ஒரு கதை 9: குழந்தைமையே வாழ்வின் ஆதார ஊற்று

ஒரு மனிதரின் மீது ஏற்றப்படும் குற்றச்சித்திரம் எளிதில் அழித்து எழுதிட முடியாத விசித்திரமாக அவரின் மீது படிந்து விடுகிறது. அந்தச் சிலுவையைச் சுமந்து கொண்டுதான் அவரோ அல்லது அவளோ இந்த உலகினில் அவர்களுடைய மீத நாட்களைக் கடத்த வேண்டியிருக்கிறது. ஏதோ ஒருநாளில் பிசகிச் செய்த தவறுகள் இப்படி நம்மை வீழ்த்திடும் என அவர்கள் நிச்சயம் நினைத்திருக்க மாட்டார்கள்.

இளம் வயதில் பக்கத்து இருக்கை மாணவனின் பென்சிலை எடுத்ததற்காக அவனை பெருங்குற்றவாளியாக சித்தரித்த வகுப்பறைகள் இங்கு நிறைய உண்டு. அதன்பின் அந்த வடுவை சுமந்தபடியே வாழ்நாளினைக் கடத்திடும் எளிய மனிதர்கள் தன்னை மெய்பிக்க படாதபாடுபடுகிறார்கள்! . இது இப்படியான சில்லறைத் திருட்டிற்கு மட்டுமல்ல. அவர்களே அறியாமல் செய்திட்ட பிசகிற்காக எரிச்சலூட்டும் குற்ற அடையாளங்களை சுமந்தபடி வாழ்நாள் எல்லாம் மனம் குமைந்து அலைபவர்களால் நிறைந்த நிலம்தான் இது.அவர்களின் சார்பாக நின்று பேசிட கலைஞர்களால்தான் சாத்தியம்.

தமிழ்ச்சிறுகதைகளின் வளர்ச்சிப் போக்கில் தனித்த மாதிரிகளை உருவாக்கிய மகா எழுத்துக்கலைஞர் ஜெயகாந்தன். ஐம்பதுகள் வரையிலும் மேட்டுக்குடிகள் அல்லது நடுத்தர வர்க்கத்து மனிதர்களின் வாழ்வியல் பக்கங்களை மட்டுமே கதையாக்கிக் கொண்டிருந்தனர் எழுத்தாளர்கள். . தமிழ்க்கதைகளில்  விளிம்பிற்கும் வெளியே நிகழும் அதீத கணங்களை துணிந்து கதையாக்கியவர் எழுத்தாளர் ஜெயகாந்தன்.

பிராமணியத்தின் மீது ஏற்றப்பட்டிருந்த ஒழுக்கம்சார் மதிப்பீடுகளைத் தன் கதைகளின் வழியாக கலைத்தவர் அவர். அவருடைய  நாவலுக்குள், அவருடைய சிறுதைகளுக்குள் வெளிப்பட்ட கங்கா எனும் கதாபாத்திர வார்ப்பை மட்டும் பின்னனியாக வைத்து மிக நீண்ட கட்டுரை எழுத முடியும். எது தவறு/ இது தவறு என்றால் இதிலிருந்து வெளியேற முடியாதா எனும் கேள்விகளால் மொத்த சமூகத்தையும் விவாதத்திற்கு அழைத்திட கங்காவால் அறுபது,எழுபதுகளில் முடிந்தது. அக்கினிப்பரிட்சையில் ஒருகுடம் தண்ணீரில் சகல குற்றங்களையும் கலைத்து வெளியேறிய கங்கா பலருக்கும் நேசத்திற்குரியவள் ஆனாள். அதன் பிறகான ஜெயகாந்தன் கதைகளில் உதிரிப் பாட்டாளிகள் ,சில்லறைத் திருட்டில் சிக்கித் தண்டனை பெற்றவர்கள். வறுமை பிடிங்கித்திங்கும் இந்த வாழ்வினைக் கடத்திட வழியற்று தங்களையே மூலதனமாக்கிக் கொண்ட பாலியல் தொழிலாளிகள். இன்றைக்கு தமிழ்நாட்டில் காலாவதியாகப்போன கை ரிக்‌ஷா  தொழிலாளிகள் என அதுவரையிலும் கதைகளின் பக்கம் வரச்சாத்தியமற்று இருந்த உழைப்பாளிகளின் வாழ்வினை கதையாக்கியவர் எழுத்தாளர் ஜெயகாந்தன்.

