
மறைந்த இயக்குநர் கே.பாக்யராஜின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பிரபல இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் இன்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73. திரைக்கதை மன்னன் எனப்போற்றப்படும் கே.பாக்யராஜின் மறைவுக்கு பல்வெறு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியில் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் திமுக தலைவர் மு.கஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள கே.பாக்யராஜின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் கே.பாக்யராஜின் மகன் சாந்தனுவிற்கு ஆறுதல் கூறினார். கே.பாக்யராஜின் உடல் அரசு மரியாதையுடன் நாளை மதியம் 1:30 மணிக்கு அடக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் விஜய் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும். அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாக்யராஜின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது வீட்டிற்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பாக்யராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்திய சினிமாவில் முடிசூடா திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் பாக்யராஜ்.
தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர். திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு.” என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலர் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். திரைபிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஏராளமானோர் கே.பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



