
1844
( எழுசீர் விருத்தம் )
1)உழைப்பினில் இருந்தே உழைப்பவன் பிரிந்தான்
உலகினில் முதல்முறை யாக
இழைத்தனன் இந்தக் கருத்தினை மார்க்ஸும்
இளைஞனாய் இருந்தஅப் போதே!
உழைப்பினிற் கேற்ற ஊதியம் தன்னை
ஒருவரும் கொடுப்பது இல்லை
பிழைத்திட மட்டும் போதிய அளவு
பெறுகிறார் உழைப்பவர் உலகில்2)இப்படி வந்து தனியுட மைதான்
இறுக்கியே பிழியுது உழைப்பை
செப்படி வித்தை செய்யுது உழைப்பைத்
தின்றிட வேஅது நித்தம்
ஒப்பவே இல்லை ஒருகணம் கூட
ஒப்பிலா காரல்மார்க்ஸ் உள்ளம்
சொப்பனம் கண்டான் சுரண்டலை ஒழித்துத்
துடைத்திட காரல்மார்க்ஸ் தினமும்
3)தனியுட மைதான் சுரண்டலுக் கெல்லாம்
தலையெனத் திகழுது என்றான்
இனியிதி லிருந்து விடுதலை பெற்றால்
ஏழ்மையும் ஒழிந்திடும் என்றான்
கனியுது காலம் புரட்சிகள் தோன்ற
கருத்துடன் உழைக்கணும் என்றான்
பனியென விலகும் உழைப்பவர் துயரம்
படையெனத் திரண்டிடில் என்றான்
4)எத்தனை தளைகள் மனிதரைப் பின்னி
இருக்குது பூமியில் இன்னும்
சொத்துகள் எல்லாம் பொதுவெனப் போனால்
தொலைந்திடும் தொல்லைகள் யாவும்
அத்தனை அடிமைத் தளைகளும் தகரும்
அனைவரும் விடுதலை பெறுவர்
தத்துவம் இதனை தந்தனன் காரல்
தாரணி தழைத்திடத் தானே!

(அறுசீர் ஆசிரிய விருத்தம்)
5)தகதக வென்று மின்னும்
தத்துவம் தன்னைத் தந்த
ஹெகலது கொள்கை பற்றிக்
கிடந்தனன் காரல் மார்க்ஸும்
உகந்தநல் இயங்கி யல்தான்
உரைத்தனன் அந்த ஞானி
அகன்றது இருளும் பாதி
அவனது கோட்பாட் டாலே
6)பழம்பெரும் ஹெகலும் இந்தப்
பாரினில் ‘இயக்கம்’ என்னும்
அழகிய பதுமை செய்து
அதனையே கவிழ்த்து வைத்தான்
இளைஞராம் காரல் மார்க்ஸும்
ஏங்கல்ஸும் சேர்ந்து கொண்டு
களையுடன் பதுமை தன்னைக்
கால்களில் நிற்க வைத்தார்
7)கருத்தினை முதலாய்க் கொண்டு
கட்டினான் ஹெகலும் கோட்டை
திருத்தினான் காரல் மார்க்ஸும்
தெளிந்தது இயங்கி யல்தான்
பருப்பொருள் தானே என்றும்
பாங்குடன் முதலாம் என்றான்
விருப்புடன் அதைத்தான் ஏங்கல்ஸ்
மிகமிக நன்று என்றான்
8)பொருள்முதல் வாதம் தன்னை
ஃபூயர்பேக் வகுத்துத் தந்தான்
பொருளதில் இல்லை என்றும்
பொதுவாய் இருக்கு தென்றும்
கருதின காரல் மார்க்ஸும்
கருத்துடன் சிறப்பை மட்டும்
உருவியே எடுத்துக் கொண்டு
ஒட்டினான் இயக்கம் தன்னை
9)தரித்திரம் இருப்ப தெல்லாம்
தனியுட மையால் தானே!
சரித்திரம் சொல்லும் சேதி
சத்தியம் இதுவே தானே!
நரித்தனம் செய்வ தெல்லாம்
நாறிடும் பூர்ஷ்வா வர்க்கம்
அரிக்குது அதுதான் என்றும்
ஆலையில் தொழில்செய் வோரை
10)புரட்சிகள் இன்றி என்றும்
பூமியில் மலர்ச்சி இல்லை
மிரட்சியில் இருக்கும் மக்கள்
வேதவை தீர்வ தில்லை
இரக்கமே இன்றிக் கொல்லும்
என்றுமே பூர்ஷ்வா வர்க்கம்
உரக்கவே எடுத்து இந்த
உண்மையைச் சொன்னான் காரல்
–மனோந்திரா (தொடரும்)
இந்த கவிதைத் தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D லிங்கை கிளிக் செய்யும்.



