மக்களை திசை திருப்பவே வெள்ளை அறிக்கை: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

மக்களை திசை திருப்புவதற்காக வெள்ளை அறிக்கை நாடகத்தை தவெக அரசு அரங்கேற்றியுள்ளது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் இன்று (ஜூன் 17) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு அரசின் கடந்த ஐந்தாண்டு கால நிதி நிலவரம் குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று (ஜூன் 16) வெளியிட்டுள்ளார். கடந்த 2021 முதல் 2026 வரையிலான ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலினும், நிதி அமைச்சர்களாக இருந்த பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு ஆகியோரும், இந்தியாவிலேயே நிதி மேலாண்மையில், தமிழ்நாடு மிகச் சிறந்து விளங்குவதாகவும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் இருப்பதாகவும் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தமிழ்நாடு வளர்ச்சி அடைந்த மாநிலம். தமிழர்களின் கடும் உழைப்பும், தொழில் திறனும், புதிய புதிய முயற்சிகளும், அறிவாற்றலும் தான் இதற்கு காராணம். ஆனால், கடந்த ஐந்தாண்டு கால திமுக அரசு, கடன் வாங்குவதிலும், தேவையற்ற ஆடம்பர செலவுகள் செய்வதிலும் தான் அதிகம் கவனம் செலுத்தியது. கல்வி, சுகாதாரம், மெட்ரோ ரயில், மேம்பாலங்கள், நெடுஞ்சாலைகள் என உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கடன் வாங்குவதில் தவறில்லை. ஆனால், கடன் வாங்கிய பணத்தை இலவச திட்டங்களுக்கும், வீண் விளம்பரங்களுக்கும் தான் திமுக அரசு வாரி இறைத்தது. அது மட்டுமல்லாது, திமுக ஆட்சியில் எங்கும் எதிலும் ஊழல் நிறைந்திருந்ததால் கடன் சுமையும் அதிகரித்துக் கொண்டே சென்றது.

இது பற்றி கடந்த ஐந்தாண்டுகளில் பலமுறை சட்டமன்றத்தில் நான் கேள்வி எழுப்பி இருக்கிறேன். தமிழகத்தின் நிதிநிலை மோசமாக உள்ளது பற்றியும், கடன் சுமை பற்றியும் நான் பேச ஆரம்பித்த உடனேயே, அமைச்சர்கள் எழுந்து வேறு ஏதேதோ புள்ளி விவரங்களை தெரிவிப்பார்கள். உத்தரப்பிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களை எல்லாம் உதாரணமாக கூறி சமாளித்து விடுவார்கள். வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே செல்வது பற்றி கவலையை வெளிப்படுத்திய போதெல்லாம் என்னை முழுமையாக பேசக்கூட அனுமதித்தது இல்லை. தமிழக நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் வலியுறுத்தி இருக்கிறேன். அதை திமுக அரசு ஒருபோதும் கண்டு கொள்ளவில்லை.

இப்போது முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, பதவியேற்ற 37வது நாளில் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. மின் வாரியம், போக்குவரத்து கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்து, தமிழ்நாட்டின் மொத்த கடன் ரூ.13 லட்சத்து 18 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த 2021 முதல் 2026 வரை ஐந்து ஆண்டு திமுக ஆட்சியில் மட்டும் சுமார் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. இப்போது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ.1,28,934 கடன் சுமை உள்ளது.

நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் இடம் பெற்றுள்ள புள்ளி விவரங்கள் அனைத்தும், ஏற்கெனவே எல்லோரும் அறிந்த ஒன்றுதான். தேர்தலின் போது அளித்த எந்த வாக்குறுதியையும் தவெக அரசு நிறைவேற்றவில்லை. 200 யூனிட் இலவச மின்சாரம், பயிர்க் கடன் தள்ளுபடி போன்ற சில வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் தந்திரமாக மக்களை தவெக அரசு ஏமாற்றி வருகிறது. இது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக வெள்ளை அறிக்கை நாடகத்தை தவெக அரசு அரங்கேற்றியுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும், மீண்டும் ஒருமுறை உண்மை வெளிவந்துள்ளது வரவேற்கத்தக்கது.

வெள்ளை அறிக்கை என்பது, வெறும் நாடகமாக மட்டும் இருந்துவிடக் கூடாது. வெறும் சொற்களில் அல்லாமல், செயலில் தமிழ்நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்தி காட்ட வேண்டும். தமிழ்நாட்டின் நிதி நிலையை மேம்படுத்தவும், கடன் சுமையை குறைக்க என்னென்ன செய்யப் போகிறோம் என்பதற்கான செயல் திட்டத்தை தவெக அரசு வெளியிட வேண்டும். வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள வருவாய் பற்றாக்குறையை குறைக்கவும், தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாயை அதிகரிக்கவும் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறோம் என்பதை வரும் பட்ஜெட்டில் நிதியமைச்சர் தெளிவாக அறிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழித்தால், மணல், கற்கள் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளையை தடுத்து முறைப்படுத்தினால், மின் வாரியம் போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை திறம்பட நிர்வகித்தால், கடன் வாங்கும் பணத்தை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டும் செலவழித்தால் தமிழ்நாட்டின் நிதி நிலைமை மேம்படும். வருவாய் பற்றாக்குறை வெகுவாக குறையும். கடன் சுமையும் குறையும்.

ஆட்சியின் துவக்கத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ள தவெக அரசு, இனி ஆண்டுதோறும் தமிழகத்தின் நிதி நிலையை மேம்படுத்தவும், கடன் சுமை குறைக்கவும் என்னென்ன செய்தோம். அதற்கு எந்த அளவுக்கு பலன் கிடைத்துள்ளது என்பது பற்றி வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். அப்போது தான், இப்போது வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்கு பலன் கிடைக்கும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *