
1)நான்குவரு டம்மூப்பாம் மார்க்ஸுக்கு ஜென்னி
நல்லகாத லுக்குஅது பெருமையென்று எண்ணி
வான்வெளியில் காதலெனும் சிறகடித்துப் பறந்தார்
வாழ்ந்துகாட்டி காதலுக்கு இலக்கணம்தான் தந்தார்
2)சட்டென்றே உடல்நலம்தான் குன்றியதால் அன்று
சயரோக அறிகுறிகள் தோன்றியது கண்டு
கட்டாயப் பட்டாள சேவையிலே இருந்து
காரல்மார்க்ஸ் பெற்றானே விதிவிலக்கும் ஒன்று
3)சட்டத்தைப் பயின்றதோடு தத்துவமும் கற்றான்
தலைநகராம் பெர்லினிலே தவப்புதல்வன் மார்க்ஸும்
திட்டவில்லை அவன்தந்தை ஹெய்ன்ட்ரிக்மார்க்ஸ் அதற்கு
தீவிரமாய்த் தத்துவத்தைக் கற்றுவந்தான் காரல்
4)ஹெகல்என்னும் ஞானியது தத்துவத்தை மெச்சி
கேண்மைகொண்டான் ‘’இளங் ஹெகலியர்” தம்முடனே காரல்
அகவயக்க ருத்துமுதல் வாதமதை ஒதுக்கி
ஆதரித்தான் புறவயக்க ருத்துமுதல் வாதம்
5)‘’இயக்கவியல்’ தத்துவத்தைக் ஹெகல்தந்தார் நமக்கு
எடுத்துஅதை மெச்சிஉச்சி முகர்ந்திட்டான் மார்க்ஸும்
மயக்கத்தில் கிடந்தஅந்தத் தத்துவமும் எழுந்து
மார்க்ஸின்சொல் கேட்டதுமே நடந்ததுயிர் பெற்று
6)‘கடவுளெடுத் துவைத்தஅடி பூமியிலே அரசு’
கருத்துயிதை ஹெகல்சொன்னார் ஏற்கவில்லை மார்க்ஸும்
தடமொன்று போட்டதிந்தத் தத்துவமும் மண்ணில்
தடையின்றி மன்னராட்சி தழைத்திருக்க வேண்டி

7)எதிர்மறைகள் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் என்று
எடுத்துரைத்தார் ஹெகலுமது ஏற்புடைய கருத்து
துதித்திதையே ஏற்றானே துடிப்புடைய மார்க்ஸும்
துரிதமாக கற்றானே ஹெகலின்தத் துவத்தை
8)‘பொருள்’தனையே மறுத்துடனே தாமாக நிலைக்கப்
போராடும், அதனாலே புதியபொருள் தோன்றும்
மறுப்பின்ம றுப்பென்றே இதனைஹெகல் சொன்னார்
மறுப்பின்றி அதனைத்தன் மனம்கொண்டான் மார்க்ஸும்
பத்திரிகையாளர்- 1838
கண்ணிகள்
9)அன்பு நிறைஅப்பாவும்- இறந்தார்
அற்ப வயதினிலே
துன்பம் தனில்துவண்டான்- காரல்
தூயதோர் அன்பினாலே
பொன்னை நிகர்த்ததந்தை- சாவினால்
பூமியை நொந்துகொண்டான்
தன்னைத்தான் தேற்றிக்கொண்டு- அவன்
தைரியம் தானடைந்தான்
10)அன்னையின் நெஞ்சினிலே- அவன்மேல்
அன்பு சிறிதுமில்லை
பின்னை அதனையெண்ணி- மார்க்ஸ்
பெரிதும் துயருற்றான்
தன்னை வறுமைவந்து- பெரிதாய்த்
தாக்கும் தருணத்திலும்
அன்னை இடத்தினிலே- அவனும்
ஆறுதல் தேடவில்லை
– மனோந்திரா (தொடரும்)
இந்த தொடரைப் படிக்க
1) https://maduraiseithi.in/the-biography-of-karl-marx-1/



