
1)தந்தை இறந்ததற்கும்- காரல்மார்க்ஸ்
தனதூர் வரவில்லையே!
விந்தை நிறைஇளைஞன்- வேறு
வேலைகள் வைத்திருந்தான்
சிந்தை முழுவதுமே- தத்துவம்
தேங்கிக் கிடந்ததினால்
வந்து இறுதிக்கடன்- செய்திட
மார்க்ஸும் முயலவில்லை
2)அறிஞராம் டெமாக்ரிடஸ்- உடனே
ஆதி எபிகுரஸை
உரிய முறைதன்னிலே- காரல்மார்க்ஸ்
ஒப்பீடு செய்துவந்தான்
அரிய முனைவர்பட்டம்- பெற்றான்
அப்போ தவன்வயது
இருபத்து மூன்றுமட்டும்- என்றால்
எவரிதை நம்புவாரோ!
3)மறுத்திட முடியாது- என்னும்
மதக்கோட் பாடுகளையே
அறிவின் துணைகொண்டுதான்- காரல்மார்க்ஸ்
அகற்றும் படிசொன்னானே
இறையி யல்எப்பொழுதும்- இருக்ணும்
இரண்டாம் நிலையிலென்றான்
முறையா கத்தத்துவமும்- இருக்கணும்
முதலிடம் தனிலென்றான்
4)வருடக் கணக்கினிலே- ஜென்னியை
மறந்திருந் தான்மார்க்ஸுமே
வருத்தம் இருந்ததுதான்- இருந்தும்
மங்கிட வில்லைநேயம்
பொறுமை காத்திருந்தாளே!- ஜென்னி
பூவுல கம்தனிலே
வெறுமை சுட்டபோதிலும்- மார்க்ஸை
வெறுத்திட வில்லையவள்
5)கருப்பாக இருப்பானாம்- அடர்ந்த
காடுபோல் முடியுண்டாம்!
இருகை முழுவதுமே- நிறைந்து
இருக்கு மாம்அடர்முடி
இருண்ட தாடியுடனே- காரல் மார்க்ஸ்
எப்போதும் இருப்பானாம்!
இரண்டு செவிகளிலும்- முடிதான்
இருக்குமாம் நிறையவே!
6)பேச்சுக் குறையுடனே- காரல்மார்க்ஸ்
பிறந்து வளர்ந்திருந்தான்
பேச்சில் சிறந்தவனும்- இல்லை
பேறறி வாளனுமே!
ஆச்ச ரியம்கொள்வார்கள்- அவனை
அருகிருந்து பார்ப்போரும்
தீச்சுட ராம்அவன்கண்- காண்போர்
திண்ணம் குலைவாராமே!
1842- பான் நகர்
(கண்ணிகள்)
7)ஆசிரிய ராகிட- மனத்தில்
ஆசைகள் கொண்ருந்தான்
நேசித்த வேலையுமே- கிடைக்க
நேரம் அமையவில்லை
வாசிக்கும் ரைன்லேண்ட்கெஜட்- பத்திரிகை
வாவென் றழைத்திடவே
ஆசிரிய ராகவே – ஆகி
ஆக்கப் பணிகள்செய்தான்
8)விறகுகள் சேகரிக்கும்- சிறு
விவசா யிகள்தமையே
விரட்டி யடித்ததன்று- அரசு
விதிகளை உருவாக்கி
சிறகாய் முளைத்ததன்று- மார்க்ஸின்
சிந்தையில் கம்யூனிஸம்
பிறகு புரிந்துகொண்டான்- அரசெனும்
பேயின் சுயரூபத்தை

9)நீடித் திருக்கவில்லை- இவ்வேலை
நீண்ட தினங்களுக்கே
ஆடித்தான் போனதுபார்!- அரசு
ஆங்கு அவன்கருத்தால்
கோடிகள் கிடைத்தாலும்- வேண்டேன்
கொள்கை பெரிதுயென்று
சாடி உதறிவிட்டான்- வேலையை
சட்டென காரல்மார்க்ஸும்
1843-குரூஸ்நாக்
10)காதலி ஜென்னியினை- காரல்மார்க்ஸ்
கல்யாணம் செய்துகொண்டான்
வேதனை ஏதுமின்றி- கொஞ்சநாள்
மேதினி யில்இருந்தான்
பேதங்கள் ஏதுமில்லா- உலகைப்
பிறப்பிக்க வேண்டிய
போதனை கள்தமையே- வகுக்க
பூதம்போல் காத்திருந்தான்.
– மனோந்திரா (தொடரும்)
இந்த கவிதைத் தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D லிங்கை கிளிக் செய்யவும்.



