
விழுப்புரம் அருகே 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலு. இவரது மனைவி பவானி. இவர்களது7 வயது மகள் பிறந்த நாளை அக்.11-ம் தேதி கொண்டாடியுள்ளனர். மறுநாள் எழுந்து பார்த்த போது சிறுமி காணாமல் போயிருப்பதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள், சத்தியமங்கலம் போலீஸில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அவரை யாராவது கடத்தியிருப்பார்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அத்துடன் மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆனாலும் சிறுமி காணாமல் போய் இன்றுடன் 11 நாட்களாகிறது. ஆனால், அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
ஆலம்பூண்டி ஊராட்சி முழுவதும் நூற்றுக்கணக்கான போலீஸார் தேடியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவரது வீட்டிற்கு அருகே இருந்த சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். ஆனால், வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், சிறுமி காணாமல் போன வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.



