
ரஷ்யாவிடமிருந்து டீசல் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேற்காசியப் போர் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக அமெரிக்காவில் டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு கேலன் டீசலின் சராசரி விலை 3.68 டாலராக இருந்த நிலையில், தற்போது அது 6.28 டாலராக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் நவம்பர் மாதத் தொடக்கத்தில் நடைபெற உள்ளது. பணவீக்கம் அதிகரிப்பதும், எரிபொருள் விலை உயர்வதும் ஆளும் குடியரசுக் கட்சிக்குப் பெரும் அரசியல் சவாலாக உருவெடுத்துள்ளன.
இந்த நிலையில், அமெரிக்காவில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைக் குறைக்கும் முயற்சியாக, ரஷ்யாவிடமிருந்து டீசல் வாங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் தொலைபேசி வாயிலாக விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “புதினுடனான பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, அமெரிக்கா மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு முதற்கட்டமாக 3 லட்சம் டன்னுக்கும் அதிகமான டீசலை உடனடியாக விநியோகிக்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் மேலும் 5 லட்சம் டன் டீசலும், அதற்குப் பின்னர் 10 லட்சம் டன் டீசலும் கொள்முதல் செய்யப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தித் திறனைப் பொறுத்து, குறுகிய காலத்தில் கூடுதலாக 30 லட்சம் டன் டீசல் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கை மூலம் விவசாயிகள், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட அமெரிக்கப் பொதுமக்களுக்கு எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்படும் சிரமங்கள் குறைந்து நிம்மதி கிடைக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில், ரஷ்யாவிலிருந்து டீசல் விநியோகத்தை எளிதாக்கும் வகையில், ரஷ்ய எரிபொருள் தொடர்பான சில பொருளாதாரத் தடைகளை அமெரிக்க கருவூலத் துறை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த விலக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி வரை அமலில் இருக்கும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து டீசல் கொள்முதல் செய்யும் டிரம்ப்பின் முடிவுக்கு உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு, ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் தொடர்பான சட்டத்தின் கீழ் 100 சதவீத வரி விதிக்கப்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஆனால், அமெரிக்காவே ரஷ்யாவிடம் இருந்து டீசல் வாங்க முன்வந்துள்ளதால், இந்தச் சட்டத்தை வாஷிங்டன் எவ்வாறு நடைமுறைப்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்காவின் இறக்குமதிக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுமா என்பதையும் இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.



