நினைவே சங்கீதம் 23- 4360 பாடல்கள்

கேஸட்டில் பாடல்கள் பதிய லிஸ்ட் எழுதுகிறோம். கண்ணன் சொல்லச் சொல்ல நான் எழுதுகிறேன். உறங்காத நினைவுகள்ல மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்… ப்ரீலூட் இல்லாமல் அப்படியே ஆரம்பிக்கும்பாட்டு… வேற… என்கிறேன் நான் பலசரக்குக் கடை அண்ணாச்சி போல. எனக்காகக் காத்திருல ஓ நெஞ்சமே… அடுத்து… மெட்டில சங்கக் கவிதை பாடிடும்… கண்ணன் யோசிக்கவே இல்லை.. பாரதம் எழுதும் வியாசன் போல் சொல்லிக் கொண்டே போகிறான்.. நான் பிள்ளையார் போல் எழுதிக் கொண்டே போகிறேன். சலங்கை ஒலியில் மௌனமான நேரம், தணியாத தாகத்தில் பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய், தேவதையில் கலீர் கலீர் என்றே, ஆட்டோராஜாவிலிருந்து சங்கத்தில் பாடாத கவிதை, ஆராதனையில் இளம் பனித்துளி விழும், வா இந்தப் பக்கத்திலிருந்து ஆனந்த ராகம், திடீரென்று மனிதரில் இத்தனை நிறங்களாவிலிருந்து பொன்னே பூமியடியும், கரையெல்லாம் செண்பகப்பூவிலிருந்து ஏரியிலே எலந்த மரமும், நிழல்களிலிருந்து தூரத்தில் நான் கண்ட உன் முகமும். லிஸ்டைத் தூக்கிக் கொண்டு விவேக் ஸ்டீரியோவிஷனுக்கு ஓடினோம்.

மேலே குறிப்பிடப் பட்டுள்ளது கேஸட்டில் பாட்டுப் பதியும் என் அனுபவம் பற்றி எனது மதுரை போற்றுதும் நூலில் நான் எழுதிய சிறிய பத்தி . இதில் சொல்லப்படும் கண்ணன் தான் என் இலக்கிய வாழ்விற்கு மட்டுமின்றி இசைப் பயணத்திலும் சகபயணி. 1973-ல் டெல்லியிலிருந்து வந்து அழுதபடியே வீரமாமுனிவர் பள்ளியில் கண்ணன் அருகில் தான் நான் போய் உட்கார்ந்தேன். அன்று ஆரம்பித்த நட்பு. அவனும் என்னைப் போலவே கோகுலத்தின் முதல் இதழை வாங்கிப் படித்தவன் என்பதால் நட்பு இன்று வரை தொடர்கிறது. மு.மேத்தா, வண்ணதாசன், தி.ஜா, கணையாழி, இர்விங் வாலஸ், டாம் கிளான்சி போன்றோரை மட்டுமல்ல, பாலமுரளி கிருஷ்ணாவையும், மஹாராஜபுரம் சந்தானத்தையும், கத்ரி கோபால்நாத்தையும்அவன் தான் எனக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

அதுவரை எனக்கு அம்மா பாடும் கர்னாடக இசை மட்டும்தான் தெரியும். 1980-ல் முதன்முதலில் அவர்கள் வீட்டு பெட் டைப் பிலிப்ஸ் டேப்ரிக்கார்டரில் தான் நான் முதன்முதலாக வேறு வேறு புதிய கலைஞர்களின் இசையைக் கேட்க ஆரம்பித்தேன். இருவரும் கேஸட்களாக வாங்கித் தள்ளினோம். விடிய விடிய கச்சேரிகள் கேட்டோம். ஏ.எம்.ராஜா, ஜிக்கி, சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி, ஹனிபா என எல்லோரது கச்சேரிகளையும் நேரில் கேட்டவர்கள் நாங்கள். திருவையாறு சென்று எல்லா வித்வான்களையும் நேரில் பார்த்து, கேட்டு ரசித்தோம். நடுவில் நேரம் கிடைக்கும்போது, யமுனாவிற்காக, கும்பகோணம் போய், கும்பேஸ்வரர் கோயிலையும், துக்காம்பாளையத் தெருவையும் பார்த்துவிட்டு வந்தோம். உண்மையில் நானும். அவனும் சுற்றாத இடமில்லை. ஹொகேனக்கலில் பரிசலிலும் போயிருக்கிறோம். பிரும்மபுத்திராவில் படகிலும் பயணித்திருக்கிறோம். எழுத்தும், பாட்டுமாக நான் இன்று வரை ஆனந்தமாக இருக்கக் காரணமானவன் கண்ணன்.

நான் பணி ஓய்வு பெறும்போது, அவன் தந்த பரிசு போல் உலகில் யாரும் யாருக்கும் தந்ததில்லை என்று சொல்லலாம். அந்தப் பரிசை ரெடி செய்ய அவன் கிட்டத் தட்ட ஓராண்டுக்கு மேல் பாடுபட்டான். நாங்கள் எங்கள் வாலிப வயதில் கேட்டு ரசித்து, அறிந்து கொண்ட 563 கேஸட்களை அவன் ஒவ்வொன்றாக சிடியாக மாற்றினான். அவற்றில் மொத்தம் 4360 பாடல்கள் ! ஒவ்வொரு சிடியையும் ஒரு 1 டிபி ஹார்ட் டிஸ்கில் பதிந்தான். மொத்தத்தில் 67.3 ஜிபி !அதோடு கூடவே, ஒவ்வொரு சிடியிலும் யார் பிரதான கலைஞர், பக்க வாத்தியக் கலைஞர்கள் யார், யார், என்னென்ன பாடல்கள், அவற்றின் ராகம், தாளம், அதை இயற்றியவர், அந்த ஆல்பத்தின் பெயர், வெளியிட்ட நிறுவனம், எந்தக் கடையில் எந்த ஆண்டு வாங்கியது என்ற விபரங்களையும், அந்தந்தப் பாடல்களுக்குக் கீழ் பதிந்தான். இந்த விபரங்ளை எல்லாம் தனியாக ஒரு எக்செல் ஷீட்டிலும் பதிந்து மொத்தமாக என் பணிநிறைவு விழாவன்று தந்தான்.

அவற்றில் நாடறிந்த இசைக் கலைஞர்களின் புகழ்பெற்ற பாடல்களும் உண்டு. அதிகம் பிரபலமாகாதவர்களும் உண்டு. மிக அபூர்வமான பாடல்களும் உண்டு. ஒரு சிடியில் மஹாராஜபுரம் சந்தானம் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்குழுவுடன் கர்னாடக இசைக் கச்சேரி செய்கிறார். மற்றொன்றில், தெரிந்தவர் வீட்டு விசேஷத்தில், செம்மங்குடியும், எம்.எஸ்.சுப்புலட்சுமியும் போட்டி போட்டுக் கொண்டு, கேஷுவலாகப் பாடுகிறார்கள். குன்னக்குடி வைத்தியநாதனின் கச்சேரிக்கு வலையபட்டியோடு போட்டி போட்டுக் கொண்டு ஜாகீர் ஹுசைன் தபேலா வாசிக்கிறார். ஒரு சிடியில் நளினி விநாயக் என்ற பெண்மணி சிதாரில் கர்னாடக இசை வாசிக்கிறார். மற்றொன்றில் பித்துக்குளி முருகதாஸ் பாடிய தியாகராஜர் கீர்த்தனைகள் மட்டும். முருகதாஸ் ஹார்மோனியம் இழையோட சோபில்லு சப்தஸ்வர பாடலை புல்லட் டிரெயின் வேகத்தில் இரண்டு நிமிடத்தில் பாடி முடிப்பார் !

இன்னொன்றில் திருவிழா ஜெய்சங்கரும், வலையபட்டி சுப்ரமணியமும் உடன் வாசிக்க, எஸ்.ஜானகி பரிபாலயமாம் பாடுகிறார். மற்றொரு பக்கம் நாமசங்கீர்த்தனம். ஹரிதாஸ் கிரியின் சம்பிரதாய பஜனை. மற்றொன்றில், அனுராதா போதுவால் தன் மகள் கவிதா போதுவாலுடன் பாடுகிறார். ஒரு சிடியில் அனுப் ஜலோடாவின் அப்பா புருஷோத்தம் தாஸ் ஜலோடா. சித்ரா, ஜக்ஜித் சிங், குலாம் அலி, பங்கஸ் உதாஸ், சிவகுமார் சர்மா, வி.ஜி.ஜோக், பிஸ்மில்லாகான், என்று கஜல், இந்துஸ்தானி கலைஞர்கள். கத்ரி கோபால் நாத்தும் ரோனு மஜும்தாரும், ஜுகல்பந்தி செய்கிறார்கள். இளையராஜா, எல்.சுப்ரமணியனின் ஃபியூஷன் ஒருபுறம். திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள்.

