காரல் மார்க்ஸ் சரிதம்- 1

கவிதை வடிவில்  காரல் மார்க்ஸ் சரிதம்- 1

கண்ணிகள்

பூவுல கம்தனைப் பொன்னுல காக்கிட
பொன்பொருள் செய்பவர் வாழ்வைத் திருத்திட
ஏவு கணைபோல் எழுந்தான் ஒருவன்
எழுதத் துணிந்தேன் அவன்தன் சரிதம்

கற்பனை யில்அன்று சோசலி ஸம்அது
காப்பாற் றிடவொரு ஆளின்றி நொந்தது
சிற்பமாய் நின்று தவித்த அதற்கொரு
ஜீவன் கொடுத்தான் அறிவியல் கொண்டு

பிறப்பு
(குறள் வெண்செந்துறை)

ஆயிரத்து எண்ணூற்றிப் பதினெட்டாம் ஆண்டு
ஆங்கொருமே மாதத்து ஐந்தாம்நாள் அன்று
தாயிடத்தை நிரப்புகின்ற நதிமொசெல்லே கரையில்
தக்கதொரு சிறுநகராம் டிரியரிலே பிறந்தான்

பெற்றவரோ அவனுக்கு காரல்மார்க்ஸ் என்று
பெயரிட்டு வளர்த்துவந்தார் பெருமைதான் கொண்டு
கற்றவரின் மகனாகப் பிறந்திட்ட மார்க்ஸும்
கல்வியிலே சிறந்தவனாய் விளங்கிட்டான் நாளும்

ஆயிரத்து எண்ணூற்றி இருபத்து நான்கில்
அதுவரையில் கொண்டிருந்த யூதமதம் விடுத்து
ஆவியினைத் துதிக்கின்ற கிறிஸ்தவத்தில் சேர்ந்தார்
ஆசையுடன் காரல்மார்க்ஸ் தந்தையவர் தானும்.

தந்தையொரு சிறந்தவக்கீல் வசதியான குடும்பம்
தனயன்கள் அவர்க்குநான்கு பெண்மக்கள் ஐந்து
மந்தையிலே ஒருவனல்ல மார்க்ஸ்ஒருமா மேதை
மழலையிலே கொண்டிருந்தான் நல்லறிவுப் போதை

எட்கரொடும் ஜென்னியொடும் கொண்டநட்பி னாலே
இருவரது தந்தைலுத்விக் நட்பினையும் பெற்றான்
உட்டோபி யன்சோச லிசத்துடனே மார்க்ஸும்
உட்கொண்டான் இலக்கியமும் அவர்மூலம் நன்றாய்

படிப்பு

பதினேழாம் வயதினிலே பட்டதாரி ஆனான்
பாங்குடன்பின் சட்டம்கற்க பான்நகரம் போனான்
மதிமயக்கம் கவிதையிலும் மதுவினிலும் கொண்டான்
மனம்தன்னில் கல்விபற்றிக் கவலையின்றி இருந்தான்

துடிப்பான பதினெட்டாம் அகவையிலே மார்க்ஸும்
தூய்மையான காதலைத்தான் ஜென்னியின்மேல் கொண்டான்
‘படி!பெர்லின் போய்’யென்று ஆணையிட்டார் தந்தை
பதறித்தான் போய்விட்டான் சற்றுநேரம் மார்க்ஸும்

பிரபுவம்சம் தனில்தோன்றி பேரழகாய்த் திகழ்ந்தாள்
பெருஞ்செல்வர் மகளான ஜென்னியென்னும் நல்லாள்
முரடனான காரல்மார்க்ஸ் மீதுகாதல் கொண்டாள்
மூக்கினிலே விரலைவைத்து உலகத்தார் பார்த்தார்
மனோந்திரா (தொடரும்)

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *