
தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு தமிழைக் கூட சரியாக பேச தெரியவில்லை என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தவெகவின் 100 நாட்கள் ஆட்சி சினிமா படம் பார்ப்பது போல உள்ளது. எதார்த்தத்திற்கும் ஆட்சிக்கும் சம்பந்தமில்லை. இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் இளைஞர்களை கவர்ந்து மாற்றம் என வாக்குறுதிகளை சொல்லி அவர்களே ஆட்சிக்கு வருவோமா என தெரியாமல் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டு மக்கள் தங்களது தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளரே தெரியாமல் சினிமா கதாநாயகனை நம்பி வாக்களித்து குடும்பத்தினரை வாக்களிக்க வைத்துள்ளனர்.
தமிழைக் கூட சரியாக வாசிக்க தெரியாதவர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்கியுள்ளனர். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தமிழை கூட சரியாக பேச தெரியவில்லை. 24-ம் புலிகேசி ஆட்சிபோல உள்ளது. சினிமாவில் இருந்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வந்தார்கள் ஆனால், அவர்கள் ஆட்சியில் எதாவது இது போன்று குற்றச்சாட்டுகள் இருந்ததா? 1969-ல் காங்கிரசுக்கு மாற்றாக அண்ணா ஆட்சி அமைத்த போதும், 1979-ல் எம்.ஜி.ஆர் ஆட்சியின் போதும் இளைஞர்கள் பதவியேற்ற போதும் தரமான அரசியல் தலைவர்களாக இருந்தார்கள், அமைச்சர்களாக, சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தார்கள். படிப்பறிவில் வளர்ந்த தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்துள்ளது. ஜென்-சி தலைமுறைகள் மற்றும் இளைஞர்கள் யாரென்று தெரியாத நபரை தவறான ஆட்சியை உருவாக்கியிருக்கிறார்கள். ஆதவ் அர்ஜூனா மில்லி லிட்டர் என சொல்ல தெரியாமல் மில்லி மீட்டர் என்கிறார். தமிழ் பேச தெரியாது என சொன்னால் கிறிஸ்துவ மதம் என நிதியமைச்சர் சொல்கிறார். மதத்திற்கும் மொழிக்கும் என்ன சம்பந்தம்? சபாநாயகர் நடுநிலையாக பேசுவதுபோல அமைச்சர்களை தவறான கருத்தை பேசவைக்கிறார். விவசாயிகள் தண்ணீர் காலம் தாழ்த்தி திறப்பதாக வருத்தத்தில் உள்ளனர்.
நூறு நாட்கள் முதலமைச்சர் மௌன விரதம் இருக்கிறார். அவர்கள் எல்லோருக்குமே 4 -ம் வகுப்பு மாணவனுக்கு உள்ள அடிப்படை, கணிணி குறித்து தெரியவில்லை. விஷமத்தனமான ஒரு எண்ணத்தில் தவெக எம்எல்ஏ, அமைச்சர்கள் உள்ளனர். விஜய்யால் எழுதிவைக்காமல் பேச முடியுமா என தெரியவில்லை” என்று கூறினார்.



