
திபெத் பகுதியில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 16 பேர் உயிரிழந்தனர்.
சீனாவின் திபெத்திய தலைநகர் லாசாவிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் நேற்று (அக்.22) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 173 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 7.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடர்பாடுகளில் சிக்கி 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 32 பேர் காயமடைந்தனர். இதில்11 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும், மற்றவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் முந்நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
நிலநடுக்கத்தால் சேதமடைந்த இடங்களில் மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த சேதங்களை மதிப்பீடு செய்து வருவதாகவும், காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அசம்பாவிதத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை உடனடியாக அளிக்கும்படியும், உயிரிழப்புகள் ஏற்படாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2025-ம் ஆண்டு திபெத்தில் 6.8 ரிக்டர் என்ற அளவில் உருவான நிலநடுக்கத்தால் 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.சீனாவின் திபெத் பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பேரழிவு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வருவதற்குள் நேற்று பயங்கர நிலநடுக்கம் உருவாகியுள்ளது மக்களை பீதியடைய வைத்துள்ளது.



