
ஆட்சி கலைந்துவிடுமோ என்று விஜய்க்கு பயம் உள்ளது என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று ( ஜூலை 11) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அரசியல் சூழல் யாரையும் இணைக்கும். பேரறிஞர் அண்ணாவும், ராஜாஜியும் ஒன்றிணைந்துள்ளனர். கடந்த காலங்களில் பல உதாரணங்கள் உள்ளன. திமுக கூட்டணியில் இருந்தவர்களை இழுத்து அமைச்சரவையில் இணைப்பது நியாயம் என்றால், எந்த கூட்டணியும் நியாயம் தான். திமுக – அதிமுக கூட்டணி உருவானாலும் ஆச்சரியமில்லை. சூழ்நிலை தான் அதை முடிவு செய்யும்.
இந்த தேர்தலில் விஜய் 35 சதவீதம், எங்கள் கூட்டணி 23 சதவீதம், திமுக கூட்டணி அதைவிட கூடுதல் வாக்கு வாங்கியது. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றால், அதை வீழ்த்துவதற்கான வியூகத்தை எதிர்க்கட்சிகள் அமைக்கும். விஜய் என்ன 50,60 வருடங்கள் சேவை செய்தாரா? சினிமா கவர்ச்சியில் தான் விஜய் ஆட்சிக்கு வந்தார். கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை என்பது கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் கதை தான்.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் கட்சிகள் மீது விஜய்க்கு நம்பிக்கை இல்லை என நினைக்கிறேன். குதிரை பேரம் என்றால் கோபப்படுகிறார். எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைப்பதும் ஊழல் தான். களவாணி என்று முதலமைச்சர் பேசுகிறார். அப்படியென்றால் எம்எல்ஏ களவாணி யார்? இன்னும் சினிமா நடிகராகவே விஜய் இருக்கிறார். அதைச் சொன்னால் கோபப்படுகிறார். சினிமா கிளைமேக்ஸில் பேசுவது போல பேசுகிறார். முதலமைச்சர் என்பதை உணர்ந்து பேச வேண்டும்.
கரூர் கூட்ட நெரிசலுக்கு யார் காரணமாக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு பேசியதை போலவே விஜய்யின் பேச்சு உள்ளது. ஆட்சி கலைந்து விடுமோ என்று விஜய்க்கு பயம் உள்ளது. அமமுகவின் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். நாங்கள் அதிமுகவுக்கு அந்த கூட்டணியில் தான் இருக்கிறோம். அமமுகவும் ஜெயலலிதாவின் கட்சி தான்” என்றார்.



