
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை உடனடியாக நிறைவேற்ற முடியாது என்று உயர்நீதிமன்ற;த்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது
மதுரை மாவட்டம், எழுமலையைச் சேர்ந்த ராம.ரவிக்குமார் என்பவர், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற பலமுறை உத்தரவிட்டார். ஆனாலும், அந்த உத்தரவை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தவில்லை.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. குறிப்பாக நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றினால் மட்டுமே வழக்கை முடித்து வைக்கப்படும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவுகளை எதிர்த்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கடந்த ஜூன் 4-ம் தேதி அவமதிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதி என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான ராம.ரவிக்குமார் தரப்பு வழக்கறிஞர், புதிதாகப் பொறுப்பேற்ற தமிழக அரசு உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார். அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள். அவமதிப்பு வழக்குகள் ஒருபுறம் இருந்தாலும், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாமே என்று கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம் வழங்கியிருந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு தரப்பில் இன்று (ஜூன் 22) தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கின் உத்தரவை உடனடியாக நிறைவேற்ற முடியாது. தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கோயில் தரப்பு, தர்கா தரப்பு மக்களை இணைத்து ஏன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணக்கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.



