
பரபரப்பையும் உச்சத்தையும் எட்டியிருக்கிறது தேர்தல். அவரவர் மனங்களில் அவரவரின் வாக்கு எவருக்கு என்பது குறித்த உறுதியும் உருவாகியிருக்கும். கொள்கை வழி நின்று வாக்களிப்பவர்கள் அவரவர் சார்ந்த கட்சிகளுக்கு,இயக்கங்களுக்கு வாக்களிப்பார்கள். இந்த எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் இருபது சதவீதம் இருக்கலாம். இது ஒன்றும் துல்லியமான கணக்கீடு அல்ல.மீதமிருக்கும் பொது வாக்காளர்கள் யார்? அவர்களுடைய மனம் எப்படி அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காக நடத்தப்படுகிற தேர்தலை அணுகுகிறது என்பதை சட்டென கண்டுபிடித்துவிட முடியாது. அது ஒன்றும் ஒற்றைத் தன்மையிலானதும் இல்லை. ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வருகிற தேர்தல் நேரங்களில் மட்டுமே அரசியல் குறித்து மேலோட்டமாக பார்க்கும் வழக்கம் கொண்டவர்களே இங்கு அதிகம். அவர்களின் வாக்குகள் எவருக்குச் செல்லும். அதை எப்போது முடிவெடுப்பார்கள். இது சட்டென பதில் சொல்லிவிட முடியாத ஒரு நூதனமான விஷயம். இவர்களுடைய வாக்குகள்தான் அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாகவும் இருக்கிறது. இந்த பொது வாக்காளர்களின் மனம் எப்படி வளைக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்பதைக் குறித்து நுட்பமாக எழுதப்பட்ட கதை ‘மருமகள் வாக்கு’.
கிருஷ்ணன் நம்பி
புறக்கணிக்கப்பட்ட மனிதர்களின் துக்கங்களைப் பாடிய எழுத்துக்கலைஞர் கிருஷ்ணன் நம்பி. தமிழ் நவீன இலக்கியத்தின் மீது இன்றுவரையிலும் படர்ந்து கொண்டேயிருக்கும் துக்க நிழலின் சாட்சியவர். இளம் வயதில் மரணித்துப் போன பெரும் பட்டியலில் தனித்த கலைஞர் நம்பி. பாரதி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தமிழ்ஒளி,புதுமைப்பித்தன் என தன்னை மரணத்திற்கு தத்துக் கொடுத்த எழுத்தாளர்களின் வரிசையில் நம்பியும் சேர்ந்தது தமிழ்ச் சிறுகதை உலகிற்கு பேரிழப்பு. பாரதியை இங்கு எல்லோருமே தெரிந்து வைத்திருப்பார்கள். நவீன வாசிப்பு இருக்கிற பலரும்கூட தெரிந்து வைத்திருக்காத பெயர் கிருஷ்ணன் நம்பி. அவர் 27 சிறுகதைகள் மட்டுமே எழுதியிருக்கிறார். இளம் வயதை கடந்த நாளில் இறந்தும் போனார். தன்னுடைய கதைகளின் மைய அச்சாக அவர் கொண்டிருந்த உலகம் புறக்கணிக்கப்பட்டவர்களின் துக்கத்தையும் அவர்களின் பாடுகளையுந்தான். புறக்கணிக்கப்பட்டவர்களின் துக்கத்தைப் பாடிய மகா எழுத்துக்கலைஞனை இந்த இலக்கிய உலகம் கண்டு கொள்ளாமல் கட.ந்து போனது ஒரு விசித்திர முரண்.

முற்போக்கு முகாம்
அவர் மரணித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய சிறுகதைகள் முழுமையாக தொகுக்கப்பட்டது. ஆனாலும் அவருடைய கதைகள் கவனம் பெற முப்பது வருடங்களைத் தாண்ட வேண்டியிருந்தது. . கிருஷ்ணன் நம்பியின் ஆக்கங்கள் எனும் அவருடைய பஙகளிப்பினை தமிழ் வாசகர்கள் ஒருபோதும் தவற விடக்கூடாது.முற்போக்கு முகாமைச் சேர்ந்தவன் நான் என்பதை பகிரங்கமாக பிரகடனப்படுத்தியவர் அவர். அதற்காகவே அதி நவீன இலக்கியக்காரர்களால் புறக்கணிக்கப்பட்டார். எப்போதும் தரத் தராசுத் தட்டோடு தமிழ் இலக்கிய உலகில் வலம் வந்தவர் க.நா.சு. அவர் நம்பியின் சிறுகதைகளைக் குறித்து எழுதியிருக்கும் கருத்து நமக்கு மிகவும் முக்கியம் என்பதால் அதனையும் சேர்த்தே கவனத்தில் கொள்ளவேண்டும். “கிருஷ்ணன் நம்பி மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவருடைய சிறுகதைகள் உலகத் தரத்திலானவை அல்ல. அப்படி அவை ஆக முடியாமல் போனதற்கு அவர் வகுத்துக்கொண்ட இலக்கியக் கொள்கையான முற்போக்கு எனும் கருத்தியிலே காரணம்”. க.நா.சுவின் இந்த அபிப்ராயம் கிருஷ்ணன் நம்பி யாருக்காக எழுதினார்.யாரின் எழுத்தாளர் அவர் என்பதற்கான சாட்சியமாக இருக்கிறது.

தேர்தல்
‘நீலக்கடல்’, தங்க ஒரு, கணக்கு வாத்தியார் போன்ற தமிழின் மிக அபூர்வமான கதைகளை எழுதிய கிருஷ்ணன் நம்பியின் தேர்ந்த சிறுகதை மருமகள் வாக்கு. கதையின் முதல்வரி இப்படித் துவங்குகிறது.
“மறுநாள் தேர்தல். பூனைக்கும்,கிளிக்கும் இருமுனைப்போட்டி. கிளி அபேட்சகர் வீரபாகுக்கோனாரும், பூனை அபேட்சகர் மாறியாடும் பெருமாள் பிள்ளையும் உயிரைக்கொடுத்து வேலை செய்தார்கள். ஊர் இரண்டு பட்டு நின்றது.” காலத்தின் நிலைக்கண்ணாடியே கதைகள். முதல்வரியை படித்தவுடன் வாசகனுக்கு கதை நிகழும் காலம் மனதிற்குள் திறக்க வேண்டும்.அப்போதுதான் அது தேர்ந்த சிறுகதை. இது சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு நாடு கண்ட முதல் கிராமப்புற பஞ்சாயத்துத் தேர்தல் பற்றியது எனும் புரிதல் எல்லோருக்கும் வந்துவிடுகிறது. கதை முழுக்கவும் நிகழ்வது பெண்களின் தனித்த உலகினில். இது உள்ளாட்சித் தேர்தலைப் பின்புலமாக வைத்துக் கொண்டு எளிய மனங்களை அதிகாரம் எப்படி தனக்கானதாக வளைக்கிறது என்பதை நுட்பமாக பரிசோதித்த கதை.
இந்த கதையின் மையமான கதாபாத்திரங்கள் மாமியாரும்,மருமகளும். மாமியார் மீனாட்சி அம்மாள் மொத்த குடும்பத்தையும் தன்னுடைய முழு ஆளுகையின் கீழ் வைத்திருப்பவர். மொத்தக் குடும்பம் என்றால் பெரிதொன்றும் இல்லை. குமாஸ்தாவாக அரசுப்பணியில் இருக்கும் மகன். அவளுடைய மருமகள் ருக்குமணி, பால் கறந்து விற்றிட பசுமாடு அவ்வளவே. இந்த சின்ன எல்லைக்குள் தன்னுடைய அதிகாரத்தை ஒருபோதும் விட்டுத்தர விரும்பாதவர் மாமியார் மீனாட்சி. மருமகள் ருக்குமணியைப் பொறுத்தவரை இந்த வீட்டின் சகல வேளைகளையும் செய்வதற்காகவே இங்கு வாழ்க்கைப்பட்டு வந்தவள் என்பது மீனாட்சி அம்மாளின் கணக்கு. அவள் கிழித்த கோட்டை ருக்குமணி தாண்டக்கூடாது. இது ஒன்றும் அரட்டி உருட்டி அந்த வீட்டில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இயல்பாகவே மருமகள் மாமியாரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் கிளிப்பிள்ளையாக வார்க்கப்பட்டிருக்கிறார். பால் கறப்பது, மாட்டுக்கொட்டத்தை பராமரிப்பது, வீட்டு வேலைகளைப் பார்ப்பது என சுழன்று இயங்கும் ருக்குமணிக்கு இன்னும் குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. இயல்பில் துடிப்பும் வெடிப்புமாக அவளுடைய பிறந்த வீட்டில் இருந்தவள் ருக்குமணி. ஆனால் பேச்சு, ஓட்டம் எல்லாவற்றையும் ஒரு கல்யாணத்தில் தொலைத்துவிட்டவள் அவள்.
