பெண்ணாள், விதியா, சதியா, தன்னைத் தானே நம்பாதது சந்தேகம், யார் சொல்லுவார் நிலவே .. என்று அவா் வீட்டிற்கு வந்தால், முழுக்க முழுக்க ஜெயராமன் பாடல்கள்தான். இந்திப் பாடல் பாட வேண்டும் என்றால் என்னிடம் ஹம் தும் இக்கு கம்ரே மே பந்து ஹேன்னா என்னடா? து ஜகான் ஜகான் சலேகா, மேரா சாயா சாத்து ஹோகா ன்னா என்னடா? என்று கேட்டுக் கொள்வார். எல்லாம் அதே ஜெயராமன் குரலில் தான் ! ஆனால், அவர் பாடும் இந்திப் பாடல்களின் வரிகள் பலவற்றில் இந்தி வார்த்தைகளே இருக்காது. அவரது சொந்த சாகித்யம் தான். அதை நான் சொன்னால் ஒத்துக் கொள்ளமாட்டார்.
அதிலும் சங்கராபரணம் படத்தின் சங்கரா… நாத சரீரா பரா பாடினால் அவ்வளவுதான்…
திக்கனேற்த்ரஜிர ஹிமகிரிந்திரகர
கங்கரா சீல கங்கரா…
ஷுத்ரு லெருகனி ருத்ரவீணையின்
நித்ர கானகரி அவதரிங்சரா வினிகரஞ்சரா…
என்று சொந்த சாகித்யம் பாடுவார். என்அண்ணன், “ கங்கரா சீல கங்கரான்னா என்னடா அர்த்தம் ராஜு? என்று கிண்டல் செய்தால், “நீயும் தெலுங்கன்தானே? இது தெலுங்கு பாட்டு தானே? நீ அர்த்தம் சொல்லு மாப்ள,“ என்பார் பதிலுக்கு. “நடுல ருத்ர வீணையின் அப்படீன்னு தமிழ்ல பாடறயே மாப்ள?“ என்பார் அண்ணன். “டேய், பாட்ல அப்படித்தாண்டா இருக்கு.. நீ வேணும் னா பாட்டு புத்தகம்வாங்கி வெரிஃபை பண்ணிக்க… “ என்பார் ராஜு. மதுரையில் சங்கராபரணம் பாட்டுப் புத்தகத்திற்கு எங்கே போவது?
ஆனால், அதற்குப் பிறகு அவர் இந்தி பாட்டுக்கு என்னிடம் ஓரளவிற்கு அர்த்தம் கேட்டுக் கொண்டு, வாரியார் போல நடுவில் பொழிப்புரை சொல்லி, பாடுவார். ஹம் தும் இக் கம்ரே மே பந்து ஹே என்று பாடும் போதே, ரெண்டு பேத்தயும் ரூம் ல வெச்சு பூட்டிட்டாங்களாம், என்பதை தெலுங்கில் சொல்வார். கோரா காகஸ் கா ஏ மன்னு மேரா பாடும் போது, கிழிஞ்ச பேப்பர் மாதிரி மனசு கிழிஞ்சு போச்சாம் என்பது மாதிரி எதையாவது தெலுங்கில் எங்களுக்கு விளக்கம் கொடுப்பார். நான் சொன்ன மொழிபெயர்ப்பை எனக்கே ஏன் திரும்பச் சொல்கிறீர்கள்? என்று கேட்க எனக்கு வயது போதாது என்பதால் பேசாமல் இருப்பேன்.

நாளடைவில் இந்த மொழிபெயர்ப்பு அதிகரித்துக் கொண்டே போனது. தமிழ் பாடல்களுக்கும் எங்களுக்கு தெலுங்கில் விளக்கம் சொல்வார் ! ராஜுவிற்கு பிஆர்சியில் வேலை கிடைத்து, ஊருக்கு வெளியே போக்குவரத்து நகர் என்ற புதிய நகருக்கு அவர்கள் குடிபெயர்ந்தார்கள். அப்போது, வீடு காலி செய்யும் முன் அவர் ஒரு நாள் வீட்டுக்கு வந்த போது, வழக்கம் போல பாட்டுக் கச்சேரி.. “மாப்ள, புது பாட்டு பாடுடா,“ என்று அண்ணன் சொல்லவும், ராஜு
பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த விட்டு
பேசி பேசி ராசியானதே
என்று பரிட்சை அட்டையில் தாளம் போட்டபடி கழுத்து நரம்ப புடைக்க பாட ஆரம்பித்தார்.
மாமன் பேர சொல்லி சொல்லி
ஆளானதே ரொம்ப நாளானதே
என்று பெண்குரலில் பாடிவிட்டு,
மாலையிட காத்து அல்லி இருக்கு
தாலி செய்ய நேத்து சொல்லி இருக்கு
என்று பாடும் போது, அந்த இடத்தில் நிறுத்தி,
“கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க… தாலிக்கு ஆர்டர் செஞ்சிட்டு வந்துருக்காங்க“ என்று தெலுங்கில் சொன்னதும், என் அண்ணன் பயங்கரமாக டென்ஷன் ஆகிவிட்டார். “மாப்ள, எங்களுக்கும் தமிழ் தெரியும். தமிழுக்கு என்னடா டிரான்ஸ்லேஷன் ஹைகோர்ட்? என்று சவுண்ட் விட, ராஜு “இப்படி விளக்கம் கொடுத்தே பழகிப் போச்சு மாப்ள,“ என்றார்..

காலத்தின் கணக்கை யார் அறிவார்? திடீரென ஒரு நாள் ராஜு மாரடைப்பில் காலமான தகவல் வந்தது. நானும், அண்ணனும், அக்காவும் போய் வந்தோம். திரும்பி வரும் வழியில் அண்ணன், “ ராஜு ஃப்ரீயா ஒரு நா வீட்டுக்கு வந்தான்னா இந்த அந்நியன் படத்துல,
சஞ்சானே தோனே தானே நேரானோ
அவ தும்பக தானே அம்பி லம்பானோ
வரிக்கு விளக்கம் சொல்லிட்டு பாடு மாப்ளன்னு சொல்லணும்னு நெனச்சேன்.. இனிமே யார்ட்ட போய் விளக்கம் கேக்கறது?“ என்றார். என்னிடம் அதற்கு பதில் இல்லை. மனதில் துக்கம் தான் இருந்தது.
– ச.சுப்பாராவ் ( தொடருடம்)
இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.




Very intersting👏👏
Super
மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் 💐