ஒரு ஆல்பத்தில் பண்டிட் பீம்சேன் ஜோஷியுடன் லதா மங்கேஷ்கர் இணைந்து பஜன் பாடுகிறார். மற்றொன்றில் எல். சுப்ரமணியம் இலலோ பிரணதார்த்தி என்ற கீர்ததனையை வாசிக்க பக்கவாத்தியமாக பாலக்காடு மணி அய்யர், வேலூர் ராமபத்ரன் இருவரும் மிருதங்கம், அல்லா ரக்கா தபேலா, விநாயக் ராம் கடம், ஹரிசங்கர் கஞ்சிரா, புதுக்கோட்டை மகாதேவன் மோர்சிங், சுபாஷ்சந்திரன் கொன்னக்கோல் என்று ஏகரகளையாக இருக்கிறது. பல்லாவூர் குஞ்சட்ட மாரார், அப்பு மாரார், சோட்டாணிக்கரா விஜயன், வைக்கம் சந்திரன், கடவல்லூர் அரவிந்தாக்ஷன் எல்லோரும் சேர்ந்து அடித்து தூள் பறக்கும் பஞ்சவாத்தியம் ஒரு ஆல்பம். Mozart Meets India என்ற ஆல்பத்தில் கத்ரி கோபால் நாத் வாசித்திருக்கும் ஒரு பிலஹரி ஃப்யூஷன் ஒரு தேவகானம். உங்களில் யாரேனும் பாலமுரளிகிருஷ்ணா பாடியிருக்கும் விஷ்ணுசகஸ்ரநாமம், பஜகோவிந்தம் கேட்டதுண்டா? கண்ணன் தந்த ஒரு ஆல்பத்தில் இந்த கேட்பதற்கரிய பொக்கிஷம் இருக்கிறது.

பிரசன்னாவின் கிட்டாரில் கர்னாடக இசை, பல்லடம் வெங்கடரமணராவின் ஹார்மோனியம், வெங்கடப்ப டோக்ராவின் சாக்ஸஃபோன், ஆனையம்பட்டி கணேசனின் ஜலதரங்கம், தண்டபாணி தேசிகர், கிட்டப்பா, முசிறி சுப்ரமணிய அய்யர், சௌடய்யா, அனந்தலட்சுமி சடகோபன், டி.முக்தா, டி.பிருந்தா என்று அபூர்வ சிந்தாமணிகள். மற்றொரு புறம் சிக்கில் குருசரண், டி.எம்.கிருஷ்ணா என்று சமகால வித்வான்கள். ரஃபி, லதா, முகேஷ், கிஷோர், ரத்தன், அனோகி ஆதாவிலிருந்து நிக்கா, சோடி சி பாத் என்று ஹிந்தியின் அத்தனை ரத்தினங்களும். போதாததற்கு பூபென் ஹசாரிகாவும் இருக்கிறார். பட்டியலில் ராஜ்கபூர் ஹிட்ஸும் உண்டு. மீனாகுமாரி ஹிட்ஸும் உண்டு.ஒரு காலத்தில் வானொலியில் மிகவும் புகழ்பெற்றிருந்த அமீன் சயானியின் பினாகா கீத்மாலா பாடல்களும் உண்டு. உண்மையில் அந்த 563 ஆல்பங்கள் பற்றியும் 563 தனித் தனி கட்டுரைகளே எழுதலாம்.

இவற்றையெல்லாம் இங்கு சொல்ல காரணம் இருக்கிறது. இன்று ஆகஸ்ட் 2 கண்ணனின் பிறந்த நாள். நான் எல்லோரையும் ஏதோ ஒரு பாடலின் மூலம் நினைத்து மகிழ்பவன். இன்று இந்த 4360 பாடல்களையும் நினைத்துக் கொண்டு அவனை வாழ்த்துகிறேன். அது மட்டுமல்ல, அவனை நினைக்கும் போது, இந்த 4360லும் இல்லாத ஒரு பாடலையும் நான் எப்போதும் நினைப்பதுண்டு.
கண்ணனை நினைக்காத நாளில்லையே…
உண்ணும் போதும், உறங்கும் போதும்
எண்ணம் முழுதும் கண்ணன் தானே….
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கண்ணா….
ச.சுப்பாராவ் (தொடரும்)

இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

இப்போதே பகிருங்கள்

2 Comments

  1. சபாஷ் சரியா…. ன collection. கண்ணன் அவர்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்தையும் உரித்தாக்குகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *