
ஆளுநர் அர்லேகர் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரை அழைத்து அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை ஆய்வு நடத்தியது அத்துமீறிய செயல் என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை சவுராஷ்டிரா கல்லூரி விழாவில் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேற்று (ஜூலை 2) கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகையில் பிற்பகலில் ஓய்வெடுத்தார். அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையர் ராஜேந்திரன் ஆகியோரின் ஆளுநர் அர்லேகர் ஆலோசனை நடத்தியுள்ளார். அரசின் நலத்திட்ட உதவிகளைச் செயல்படுத்துதல், சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், “மதுரை, திருப்பரங்குன்றம் பகுதியில் சவுராஷ்டிரா கல்லூரி மற்றும் சென்னை தென்னிந்திய ஆய்வு மையம் இணைந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய ஐஎன்ஏ எனப்படும் இந்திய தேசிய ராணுவத்தின், ‘ஐஎன்ஏ வேர்களைத்தேடி’ என்ற தலைப்பிலான கட்டுரை மற்றும் குறும்படப் போட்டி பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் அர்லேகர், ‘மதுரை வைகை ஆற்றைப் பார்த்தேன். ஆறு உள்ளது, நீர் எங்கே? இதற்கு நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். துப்பாக்கி எடுத்து போருக்குச் செல்வது மட்டுமல்ல, நதிகளை மீட்பதும் தேசப் பற்றுதான். மதுரை இளைஞர்கள் இதை ஒரு இலக்காக மாற்றி வைகையை மீட்டெடுக்க முன்வர வேண்டும். வைகை ஆற்றை யாரும் சீரமைக்காவிட்டால், ஆளுநர் மாளிகையே களமிறங்கும்’ எனத் தெரிவித்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஆளுநர், மதியம் அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்துள்ளார். அப்போது மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையர் ராஜேந்திரன் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார். அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் விதம், சட்டம், ஒழுங்கு தொடர்பான விவகாரங்கள், வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பகல் 12.30 மணிக்கு துவங்கிய ஆய்வுக்கூட்டம், 1.30 மணி வரை நடந்தது.
அப்போது, நிர்வாக நடைமுறைகள், மக்கள் குறைதீர்ப்பு பணிகள், மின்னணு பயன்பாடு, நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள், பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த்தொற்று தடுப்பு பணிகள், கல்வித்துறை உள்ளிட்டவற்றில் ஒன்றிய அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்துதல் குறித்த ஆளுநரின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பில் தீவிர நடவடிக்கை, சட்டம், ஒழுங்கை முறையாக பாதுகாத்தல் போன்றவற்றில் காவல் துறையினரின் தொடர் நடவடிக்கைகள் குறித்து காவல் ஆணையரிடம் ஆளுநர் விளக்கம் கேட்டுப் பெற்றார் என்று செய்திகள் வந்துள்ளன.
ஆளுநர் அர்லேகர் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரை அழைத்து அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை ஆய்வு நடத்தியது அத்துமீறிய செயலாகும். மேலும் வைகை ஆற்றை சீரமைக்க ஆளுநர் மாளிகை களமிறங்கும் என்றும் பேசியிருக்கிறார். ஆளுநர் அர்லேகர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நிர்வாகத்தில் மூக்கை நுழைப்பது கடும் கண்டனத்துக்குரிய செயலாகும்.
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் அரசியலமைப்பு சட்டத்தின் வரையறைகளை மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இனியும் இதுபோன்ற நடவடிக்கைகளை ஆளுநர் தொடர்ந்தால், அவருக்கு எதிராகப் போராட்டங்களைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என வைகோ கூறியுள்ளார்.
இந்நிலையில் ஆளுநரை மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.



