விஜய் பிறந்த நாளில் தவெகவில் இணையும் சி.விஜயபாஸ்கர்?

விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து மே 10-ம் தேதி விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சி.வி.சண்முகம் தலைமையிலான 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த நிலையில், மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பேராவூரணி), சத்தியபாமா (தாராபுரம்) மற்றும் இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய நான்கு அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். சி.வி.சண்முகம், சி.விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் மன்னிப்பு கடிதம் கொடுத்த நிலையில், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த 4 பேர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்குமாறு பேரவைத் தலைவரிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில் கடிதம் அளிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் ,அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சென்னையில் பேரவைத் தலைவரை சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்பதாக பேரவைத் தலைவர் அறிவித்தார். இதனால் அதிமுக எம்எல்ஏக்களின் பலம் 42 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் பிறந்த நாள் விழா ஜூன் 22-ம் தேதி பனையூரில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் விஜய் முன்னிலையில் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *