
பாசிச அரசியலை தொடங்க ஆழம் பார்ப்பதாக தவெக அரசு மீது கனிமொழி எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.
கல்லூரி கல்வி இயக்ககம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதில், அரசு கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்பதை தடை செய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் இடதுசாரி மாணவர் அமைப்பு நடத்தக்கூடிய போராட்டத்திற்கோ சிஜேபி நடத்தக்கூடிய போராட்டத்திற்கோ செல்லாமல் தடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்ககம் திரும்பப் பெற்றது.
இதுகுறித்து தூத்துக்குடி திமுக மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ்தளப்பதிவில், “மாணவர்கள் ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு தடை விதிக்கும் வகையில் கல்லூரிக் கல்வி ஆணையர் வெளியிட்ட சுற்றறிக்கையை, கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு தவெக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதேபோல், நேற்று குஜிலியம்பாறை வட்டாட்சியரின் சர்ச்சைக்குரிய அறிக்கையும் வெளியாகி திரும்பப் பெறப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவின்றி அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்களா? அல்லது முதலில் தனது பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு வந்ததும் அதிகாரிகள் மீது பழியைப் போட்டு பின்வாங்குகிறதா இந்த அரசு? ஜனநாயக உரிமைகளைப் பறிக்க முயற்சிப்பதும், எதிர்ப்பு எழுந்ததும் பின்வாங்குவதும் தவெக அரசில் தொடர்கதையாகிவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



