ஒரு கதை 13: தாலியில் பூச்சூடியவர்கள்

சுள்ளென வெறித்து வீழ்கிற வெயில் உருக்குகிறது நிலத்தை. உருகி உருகி கருநிறமாக பூத்துக்கிடக்கிறது நிலம். எப்போதாவது பெய்யென பெய்யும் மழையும் மொத்த வாழ்க்கையையும் சுருட்டி எடுத்துக் கொண்டு போய் குளம் குட்டைகளில் நிறைத்து விடுகிறது. மழைப்பாடு பார்த்த மனிதக்கூட்டம் விடிந்தும் விடியாத அதிகருக்கலில் மண்வெட்டி, கடப்பாரைகளோடு நிலம் நோக்கி நகர்கின்றது. நேற்று பெய்த மழையை எந்த ராட்சசன் உறிஞ்சி எடுத்து எங்கு கொண்டு போய் சேர்த்தான் என்பது தெரியாமல் திகைத்து நிற்கிறது ஊர். கால மழை கோடைமழையென இயற்கையின் எந்த காலக் கணக்குககளுக்குள்ளும் அடைபடாத விசித்திர நிலமிது.

இந்த நிலத்தில் கிடந்து நிலத்தை சீராக்கி, செம்மைப்படுத்தி தங்களை உழுகுடிகளாக உருமாற்றிக் கிடக்கிற மனிதக்கூட்டம். மிக நீண்ட காலமாக தங்களை கரிசக்காட்டு சம்சாரிகள் என வாய்வார்த்தையாக சொல்வதில்லை. எத்தனை சிரமங்கள் வந்தாலும் இந்த நிலத்தை விட்டு ஒரு போதும் நாங்கள் அகலமாட்டோம் எனும் வைராக்கிய மனிதர்களும், மனுஷிகளும் கரிசல்காட்டின் மனசாட்சிகளாக ஊர்களில் தங்கள் உயிர் மூச்சைப் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கரிசல் காடுகளை உழுநிலமாக உருமாற்றிட நிகழ்ந்திட்ட மனித உழைப்பையும், அதற்காக இழந்திட்ட வாழ்நாட்களைக் குறித்தும் பின்வரும் தலைமுறைக்கு மிச்சமாக இருப்பவை எவை. எத்தனை துயரத்திலும் இந்த நிலத்தின் மனிதர்கள் தங்கள் பேச்சை நிறுத்தவேயில்லை. இவர்கள் தீராத பேச்சுக்காரர்கள். பேசிய கதைகள். பேச மறந்த கதைகள் என கதைகளால் செழித்த நிலமிது.

பள்ளிக்கூடக்கல்வி கற்றுத்தராத வாழ்வின் நூதனங்களை இந்த நிலத்து மனுஷிகளின் சொலவடைகளும், அழிப்பான் கதைகளும் சொல்லாமல் சொல்கின்றன. அதனை வளர்த்தெடுத்து கதைகளாக உருமாற்றி இலக்கியப் புலத்தில் நிரவவிட்டிருக்கும் எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவர் பா.செயப்பிரகாசம்.அவருடைய கதைகளின் கதைகளின் வழியாக இந்த நிலத்தின் வாழ்க்கைப்பாடுகளை புரிய முடியும். கரிசல்காட்டு மனிதக்கூட்டத்தின் பாடு சோலிகளை கதைகளாக உருமாற்றிய தேர்ந்த வித்தைக்காரர் அவர்.

பா.செயப்பிரகாசம் கதைகள்.
பா.செயப்பிரகாசத்தின் கதைகளை கரிசல் வாழ்வின் அசலான பக்கங்களை எழுதியவை என ஒற்றைவரிக்குள் சுருக்கி மட்டும் மதிப்பிட முடியாது. கரிசலில் முளைத்து நிற்கும் காட்டுச் செடிகள்தான் அவரின் கதைகள். ஆனாலும் அவரின் கதைச்சொற்கள் ஊர் உலகமெல்லாம் சுற்றியலைகிறது. கதைச்சொற்களளை சுமந்து செல்பவர்கள் கரிசலின் மனிதர்கள். கரிசலின் வெம்மையை சுமந்த வார்த்தைகளால் வரையப்பட்டிருக்கும் பா.செயின் கதைகள் தமிழ்ச் சிறுகதை உலகினில் தனித்தசொல்முறையை உருவாக்கியிருக்கிறது. எழுபதுகளில் துவங்கி தன்னுடைய மரண நாளின் கடைசி நொடி வரையிலும் தீவிரமமாக கரிசல் வாழ்க்கையை கதைகளாக எழுதிக் கொண்டிருந்தவர் பா.செ. அவருடைய கதையின் ஆன்மா பசித்துக்கிடக்கும் மனிதர்களின் துயருற்ற சொற்களால் நெய்யப்பட்டவையே.

