ஒரு கதை 23:கலைந்த வசீகரம்

கதைகளின்றி இயங்கிடாது உலகம். அதிலும் தான் ரசித்த கதைகளின் மீது பித்துப் பிடித்துக் கிடக்கும் வாசகர்களால்தான் தமிழ்க் கதையுலகம் மிளிர்கிறது. இலக்கிய உலகினில் தங்களுடைய விருப்பமான எழுத்தாளர்களின் கதாபாத்திரங்களை தங்களுடைய குழந்தைகளுக்கு பெயர்களாகச் சூட்டுபவர்கள் இன்றுவரையிலும் இருக்கிறார்கள். சோவியத் பேரிலக்கியமான தாய் நாவலின் நாயகன் பாவெல் எனும் பெயரை முன்னொட்டாக கவிஞர்களும். எழுத்தாளர்களும் எழுபதுகளில் தங்கள் பெயரோடு இணைப்பதை ஒரு மோஸ்தராகவே எழுபதுகளில் வைத்திருந்தனர். மு.வவின் அரவிந்தன் எல்லா ஊர்களிலும் அப்போது பிறக்கும் குழந்தைகளின் பெயராகிப் போனது

இலக்கிய வரலாறு. குறிப்பாக தமிழில் பெண் கதா பாத்திரங்களின் மீதான பெரும் விருப்பம் குறித்த கதைகள் தனித்து எழுதப்பட வேண்டியவை. புதுமைப் பித்தன் 99 கதைகள் எழுதியிருக்கிறார். ஆனால், அவருடைய செல்லம்மாள் கதாபாத்திரத்தின் மீதான ஈர்ப்பு வாசகர்களிடம் இன்று வரையிலும் இருக்கிறது. கு.அழகிரிசாமியின் திரிபுரம் கதையில் வருகிற நாரணம்மா, வெங்கட்டம்மா எனும் இரண்டு பெண்களும் இதிகாச கதாபாத்திரங்களை விட வலிமையானர்கள் என்பது திரிபுரம் கதையை வாசிக்கிற எவருக்கும் புரிதலுக்கு உள்ளாகும் எளிய உண்மை. தி.ஜானகிராமன் எழுதிய மோகமுள் நாவல் வெளி வந்த நாட்களில் யமுனா என்கிற பெயர் மீது பித்துக் கொண்டு அலைந்தவர்கள் உண்டு. மோகமுள் நாவலின் மையக் கதாபாத்திரம் யமுனா. நாவல் நிகழும் புலம் கும்பகோணம். யமுனாவைத் தேடி கும்பகோணம் போனவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பிய கதைகள் வித விதமாக எழுதப்பட்டிருக்கின்றன.

ஒரு சில கதாபாத்திரங்கள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்ல சாத்தியமற்ற ஆகிருதியுடன் நிலைத்து நின்று விடுகிறார்கள். அதிலும் குறிப்பாக சில பெண் கதை மாந்தர்கள் வாசகப் பரப்பில் இருந்து விலகிச் செல்வதேயில்லை. அப்படியான ஒரு கதாபாத்திரம் கங்கா. இது ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசம் கதையில் வருகிற கங்கா இல்லை. இது வேறு கங்கா. தவறிழைத்துவிட்டேன் என தடுமாறி தத்தளித்தவள் இல்லை இந்த கங்கா. வாழ்வினை அது முன்வைக்கும் சகல கீழ்மையையும் துணிச்சலுடன் கடந்து நின்றவள். தன்னையே எல்லாமுமாக்கிப் பார்த்த விசித்திரியவள். இந்த கங்காவை தமிழ்ச் சிறுகதைப் பரப்பிற்குள் கொண்டுவந்து சேர்த்தவர் எழுத்தாளர் அமுதா செல்வி. எழுத்தாளர் அமுதா செல்வியின் பசி கொண்ட இரவு எனும் கதைக்குள்தான் இந்த கங்கா உறைந்திருக்கிறார். கங்கா இதுவரையிலும் படைக்கச் சாத்தியமற்ற விசித்திரமான கதாபாத்திரம்.

எழுத்தாளர் அமுதா செல்வியின் கதை உலகம் முழுக்க தன்னுடலையே தின்னக் கொடுத்த மனுஷிகளின் வாதைகளின் துயர்மிகு பக்கங்களே. அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு பசி கொண்ட இரவு. பசி கொண்ட இரவு கதைத் தொகுதியின் சரி பாதிக்கும் மேலான கதைகள் பெண் உடல் அரசியலை உள்ளீடாக்கி கேள்வி எழுப்பிய கதைகளாகவே வடிவம் பெற்றிருக்கின்றன. விளிம்பிற்கும் வெளியே விதிக்கப்பட்டை வாழ்க்கையை கடத்திட தத்தளிக்கும் பெண் உலகின் மாயங்களை கதைகளாக்கியிருக்கிறார். அதிலும் அந்தப் பெண்கள் யாவரும் உதிரிப் பாட்டாளிகளே. அவருடைய நாவலான மையிருளியின் கதை உலகமும் பெண்களின் தனித்த வலிகளையே பேசுகின்றன. பசி கொண்ட இரவிற்குள் வருகிற எல்லாக் கதைகளுக்குள்ளும் விசித்திரமான பெண்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். பாடப்படாத இந்த நாயகிகளின் கதையை உச்சஸ்தாயில் பாடியவர் எழுத்தாளர் ஜி. நாகராஜன்.

அவர் மதுரை டவுன் ஹால் ரோடு வாழ்க்கையை ரத்தமும் சதையுமான கதைகளாக்கிக் கடத்தியவர். அவருடைய கதைகள் எங்கும் பாலியல் தொழிலில் வீழ்த்தப்பட்ட பெண் உலகின் துக்கங்களே கதைச் சொற்களாயின. அவருடைய பார்வை எல்லையில் இருந்தும் தப்பி வந்தவள்தான் இந்த கங்கா. இந்த கங்காவின் கதையையே ஒரு கதைத் தொடரில் கவனப்படுத்துகிறேன். இந்த கங்கா அமுதா செல்வி கண்டெடுத்த கங்கா. அவருடைய பசி கொண்ட இரவின் கங்கா..

யார் இந்த கங்கா. அவள் இந்த ஊரின் தடித்த ஆண்களை தன்னுடைய காலடியில் வீழ்த்தியவள். அவளைத் தேடிப் போகாத ஆண்களே அந்த ஊரில் இல்லை. தனக்குள் ஒடுங்கி புனிதன் என தன்னைக் கட்டமைத்துக் கொண்ட மனிதனும் ரகசியமாக கங்காவின் மீது மையல் கொண்டே அலைந்திருக்கிறார்கள். அவளின் வசீகரத்தின் அடையாளம்தான் அந்த ஊரே..பசி கொண்ட இரவு கதை அவளுடைய துயரப் பொழுதினையே கதைச் சொற்களாக்கிக் கடத்துகிறது. அவளுடைய கொண்டாட்டமான நாட்களை அவள் குப்பையோடு, குப்பையாக இற்று விழுந்து கிடக்கும் நாள் ஒன்றில் அவளே நினைத்துப் பார்க்கிறாள் அதுவே கதையின் மையம். யாருமற்ற மரத்தடியில் பசித்துக்கிடக்கும் வயிற்றின் துயரத்தைக் கடத்திட வழிவகை தெரியாமல் கிடக்கிறாள்.. முன்பெல்லாம் அவளிடம் கொட்டிக்கிடந்தன வித விதமாக நகைகளும், ஆடைகளும்.

ஆனால் நைந்து போன உடைகளும்கூட இல்லாமல் தடுமாறிக் கிடக்கிறாள் இப்போது வெட்ட வெளியில். கதையே அவளுடைய மனதிற்குள்தான் நகர்கிறது. அந்த ஊரில் அவள் வைத்ததுதான் சட்டம். ஊத்துக்குளி ரோட்டில் கங்காவின் உடலின்மீது வேட்கை கொண்டு அலைந்த ஆண்களின் குரூர முகங்கள் வரிசையாக அவள் முன் நகர்கின்றன. ஒரு காலத்தில் அந்த ஊரின் அடையாளமாக இருந்த பெரிய நகைக் கடை அதிபர் அவளை அணுகுகிறான். கங்கா எப்போதும் ஆண்களைப் பரிதவிக்கச் செய்வதில் சாமர்த்தியசாலியாக இருப்பவள். முடியவே முடியாது என்கிறாள். அவனை அவளுக்குப் பிடிக்கவில்லையா?. அப்படி எதுவும் இல்லை. ஒரு பிகுதான். கங்காவை நினைத்தவுடன் யாரும் அடைந்து விட முடியாது. அவன் ஊர்ல எவ்வளவு வசதி படைச்சவனா இருந்தாலும் அப்படித்தான். கங்காவின் ஏற்பாட்டாளனை நெருக்குகிறான் அந்த வியாபாரி. அவன் வந்து கெஞ்சுவதும், இவள் மறுப்பதும் ஒரு பிள்ளை விளையாட்டைப் போல தினமும் நடக்கிறது. ஒருநாள் கங்காவே மனம் இறங்குகிறாள். கிறுக்குப்பய எதுக்கு இப்பிடி படுத்தி எடுக்கிறான்னு தெரியலையே. சரிப்பா. நான் வாரேன்னு சொல்லுன்னு அந்த நகைக்கடைக்காரனைப் போய் பார்க்கிறாள்.

கங்காவை அவன் பெண்ணாகப் பார்க்கவில்லை. பேரழகியான கங்காவை தங்க வைர நகைகளால் அழகு படுத்துகிறான். அவளுடலை ஆராதிக்கிறான். சாமி சிலைக்கு நகைகள் பூட்டியது போல கங்காவை நகைகளால் நிறைக்கிறான் அவளுக்கே கொஞ்சம் கிறுக்குத்ததனமாகத்தான் தெரிகிறது. ஆனாலும் ரசிக்கிறாள்.அவளிடம் எப்போதும் பணம் கொட்டிக்கிடந்தது. அப்போதெல்லாம் அவளைப் போலான பாலியல் தொழிலாளிகள் அவளைச் சுற்றிக்கிடந்தனர். கங்கா அந்த ஊரின் ராணியாக வாழ்ந்திருக்கிறாள். எல்லோருக்கும் தன்னுடைய பணத்தையும் பொருளையும் அள்ளி அள்ளித் தருகிறாள். இந்த உடல் என்னுடையது. இந்த உடலின் ராணி நான் எனும் அதீத கர்வம் அவளை இயக்கிய நாட்கள் அவை. .உடலின் மீதான மனித வேட்கையும் விருப்பமும் எத்தனை காலத்திற்கு நீடித்து நிலைத்து நிற்கும்.

ஊரையே தன்னுடைய கடைக்கண் பார்வையில் கட்டுண்டு கிடத்திடக் காரணமாக இருந்த கங்காவின் உடல் சிதையத் துவங்கும்போது எல்லாம் தலைகீழாக மாறுகிறது. யாரும் அவளைத் தேடுவதில்லை. எல்லா வசீகரமும் உடலில் இருந்து மெதுவாக வெளியேறத் துவங்கும்போது கங்கா தடுமாறுகிறாள். அதன்பிறகு அவளுடலின் மீதான ஈர்ப்பற்ற நிலமாகி விடுகிறது ஊர். தன்னுடைய கடைசி நாளில் இருக்கும் பெண்ணொருத்தியின் துக்க நாள்தான் பசி கொண்ட இரவின் கதை. அவளுக்குப் பசிக்கிறது. ஊரையே விழுங்கிடாத் துடிக்கும் அகோரப்பசி. கையில் பணம் இல்லை. காற்றடைத்த பையாகிப் போனது கங்காவின் உடல். பசிக்கிறது. பசியைத்தவிர வேறு எதையும் அவளுடல் அவளுக்கு உணர்த்தவில்லை.

மனித வாழ்வின் துக்கப்பொழுதுகள் துளிர்விடத் துவங்கிவிட்டால் அதைக் கடந்திட மனிதர்கள் தடுமாறித்தான் போகிறார்கள். கங்கா. அந்த ஊரின் அடையாளம் அவள். இன்று யாருமற்ற வெளியில் பசியைக் கடத்திட வழிவகையின்றி மரணித்துப் போகிறாள். தனக்கு மூலதனமாக இருந்த தன்னுடலே தன்னைத் தின்று தீர்க்கும் என அவள் நினைத்திருக்கவே இல்லை. நினைப்பது போலான வாழ்க்கை எந்த நாளில் எளியவர்களின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது. இற்று வீழ்த்தப்பட்ட தன்னுடலில் பாம்பின் விஷமேற்றி மரணித்துப் போனாள் கங்கா. கங்காவை கொன்றது அவளுடலில் துடித்தலைந்த பசிதான்..இந்த உலகத்தில் சாதி, மத இன, பால்பேதமற்ற ஒற்றைத் தேவை பசி மட்டும்தான். ஊரின் காம வேட்கையை கடத்திய வேட்டை நிலமான கங்கா தன் உடல் பசியை பாம்பின் விஷமேற்றிக் கடக்கிற அந்த குரூரக் காட்சி கதையை வாசித்த எவருக்குள்ளும் தடுமாறித் தத்தளிக்கும்.
ம.மணிமாறன் (தொடரும்)

இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *