காரல் மார்க்ஸ் சரிதம்- 4

          (கண்ணிகள்)

1)செல்வம் பலதந்து- மகள்
ஜென்னியைத் தாய்தந்தாள்
செல்லும் இடமெல்லாம்- இருந்த
செவ்விய நண்பருக்கு
அள்ளிக் கொடுத்தார்கள்- இருவரும்
அன்புடன் சுயம்மறந்து
சல்லியும் மிஞ்சவில்லை- முச்
சந்தியில் நின்றாரே!

2)நண்பன் அர்னால்டுரூஜின்- புதிய
நாளேடு வொன்றினிலே
அன்புடன் பணிசெய்தான்- காரல்மார்க்ஸ்
அயலக மொன்றினிலே
துன்பம் பலகடந்து- மார்க்ஸவன்
துடிப்புடன் வேலைசெய்தான்
கண்போல் நாளிதழைத்தான்- காத்து
கருத்தை வளர்த்துக்கொண்டான்

3)லுத்விக் பயர்பேக்கெனும்- அறிஞர்
யாத்ததோர் தத்துவமாம்
சுத்தப் பொருள்தனையே- முதலாய்ச்
செப்பிடும் வாதமது
ஒத்த கருத்துடைய- மார்க்ஸும்
ஓரிடத் தில்பிரிந்தான்
வித்தகன் காரல்மார்ஸும்- அதனை
விளக்கித் தெளிந்தானே!

4)மாற்றம் எதுவுமின்றி- மனித
மனமும் இருக்காது
நேற்று இருந்ததுபோல்- எண்ணங்கள்
நித்தமும் இருக்காது
வேற்றுமை கள்விளையும்- சூழலில்
வேற்றுமை கள்இருந்தால்
ஏற்றிட வேண்டுமிந்தக்- கருத்தை
என்றுமா மேதைசொன்னான்

5)பொருள்முதல் வாதமதே- சிறந்த
பொக்கிஷம் என்றபோதும்
பொருளின்றிப் போய்விடுமே- நடைமுறைப்
போராட்டம் இல்லையெனில்
விருப்ப மதைமட்டுமே- கொண்டு
வேண்டி யதுவிளையா
விரும்பியே நடைமுறைப்- படுத்திட
வேண்டுமே தத்துவத்தை

6)உச்சம் அரசொன்றே- என்றான்
ஒப்பில்லா ஞானிஹெகல்
ஒச்சம் உடையதிந்தக்- கருத்தென
ஓங்கியே கூறினான்மார்க்ஸ்
சச்சரவு கள்செய்தான்- சிவில்
சமுகம் பெரிதெனவே
மிச்சம் மிகுதியின்றி- ஹெகலை
வீதிக்குக் கொண்டுவந்தான்

7)தர்க்கம் தனைக்கொண்டு- ஹெகலவன்
தத்துவத்தை அமைத்தான்
அர்த்தம் எதுவுமின்றி- உலகை
அகத்தினில் கண்டிருந்தான்
வர்க்க அரசியலைப்- பின்னர்
வகுத்திட்ட காரல்மார்க்ஸும்
சர்ப்பம் எனச்சீறினான்- புறத்தில்
தாரணி தன்னைக்கண்டான்

பாரிஸ்- அக்டோபர் 1843

குறள் வெண்செந்துறை

8)பாரிஸ் நகர்வந்தான் பாட்டாளி கள்தலைவன்
பாரியாள் தன்னோடு பத்திரிக்கை தான்நடத்த
தேரில் பவனிவந்த ஜென்னியெனும் நல்லாளை
சிறைபோல் சிறியதொரு வீட்டினிலே வாழவைத்தான்

9)எண்ணற்ற அறிஞர்கள் ஈங்கவனைக் கண்டார்கள்
எல்லையில்லா ஞானமதை மார்கஸிடத்தே கண்டார்கள்
பண்பட்ட அவன்செயலைப் பார்த்தே வியந்தார்கள்
பாரினிலே மார்க்ஸைப்போல் யாருமில்லை யென்றார்கள்

10)கொண்டுவந்த செல்வத்தைக் கூடையிலே ஜென்னிவைத்தாள்
கொண்டுசென்றார் தேவைக்குக் கூடவந்த தோழர்கள்
கண்டுகொள்ள வில்லையதை காரல்மார்க்ஸ் தம்பதியர்
காசுபணம் அத்தனையும் காலியாகிப் போனதையோ!
மனோந்திரா ( தொடரும்)

,இந்த கவிதைத் தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-+2 லிங்கை கிளிக் செய்யும்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *