
திமுக அளவுக்கு பாஜக எதிர்ப்பில் தவெக உறுதியாக இல்லை என்று மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில், ” ஓர் ஆட்சியை 50 நாட்களில் மதிப்பிட்டு விட முடியாது. அதற்கு தவெகவுக்கு இன்னும் கால அவகாசம் தேவை. மேலும் அந்த ஆட்சிக்கு நிலைத்தன்மையும் தேவைப்படுகிறது. ஏனெனில்,. முதலமைச்சர் விஜய் உட்பட அனைவரும் ஆட்சி நிர்வாகத்திற்கு புதியவர்கள். ஆயினும் அவர்கள் அறிவில் சிறந்தவர்கள் என்பதால் விரைவில் கற்றுக்கொள்வார்கள். அந்த பொறுப்பே அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும்.
திமுக அளவுக்கு பாஜக எதிர்ப்பில் தவெக உறுதியாக இல்லை. பாஜக எதிர்ப்பை தவெகவும் வெளிப்படுத்தினால் தான் தமிழகத்திற்கு நல்லது. ஏனெனில், பாஜக எதிர்ப்பை வலியுறுத்தித்தான் தவெக ஆட்சிக்கான ஆதரவுக் கடிதத்தில் கையெழுத்திட்டோம். திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்ததில் எந்த தவறும் இல்லை. ஜனநாயகத்தில் அது ஏற்புடையது தான். எனினும் பின்னணியில், பாஜக இருப்பதாக கருதியதால் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
தவெக ஆட்சி அமைக்க காலதாமதம் செய்து ஆளுநர் துடித்ததின் பின்னணியில் பாஜக தான் காய் நகர்த்தியதாக நாங்கள் திடமாக நம்பினோம். அதேபோல், போட்டி அரசாங்கம் நடத்தி, ஆட்சியில் தலையிடும் ஆளுநர் பதவி தேவையற்றது. ஆளுநரின் செயல்பாட்டிற்கு முதலமைச்சர் விஜய் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” என்றார்



