தவெக கூட்டணியில் விசிக இடம் பெறும்… திருமாவளவன் திட்டவட்டம்!

தவெக கூட்டணி அமைந்தால், அதில் விசிக இடம்பெறும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், “ சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக எத்தனையோ ஆசை வார்த்தைகள் வந்தபோதும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பலவீனமடைவதற்கு ஒருபோதும் இடம் தரக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கடைசி நொடி வரை, திமுக தலைமைக்கு நாங்கள் தகவல் கொடுத்தோம். நட்புறவைச் சிதைக்கக் கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.

தவெக கூட்டணியில் சேருவோம் என்று முடிவெடுத்தால், நீங்கள் அமைச்சரானால்தான் தமிழகத்தில் எழுச்சி உருவாகும். அதற்கு நீங்கள் உடன்பட வேண்டும் என்று ரவிக்குமார் உள்ளிட்ட கட்சியினர் சொன்னார்கள். ஆனால், 30 ஆண்டுகாலம் உழைத்த தம்பி வன்னி அரசு போன்றவர்கள் அந்த நாற்காலியில் அமர வேண்டும் என்று விரும்பினேன். என்னைப் பற்றிய தனிப்பட்ட முடிவை எடுக்க எனக்கு அதிகாரமும் சுதந்திரமும் இருக்கிறது. 10 நாட்களுக்குப் பிறகுதான் தவெகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை நாங்கள் அறிவித்தோம்.

பெரும்பான்மை வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக வந்திருக்கிறது. அதில் நமக்கு முழு மகிழ்ச்சி இல்லைதான். காரணம், நாம் திமுக கூட்டணியில் போட்டியிட்டவர்கள்; நாம் எப்படி உடனே மகிழ்ச்சி அடைய முடியும்? ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளைகள் என்று அந்த கட்சியை விமர்சித்துவிட்டு, உடனே பதவிக்காகச் சென்று ஒட்டிக்கொள்ள முடியுமா? உங்களுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம், எனக்கு துணை முதலமைச்சர் பதவி தாருங்கள் என்றா நாங்கள் பேசினோம்? வன்னி அரசை அமைச்சர் நாற்காலியில் அமர வைத்த பிறகு, நானும், ரவிக்குமாரும், சிந்தனைச் செல்வனும் முதலமைச்சரை நேரில் சந்தித்துப் பேசினோம்.

அப்போது அவரிடம், மதச்சார்பற்ற சக்திகளாக களத்தில் மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ள எங்களைப் போன்றவர்களை நீங்கள் அழைத்து ஆதரவு கேட்டிருப்பது ஒரு துணிச்சலான முடிவு. ஆகவே, நீங்கள் எடுத்திருக்கும் இந்த நிலைப்பாட்டை அங்கீகரிக்க வேண்டியது எங்களது பொறுப்பு. மதச்சார்பின்மையில் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாடு, தேர்தலுக்கு முன்பு இருந்த சந்தேகத்தைப் போக்கியுள்ளது. எனவே, உங்களுக்கு ஆதரவு நல்குகிறோம்; உறுதியாக இருப்போம். என்றைக்கும் தோழமைக்கு உண்மையாக, நட்புக்கு உறுதியாக இருப்போம். ஐந்து ஆண்டுகள் வரை உங்கள் ஆட்சி தொடர நாங்கள் உற்ற துணையாக இருப்போம் என்று கூறினேன். இதில் என்ன துரோகம் இருக்கிறது?

திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லை என்று திமுக தலைமைதான் அறிவித்ததே தவிர, நான் இதுவரை அறிவிக்கவில்லை. தவெக கூட்டணியில் இருக்கிறோமா என்றும் நான் சொல்லவில்லை. தற்போதைய அமைச்சரவையில் நாங்கள் இருக்கிறோம். கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை கடந்த 1-ம் தேதி நடந்ததில் பங்கேற்றோம். இன்னும் அங்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அப்படி ஒரு கூட்டணி அமைந்தால், அதில் விசிக இடம்பெறும்; அதில் எந்த ஐயமும் இல்லை” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *