
சில பாடல்கள் அவை வெளிவந்த காலத்தில் நம்மை ஈர்ப்பதில்லை. ஈர்க்காது போனாலும் பரவாயில்லை. அதன் காட்சியாக்கம் நம்மை எரிச்சலூட்டுவதும் உண்டு. ஏணிப்படிகள் படத்தின் பூந்தேனில் கலந்து… பாட்டு இப்படித்தான். என் சிறுவயதில் வந்த பிரபலமான பாடல். அந்த வயதிலிலேயே பாடலுக்குச் சற்றும் பொருத்தமில்லாமல் பாடல் காட்சி இருந்ததாக எனக்குப் பட்டது.
ஏணிப்படிகள்
சிவகுமாரும், ஷோபாவும் குதிப்பதும் ( பாட்டுக்கு நடுவே ஏனோ ஒரு ரயில் நிலையத்திற்குப் போவார்கள். தண்டவாளத்தில் குதி குதியென்று குதித்து, தேவையில்லாமல் ஒரு தரம் கைகாட்டி மரத்தின் ஏணியில் ஏறி இறங்குவார்கள் ! படத்தின் பெயர் ஏணிப்படிகள் என்பதாலோ? இந்தக் கூத்தை ஸ்டேஷன் மாஸ்டா் வீரராகவன் வேறு ரொம்பவும் ரசிப்பார் !) இதனாலேயே, அந்தப் பாட்டின் இனிமையை கவனிக்காமலேயே இருந்து விட்டேன். ஒன்றல்ல, இரண்டல்ல, ஏறத்தாழ 20-25 ஆண்டுகளுக்குப் பிறகே அந்தப் பாட்டின் இனிமையை கவனித்தேன். அதுவும் வாய்ப்பாட்டாக அல்ல. போலீஸ் பேண்ட் குழுவின் இசையில்.
போலீஸ் பேண்ட் குழு
ஒரு முகூர்த்த நாளின் காலையில் அய்யர் பங்களா பஸ் ஸ்டாப்பிற்கு எதிரே இருந்த அய்யாவுத் தேவர் திருமண மண்டபம் பக்கம் ( இந்த மண்டபம் இப்போது ராம்ராஜ் ஷோரூமாக மாறிவிட்டது) போய்க் கொண்டிருந்த போது மண்டப நுழைவாயிலுக்கு உள்ளே போலீஸ் பேண்ட் வாசித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது தான் பூந்தேனில் கலந்து பாடலை எடுக்கிறார்கள். மூன்று கிளாரினெட், இரண்டு ட்ரம்பெட், ஒரு சாக்ஸ், ஒரு ட்ரம்போன், இரண்டு கெட்டில் டிரம்ஸ், ஒரு பேஸ் டிரம்ப்ஸ், கப்பாஸ், ஜால்ரா என்று வலுவான குழு. நடுத்தர வயது ஏட்டையா ஒருவர் கிளாரினெட்டில் ஒற்றையாக பூந்தேனில் கலந்து…. என்று ஆரம்பிக்க, மொத்தக் குழுவும் தரதர. தரதர.. தரதர.. தரதர.. என்று குழுவயலின் பீஸை வாசித்து அமைதியாக, கிளாரினெடட் பொன்வண்டு எழுந்து… என்றதும் மீண்டும் அதே தரதர.. தரதர.. தரதர…தரதர… தள்ளாடி நடப்பதென்ன… என்று வாசித்து, மீண்டும் முதல்வரிக்குச் செல்லும் ஒரு நுட்பமான இடத்தில் கெட்டில் ட்ரம்ஸில் அற்புதமான பாங்கோஸ் நடையும் சேர்ந்து கொண்டது.
நான் மண்டப வாசலில் மெய்மறந்து நிற்கிறேன். இடையிசை முடிந்து பல்லவி ஆரம்பிக்கும் போது, மெயின் கிளாரினெட் ஏட்டையா என்னை, என் கண்களின் பரவசத்தைப் பார்த்து விட்டார்.
ஏறாத ஏணிதனில்
ஏறி நடப்பாள்
நல்ல நேரம் வரும்
என்றென்றும் நல்ல புகழ்
தன்னை வளர்ப்பாள்
என்ற இடத்தில் தன்னை என்ற வார்த்தைக்கு அவர் போட்ட சங்கதிக்கு நான் சிரக்கம்பம் செய்ததை அவர் கவனித்திருக்க வேண்டும். தில்லானா மோகனாம்பாள் சிவாஜி போல் வாசித்தபடியே, கண்களால் என்னை உள்ளே வரச் சொன்னார். கெட்டில் ட்ரம்ஸ் போலீஸ்க்கு அருகே இருந்த காலி சேரைக் காட்டி உட்காருமாறு ஜாடை செய்கிறார். பாட்டு அமர்க்களமாகப் போய்க் கொண்டிருக்கிறது. கிளாரினெட் வாய்ப்பாட்டு போல பேசுகிறது.

அவள் தான் கொண்ட புகழ்
என்றும் நான் கொண்ட புகழ் தான்
என் நெஞ்சில் வேறெந்த நினைவும் இல்லை
இதில் எனக்கும்
ஒரு மயக்கம்
இது எந்நாளும் குறைவதில்லை
என்ற இடத்தில் ஒரு மயக்கம் என்ற வரிக்குப் பிறகு கிளாரினெட் எஸ்பிபி போல லேசாக சிரித்தபடி இது எந்நாளும் குறைவதில்லை என்று பேசியதாக எனக்குள் ஒரு பிரமை. இது எந்நாளும் குறைவதில்லை என்ற இடத்தில் உடன் வாசித்து கெட்டில் ட்ரம்ஸ் நின்று குறைவதில்லையின் வவிற்கும், திக்கும் நடுவில் ஒரு உருட்டலுடன் சேர்ந்து கொண்டு என்னைப் புல்லரிக்க வைத்தது.
கிளாரினெட்
பல்லவியை எல்லோருமாகச் சேர்ந்து வாசித்து முடிக்கிறார்கள். எல்லோரும் நிறுத்தி, பாட்டு முடிந்தது என்று நினைக்கும் சமயத்தில் ஹா..ஹா..ஹ..ஹா…ஹா… என்ற ஒற்றைக் கிளாரினெட் ஹம்மிங் மட்டும் . அந்த இடத்தில் கே.வி.மஹாதேவன் இருந்திருந்தால், வாசித்தவரைக் கட்டியணைத்திருப்பார். நான் முடிந்தமட்டும் பலமாகக் கை தட்டினேன். இருந்த இடத்திலிருந்தே நன்றி என்பதாக லேசாக கையுயர்த்தி வணங்கியபடி நகர்ந்தேன். அவரும் கிளாரினெட்டை யானை துதிக்கையை உயர்த்துவது போல் லேசாக உயர்த்தி பதில் வணக்கம், பதில் நன்றி செலுத்தினார். அதன் பின் ஒவ்வொரு முறை இந்தப் பாடலைக் கேட்கும் போதும் அந்த போலீஸ் பேண்ட், அந்த கிளாரினெட், கெட்டில் ட்ரம்ஸ் ஞாபகம்தான். அவர்களுக்காக நான் சிவகுமாரைக் கூட ஒரு கட்டத்தில் மன்னித்து விட்டுவிட்டேன்.
இந்த சம்பவம் நடந்து இன்னும் 10-15 ஆண்டுகள் ஆகிவிட்டன. போன மாதம் ரிசர்வ் லைன் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் முடிந்த சில நாட்களில் நானும், காயத்ரியும் மாரியம்மனை தரிசிக்கப் போனோம். பூ விற்கும் அக்கா கடையருகே செருப்பை விட்டுவிட்டு, காயத்ரி அரளி மாலை வாங்கிக் கொண்டிருந்த போது தான் கவனித்தேன். எதிரே அந்த பழைய கிளாரினெட் போலீஸ். ஓய்வு பெற்று விட்டார் போல. ஆனால் அதே பழைய ராணா டார் முறுக்குக் கம்பி உடல். காக்கி பேண்ட். மதுரையின் பெரும்பாலான போலீஸ்காரர்கள் அணியும் லைட் ரோஸ் கலர் அரைக்கைச் சட்டை. முழுவதும் நரைத்துப் போன தங்கப்பதக்கம் சிவாஜி மீசை. தலைமுடியை வெட்டினாரா, இல்லை ஷேவிங் செய்தாரா என்று சந்தேகப்படும் படியாக சுத்தமாக கரைத்த போலீஸ் வெட்டு.
என் காதில் ‘இதில் எனக்கும் ஒரு மயக்கம் இது எந்நாளும் குறைவதில்லை ‘ என்ற வரி என் கண்முன் அவர் வாசிப்பது போல் ஒலிக்கிறது.
என்னையறியாமல் கை கூப்புகிறேன். அவரும் தன் தளர்ந்த கைகளால் என்னைக் கும்பிட்டபடி, “நல்லா இருக்கீங்களா தம்பீ…“ என்கிறார். நான் தலையசைக்கிறேன். அவர் மெதுவாக நடந்து செல்கிறார்.
நல்ல கலைஞனுக்கு தன் ரசிகனை எத்தனை ஆண்டு காலமானாலும் அடையாளம் தெரிந்து விடுமோ?
ஹா..ஹா..ஹா…ஹா.. ஹா… என்ற அவரது அந்த ஒற்றைக் கிளாரினெட் ஹம்மிங் எனக்கு மட்டும்தான் கேட்கிறதா? இல்லை இந்தப் பாண்டிய நாடு முழுவதற்கும் கேட்கிறதா? காயத்ரி என்னை உலுக்கி, “வாங்க, ” என்றாள்.
– ச.சுப்பாராவ்
( தொடரும்…)
1)https://maduraiseithi.in/s-subbarao-writes-ninaive-sangeetham1/
2)https://maduraiseithi.in/ninine-sangeetham-2-written-by-s-subbarao/




மதுரை நியூ சினிமா நினைவை கிளப்பி வுட்டுட்டீங்க! கே வி மகாதேவன் அவர்கள் தனது திரையுலக வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் (காலத்திலும் என்பதே சரியாக இருக்கும்)
அமைத்த சிறந்த பாடல்களில் ஒன்று. கண்ணிழந்த பிள்ளைக்கு… சுசீலா.
சத்யராஜ் பின்னாட்களில் புகழ் பெற்ற நடிகர் என்று பெயர் பெற்ற பின் இதே படம் ரீரிலிஸ் ஆகும்போது படத்தின் போஸ்டரில் சத்யராஜ் நீ…. ளமாக நின்று கொண்டு இருக்க சிவகுமார், சோபா படம் கீழே குட்டியாக இருந்ததை பார்த்துள்ளேன்!
ஒவ்வொரு நோட்சையும் கூர்ந்து ரசித்து இருக்கிறீர்கள். ரசிக்க ஒருவன் எதிரில் நிற்கிறான் என்பதை பார்த்து விட்டால், எந்த ஒரு கலைஞனும் அவனுக்காக மட்டுமே தனது கருவியை இசைக்கத் தொடங்கி விடுவான்! கூட்டத்தை மறந்து விடுவான், கண்களால் பேசுவான்! இன்னும் எழுதுங்க.
இக்பால்
மனதில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தியது இந்தப் பாடல் என்ற நினைவில் மூழ்கிவிட்டேன். நல்லவேளை நான் காணொளியைப் பார்க்கவில்லை. பின்னணி இசைக்காகவே ரசித்த பாடல். சம்பந்தமில்லாத காணொளி போலவே உச்சஸ்தாயியில் பாடப்படும் அபிநயசுந்தரி ஆடுகிறாள் என்ற பாட்டும் மிக மனவருத்தத்தைத் தந்த பாடலாக இருக்கிறது. இப்படிப்பட்ட முரண்களைப் பற்றியும் எழுதுங்கள்.