
சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளர் பூமணி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 79.
கரிசல் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையும், சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளருமான பூமணி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அவரின் இயற்பெயர் பூ.மாணிக்கவாசகம். தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையில் பணியாற்றி துணைப் பதிவாளராக ஓய்வு பெற்ற அவர், பின்னர் முழுநேர இலக்கியப் பணியில் ஈடுபட்டார்.
கரிசல் மண்ணின் மக்களின் அசல் வாழ்க்கையை தனது எதார்ப்பூர்வமான படைப்புகளில் பதிவு செய்த எழுத்தாளர் பூமணி. பிறகு, வெக்கை, நைவேத்யம், வரப்புகள், வாய்க்கால், அஞ்ஞாடி உள்ளிட்ட அவரது நாவல்கள் தமிழ் இலக்கிய உலகில் முக்கிய இடத்தைப் பிடித்தவை. அவரது அஞ்ஞாடி நாவலுக்கு 2014-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து இவரது படைப்புகள் புதிய தலைமுறையினரிடம் பரவலாக சென்றது.
பூமணியின்’வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ திரைப்படம் தேசிய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த பூமணி நேற்று இரவு காலமானார்.
அவரது இறுதிச்சடங்கு கோவில்பட்டி பாரதிநகரில் உள்ள அவருடைய வீட்டில் இன்று (13.07.2026) மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பூமணியின் மறைவுக்கு எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