மாமியார் மீனாட்சி மருமகளிடம் போதனைகளை சதா காலமும் சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஏற்கெனவே உடைந்து நொறுங்கிடும் தன்மையிலான உடல்வாகு கொண்டவர் மருமகள் ருக்குமணி. உண்டி சுருக்கல் பெண்டிற்கு அழகு எனும் உலுத்துப்போன பழமொழியை எப்போதும் நினைவூட்டுவதை நிறுத்தவேயில்லை மீனாட்சி அம்மாள். கதை எழுதப்பட்ட காலம் 1970 என்பதைக் கணக்கில் கொண்டால் இதுதான் பெரும்பாலான தமிழ்க்குடும்பங்களின் இயல்பாக இருந்திருந்ததிருக்கிறது.. ருக்குமணி பேசிக்கொள்வது அந்த வீட்டின் பசுமாட்டிடம்தான். “சாப்பாட்டக் குறைச்சுக்கோன்னு உன்னைய நான் கட்டாயப்படுத்த மாட்டேன்.நல்லா சாப்பிடு, நல்லா பாலக்கொடு. அப்புறம் எனக்கு பொறக்கப்போற பிள்ளைக்கும் நீ தான் பால் கொடுக்கனும். அப்புறம் தேர்தல் பார்த்தியா, நான் யாருக்கு ஓட்டுப் போடனும்னு நீயே சொல்லு என பசுவிடம் தினமும் கோரிக்கை வைத்திட ருக்குமணி மறுத்ததேயில்லை.
ஆனாலும், அவளுடைய ஆழ்மனம் ஓட்டுபோடும் இந்த வாய்ப்பிலாவது தன்னுடைய மாமியாருக்கு எதிராக நாம் இருக்க வேண்டும் என அவளுக்குள் சொல்லிக்கொள்கிறது. தேர்தல் நாளில் எல்லோரும் ஓட்டுப்போடப் போகிறார்கள். அந்த வாக்குச்சாவடி வரிசையை கிருஷ்ணன் நம்பி விவரிக்கும் தொனியே அபூர்வமான காட்சியாக கதைக்குள் கடந்து போகிறது. ஆண்கள் வாக்களித்துவிட்டு வருகிறபோது அவர்களுடைய முகம் ஏதோ ஒரு ரகசிய சதியை திட்டமிட்டு நடத்திவிட்டது போல தென்படுகிறதாம். அதே நேரத்தில் பெண்கள் பெரும் விருப்பத்துடனும், சிரித்த முகத்துடனும் வாக்களித்துவிட்டு வருவதாகவும் நம்பிக்கு தோன்றியிருக்கிறது.

கிளியைத்தேடும் ருக்கு
தேர்தல் அன்று அதிகாலையிலேயே தன்னுடைய ஓட்டை பூனைக்குச் செலுத்திவிட்டு வந்துவிட்டார் மாமியார் மீனாட்சி. வேலையெல்லாம் முடித்தபிறகு வாக்களிக்க கிளம்புகிறாள் மருமகள் ருக்கு. ஊர்ப்பெண்கள் அவளை அழைத்துப் போக வருகிறார்கள். வந்தவர்கள் “என்ன மாமி காலையிலேயே ஓட்டு போட்டாச்சு போல, கிளிக்குத்தான ஓட்டுப்போட்டிங்க” என வம்பிழுக்கிறார்கள். மாமிக்கு சுள்ளென கோபம் வருகிறது. “உங்களுக்குத் தெரியாதாக்கும் நான் யாருக்கு ஓட்டுபோடுவேன்னு, நான் பூனைக்குத்தாண்டி ஓட்டு போட்டேன்” என்கிறாள். “அதுசரி மாமீ நீங்க பூனைக்கு ஓட்டு போட்டீங்க,உங்க மருமக ருக்குமணி எந்த சின்னத்துக்கு ஓட்டுப் போடப்போறா பூனைக்கா? அல்லது கிளிக்கா? என வம்பிழுக்கிறார்கள். ஏம்மா பொண்ணுகளா, என்னோட மருமகள எந்த விஷயத்திலயும் எங்கிட்ட இருந்து வேறுபடுத்த முடியாது. நானும் அவளும் ஒன்னு. என் சொல்ல ஒருநாளும் மீறமாட்டா,அவளும் பூனைக்குத்தான் ஓட்டுப் போடுவா.அத்தோடு நிற்கவில்லை.