காலத்தைப் போன்ற மகா அரக்கனை கையாண்டு கதை சொல்வது எளிதான காரியமில்லை. ஒரு சொல் போதுமானதாக இருக்கிறது காலத்தின் மூடுதிரையை சற்றே விலக்கிட, பின் அதனைப் பற்றியெடுத்து விளக்கிட. கிராமத்து வாழ்வினை ரொமான்டிசைஸ் பண்ணி எழுதிடும் எந்த மொழிப்பம்மாத்தும் பா.செவின் கதைகளில் இல்லை. அவரின் கதைகள் வறுமை பிடிங்கித் தின்றதால் இற்று நொறுங்கியிருக்கும் ஏழை பாழைகளின் கதைகளை உக்கிரமான மொழியில் எழுதிக்கடத்துபவை. அவருடைய “அம்பலகாரர் வீடு, தாலியில் பூச்சூடியவர்கள், ஒரு ஜெருசலேம்” ஆகிய கதைகள் காலம் கடந்தும் நிற்கும் அமரத்துவம் பெற்ற கதைகள்.

தாலியில் பூச்சூடியவர்கள்
கிராமத்து வாழ்வினை எழுத்தாக்கிட நினைத்திடும் எவரையும் சவாலுக்கு அழைத்திடும் கருத்தியல் சாதி. அதன் வேர்களை அசைத்துப் பார்ப்பது அவ்வளவு எளிதில்லை. தொன்னூறுகளின் துவக்கம் வரையிலும் அது கிராமத்து இயல்பு என்பதாகவே எளிதில் கடந்து கொண்டிருந்தார்கள் கதைக்காரர்கள் பலரும். பா.செ. அப்போதே சாதி எனத் தலைப்பிட்டே ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அதிலும் அறிவர் அம்பேதகர் நூற்றாண்டில் நிகழ்ந்த அவருடைய படைப்புகள்தமிழில் கிடைத்த பிறகு இலக்கியப் புலத்தில் தலித் அழகியல், தலித் கோட்பாடு எனும் சொற்பதங்கள் கவனம் பெற்றன. அப்போது பலரும் சாதி மறுப்புக் கதைகளை எழுதிக் குவித்தனர். இப்படியான எந்தக் கவனமும் ஏற்படாத நாளிலேயே பா.செ தன்னுடைய தாலியில் பூச்சூடியவர்கள் எனும் கதையை எழுதியிருந்தார்.

கதையின் தலைப்பே நமக்கு ஒரு வரலாற்றுக் குறிப்பை தந்து நகர்கிறது. அந்த நாட்களின் பள்ளர் குடியிருப்புகளில் பள்ளர் சமூகத்து மக்ளுடன் ஒட்டர்களும், அருந்ததியர்களும் சேர்ந்தே வாழ்ந்திருக்கிறார்கள். மேல்சாதிக் காரரர்கள் என சாதியம் வரையறை செய்திருக்கும் சாதிக்காரப் பெண்களுக்கு மட்டுமே கூந்தலில் பூச்சூடிட உரிமை இருந்திருக்கிறது. வெகுகாலம். மற்ற சமூகத்துப் பெண்கள் எல்லாம் தாலியில் மட்டும்தான் பூச்சூடியிருக்கிறார்கள். தாலியில் மட்டுமிருந்த பூக்கள் எளிய மனுஷிகளின் தலைகளில் ஏறிட இந்த நிலத்தில் நடந்த போராட்டங்களையெல்லாம் ஆய்வாளர்கள் தனித்து எழுதவேண்டும். கதையில் வரும் தைலியின் மனவோட்டம்தான் கதையின் மையம். தைலி தனக்குள் நினைத்துக் கொள்கிறாள். என்னா ஊர் இது. ஒவ்வொரு புல்லிலும் சாதிய ஏற்றத்தாழ்வு படிந்திருக்கிறதே. புறக்கணிப்பட்டே நம் வாழ்வு நகர்கிறதே எனத் துடித்துப் போகிறாள். “ எங்கே போனாலும் இந்த புறக்கணிப்பு காத்திருக்கிறது. கம்மாய்த் தண்ணீருக்கு போக வேண்டும் என்றால்கூட ஊரைச்சுற்றித்தான் போகவேண்டும். என்கிறார்கள். குடிக்க தவிச்ச வாய்க்கு தண்ணிக்கு அல்லாடும் பஞ்ச காலத்தில் கூட வெகுநேரம் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. யாராவது அரைவாளி தண்ணீர் ஊத்த மாட்டார்களா என தூரந்தொலைவில் காத்திருக்க வேண்டியிருக்கு. இதை எப்பத்தான் கடக்கிறதோ?

ஊர் பெரிய மனுஷனுக்கு தைலியின் உடம்பின் மீது ஒருகண். இது தைலிக்குத் தெரியேவே செய்கிறது. நீ என்ன கேட்டாலும் செய்யிறேன் என்கிறது சாதித்திமிர். ஆண் வக்கிரத்திடம் தைலி சொல்கிறாள்.” எனக்குன்னு எதுவும் வேண்டாம். எங்க ஊரு கொமறுக, கிழவிக எல்லாம் ஊர்த்தெருவு வழியா நடந்து போய் குடிதண்ணி குளத்தில தண்ணியெடுக்கனும் அவ்வளவுதான்.. தினவெடுத்த ஆண்திமிர் அந்த நேரத்தைக் கடந்திட எல்லாவற்றிற்கும் சரி என்கிறது. இரவினில் காமப்பித்தில் பதுங்கிக் கிடந்த சாதிய மனம் பகலில் பல்லிளிக்கிறது. தைலி ஊர்த் தெருவிற்குள் தண்ணீர்க் குடத்துடன் நடந்து போகிறாள். அவ்வளவுதான் ஊர்க்கட்டுப்பாட்டை மீறினாள் எனக் குற்றம் சாட்டப்பட்டு அவளை ஊர்விலக்கம் செய்கிறார்கள் என பா.செ. கதையை முடிக்கிறார். கதைகளும் காலமாற்றத்தினை ஏற்று மாற்றம் பெற வேண்டியவையே. தாலியில் பூச்சூடியவர்கள் கதையை பா..செயப்பிரகாசம் எழுபதுகளில் எழுதியிருந்தார்.

புத்தாயிரத்தில் எழுதியிருந்தால் நிச்சயம் இப்படி எழுதியிருக்க மாட்டார். “தாலியில் பதுங்கியிருந்த மாரிக்கொழுந்தும், மல்லியும் தைலிக்கு மட்டுமல்ல அந்த ஊரின் எல்லாப் பெண்களின் தலைமீது கம்பீரமாக பூத்து நின்றது. தைலி காலில் செருப்பணிந்தபடி தரையதிர ஊர்க்குளத்திற்கு தண்ணீர்க்குடத்துடன் நிமிர்ந்து நடந்தாள். ஒதுங்கிக்கிடந்த தெருவே திரண்டு அவளின் பின்னால் குளம் விரைந்ததது.”..இப்படித்தான் எழுதியிருப்பார்.. கதைச் சொற்களின் வலிமையையும் ஆற்றலையும் எழுத்தாளன் காலத்தின் ஊடாகத்தான் நிச்சயம் கண்டடைவான். பா.செ. கரிசல் நிலத்தை விட்டு பெருநகர வாழ்க்கைக்குப் போன பிறகும்கூட அவருக்குள் நிறைந்திருந்த கரிசல் வாழ்க்கையும், அதன் சொல்லித்தீராத கதைகளும் அவரை விட்டு விலகவேயில்லை. மரணத்தின் கடைசி நாட்களில் அவருடைய கரிசல் நிலத்திற்கு வந்தடைந்தது அவருக்குள் இருந்த இந்த நிலத்தின் மீதிருந்த வேட்கையின் வெளிப்பாடுதான். இது பா.செயப்பிரகாசத்திற்கான மனநிலை மட்டுமல்ல. கு.அழகிரிசாமி, கி.ரா. துவங்கி இப்போது கதை எழுதிக் கொண்டிருக்கும் யாவருக்குள்ளும் உழலும் மனநிலைதான்.
ம.மணிமாறன் (தொடரும்)

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *