நாமக்கல் அருகே விபத்தில் 4 மாணவிகள் பலி: முதலமைச்சர் விஜய் நிதி உதவி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழந்தனர். அவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் விஜய் நிதி உதவி அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சக்கராம்பாளையம் போயர் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி அமுதா. கூலித் தொழிலாளிகளான இந்த தம்பதியருக்கு 11-ம் வகுப்பு படிக்கும் நிவேதா(17), 7-ம் வகுப்பு படிக்கும் தனுஸ்ரீ(13), -6ம் வகுப்பு படிக்கும் அபிநயா(12) என்ற மூன்று மகள்கள் இருந்தனர். இவர்கள் மூவரும் எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தனர்.

இவர்கள் மூன்று பேரையும், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் படித்து வரும் அவர்களின் சித்தப்பா ரமேஷ் பாபுவின் மகள் சுபிதா என்ற கலைச்செல்வி (19) என்பவர் தினமும் டூவீலரில் வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம். நேற்று கல்லூரி முடிந்து சுபிதா டூவீலரில் சேகரின் மூன்று மகள்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். சக்கராம்பாளையம் பிரிவு ரோட்டை கடக்கும்போது அந்த வழியாக வந்த ராசிபுரத்தில் இருந்து நாமக்கல்லை நோக்கி தனியார் கல்லூரி பேருந்து அதிவேகமாக வந்து மோதியது. இதில் நான்கு மாணவிகளும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய டிரைவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், கல்லூரி பேருந்து ஓட்டுநர் பிரவீன்(23) என்பவரை போலீஸார் இன்று கைது செய்தனர். கல்லூரி பேருந்து மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று (செப்டம்பர் 4) இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் சாலை விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *