
அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தவெகவில் நாளை இணைவதாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுக நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. சட்டமன்றத்திலும் அதிமுக இரண்டு அணியாகவே செயல்பட்டு வருகிறது. தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து, எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார்.
இதன் தொடர்ச்சியாக இரு தரப்பினருக்கும் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனையடுத்து எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பில் இருந்த எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய எம்எல்ஏக்கள் திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், முன்னாள் கரூர் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததோடு, அதிமுகவிலிருந்தும் விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் நாளை இணைய உள்ளதாக சி.விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.