நீ எப்படி ஓட்டுப் போட வேண்டும். அதில் பூனைச்சின்னம் எங்கிருக்கும். அதில் எப்படி முத்திரையிடனும்னு தெளிவாகச் சொல்லி அனுப்பி வைக்கிறாள் மாமியார். சரி சரி என தலையசைத்தபடி உற்சாமாக ஓட்டுச்சாவடிக்குப் போகிறாள் ருக்குமணி. போகும் வழியில் தனக்குள் நினைத்துக் கொள்கிறாள். கட்டாயம் பூனைக்கு வாக்களிக்கக்கூடாது. எனக்கு கிளிதான் பிடிச்சிருக்கு. நான் கிளிக்குத்தான் ஓட்டு போடுவேன் என மனதிற்குள் சொல்லிக்கொண்டே வாக்குச்சாவடிக்குள் போகிறாள். வாக்குச்சீட்டை பெற்று வாக்களிக்கும் மறைவிடத்திற்குள் சென்றுவிட்டாள். ஓட்டுச்சீட்டை விரித்து அவளுடைய திட்டத்தின்படி மாமியாருக்கு எதிராக தன் கருத்தை வெளிப்படுத்திட கிளியைத் தேடுகிறாள். இனி கதைக்குள் கிருஷ்ணன் நம்பி எழுதிய வார்த்தைகளிலேயே அந்தக்காட்சியை வாசிப்பதே அந்தக் கதையை முழுமையாக புரிந்து கொள்ள உதவும்.

“அவள் உடம்பு இப்படி பதறுவானேன்?.மாரும் லேசாக வலிக்கிறது. ஆ.ஆஆ கிளி,கிளிக்கு நேராக முத்திரையிட கை நெருங்கிவிட்டது. இப்போது ஒருகை ருக்குமணியின் கையைப்பற்றவும், அவள் யாரது என்று திரும்பிப்பார்த்தாள். யாரும் அங்கில்லை. ஆனால் அவள் கையை வேறொரு கை இறுகப்பற்றியிருந்தது போலத் தோன்றியது நிஜந்தான். . அது ஒரு பெண் கை. வேறு யாருடைய கையுமல்ல. அது அவளுடைய மாமியார் மீனாட்சி அம்மாளின் கைதான். கிளிக்கு நேர் எதிராக இருந்த அவளின் கையை பூனைக்கு எதிராக அவளுடைய மாமியாரின் கை நகர்த்தவும் பூனையின் மீது முத்திரை விழுந்துவிட்டது. வாக்களித்துவிட்ட வந்த ருக்குமணியிடம் யாருக்கு ஓட்டுப்போட்டாய் என பெண்கள் கேட்டபோது ருக்குமணி” நானா எங்க மாமியாருக்கு ஓட்டுப்போட்டேன் என்று சொல்லியபடி நகர்ந்துவிட்டாள். அவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது”
மேலோட்டமாக வாசித்தால் மாமியார், மருமகள் சிக்கலலைப் பேசும் கதைபோல தோற்றம் தரும் இந்தக்கதை நிஜத்தில் ஒரு நுட்பமான உளவியல் கதை. மனிதர்களின் ஆழ்மனதினில் கருத்துகள் எப்படி அதிகாரவர்க்கத்தால் விதைக்கப்படுகிறது. அதனை மீறமுடியாமவ் எப்படி மனிதர்கள் தடுமாறித் தத்தளிக்கிறார்கள் என்பதை நுட்பமாக கடத்திய கதை. பின்காலனிய காலத்தில் அதிகாரம் குறித்த தத்துவ விவாதங்கள் தத்துவத் தளத்தில் விரிவாக விவாதிக்கப்படுகின்றன. குற்றம், தண்டனை, சிறை ஆகியவற்றை பின்புலமாக வைத்துக்கொண்டு மனித மனங்களுக்குள் அதிகார வேட்கை எப்படி புகையைப் போல ஊடுருவிப் படர்கிறது என்பதை விரிவாக விவரித்தவர் மிஷேல் ஃபூக்கோ. அவருடைய நூல்கள் ஆயிரம் பக்கங்களில் விவரித்த கருத்தியலை தன்னுடைய ‘மருமகள் வாக்கு’ எனும் ஒற்றைக்கதையில் கடந்தவர் நம்பி. தேடிப்படியுங்கள்…ஃபூக்கோவையும், நம்பியையும்!
– ம.மணிமாறன் (தொடரும்)
1)https://maduraiseithi.in/m-manimarans-oru-kathai-1/
2)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-2/
3)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-3/
4)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-4/
5)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-5/



