
ரூ.100 கோடி மதிப்புள்ள மெத்தம் பெட்டமைன் என்ற போதைப்பொருள் பதுக்கிய தவெக நிர்வாகி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுகன். இவரது விடுதியில் போதைப்பொருள் கடத்தல் நடப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சுகனின் வீட்டில் மத்தியப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இன்று (அக்.16) திடீரென சோதனை நடத்தினர். அப்போது மெத்தம் பெட்டமைன் என்ற போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சுகனும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து இந்தத் தடை செய்யப்பட்ட போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக சுகன் உள்ளிட்டோரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது தவெக நாகப்பட்டினம் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான பூபாலனின் தூண்டுதலின் பேரிலும், அவரது தொடர்புகளோடும் போதைப்பொருள் கடத்தல் அரங்கேறியதாக தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து சிந்தாமணி கிராமத்தில் உள்ள தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சுமார் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள், பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மதிப்பு 100 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புடைய தவெக நிர்வாகி பூபாலன் மற்றும் அவரது நண்பர் சுகன் ஆகியோர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, பூபாலனைத் தவெகவின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கி நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் சுகுமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளார்



