
தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கட்சி இடம் பெறுகிறதா என்பது குறித்து பெ.சண்முகம் விளக்கமளித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் ஓசூரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தவெக அமைச்சரவையில் உங்கள் கட்சி இடம்பெறுமா என்று செய்தியாளர்கள் வினா எழுப்பினர். அதற்கு, “முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நாங்கள் இடம் பெறும் சூழல் வரும். அந்த சூழல் வரும் போது இந்த மண்ணிலே இருந்து கூட கம்யூனிச தோழர்கள் அமைச்சர்களாக வருவார்கள். அந்த காலம் நெருங்குகிறது. உங்கள் எதிர்பார்ப்புக்கு வாழ்த்துகள்” என்று மு.வீரபாண்டியன் பதிலளித்தார்.
இது தொடர்பாக ஒரு தொலைக்காட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அளித்த பேட்டியில், “இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியனிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும். இடதுசாரி கட்சிகள் இரண்டுமே அமைச்சரவையில் பங்கேற்பது இல்லை என்று இரண்டு கட்சிகளின் மாநிலச் செயலாளர்களும் ஏற்கெனவே அறிவித்துள்ளோம்.
தற்போது அமைச்சரவையில் இடம் பெற சூழல் இருப்பதாக வீரபாண்டியன் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக நாங்கள் அவரிடம் கேட்போம். ஆனால், மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில், அமைச்சரவையில் இடம் பெறுவது இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என்று கூறினார்.