இப்படியான அவருக்கு மட்டுமே சாத்தியமாகியிருந்த கதைஉலகின் தனித்த கதை,’ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது’ எனும் கதை. ஒரு குறுநகரத்தின் ஒண்டிக்குடித்தனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் மனதின் இயல்பினை கதையாக கடத்திட அவருக்கு ஒரு பூட்டியே வீடே போதுமானதாக இருக்கிறது. பத்து பனிரெண்டு குடும்பங்கள் குடியிருக்கும் ஒரு காம்பவுன்ட் குடியிருப்புகளை நோக்கி ஒரு ஓங்குதாங்கான இளைஞன் அதிகாலையில் வருகிற காட்சியில் கதை துவங்குகிறது.

அங்கு குடியிருக்கும் எல்லோருமே அவனைத் தெரிந்தும் வைத்திருக்கின்றன’ர். அவன் யார் என்பதை அதிகாலையில் பசுமாட்டின் முகத்தில் விழித்தல் எனும் ஐதீகத்தை சுமந்து அலையும் பிராமணன் ஒருவனைக் கொண்டு வாசகருக்கு அறிமுகம் செய்கிறார் எழுத்தாளர். வழக்கம்போல குஞ்சுமணி எனும் பிராமணன் அவருடைய வீட்டுச் ஜன்னலைத் திறந்து எதிர்வீட்டு மாட்டுக்கொட்டத்தை பார்க்க முயல்கிறார்.

அப்போது ஓங்குதாங்கான அந்த மனிநன் கையில் சாவிக்கொத்தோடு பூட்டிக்கிடந்த கடைசி வீட்டை நோக்கிப் போகிறான். அய்யருக்கு சாவிக்கொத்தில் ஆடுகிற அந்த பட்டன் கத்தி மட்டுமே கண்ணில்படுகிறது. அவர் உறுதியாக நம்புகிறார். அன்றைக்கு நடந்ததற்காக இன்று பழிதீர்க்க கத்தியோடு கிளம்பி வந்திருக்கிறான் அவன் எனும் நினைப்பே அவரை பதற்றமடையச் செய்கிறது.

மனிதர்களின் சுபாவங்கள் அவர்களுடைய வாழ்முறையால்தான் வடித்தெடுக்கப்படுகிறது. குஞ்சுமணி அய்யரின் கண்களின் வழியே அந்த நாளின் காட்சியை வாசகனுக்குள் கடத்துகிறார் எழுத்தாளர். எங்கோ திருடிவிட்டு போலீஸில் சிக்காமல் இருந்திட தப்பி ஓடும்போது கால்தவறி இந்த காம்பவுன்ட்டில் விழுந்தவன் அவன். அப்போது இந்த காம்பவுன்ட் வீட்டுக்காரர்கள் ஒவ்வொருவரும் நையப்புடைத்து போலீஸை வரவைத்து இவனை அவர்களிடம் ஒப்படைத்தனர். ஜெயிலுக்கு போனவன் இப்போது அதே காம்பவுன்டிற்கு பட்டன் கத்தியோடு வந்திருக்கிறான். அப்போது அய்யர் நினைத்துக் கொள்கிறார்,.”நான் எங்க அடிச்சேன். லேசா பால் கறந்த வாளிய வச்சு கன்னத்தில தட்டுனேன். அதுக்காக கத்தியோடவா இங்க கிளம்பி வாறாது” என மனசுக்குள் பேசுவதாக நினைத்துக்கொண்டே அங்குமிங்கும்  உலாத்துகிறார்.

அப்போதுதான் எதிர்வீட்டுக் கோனார் வருகிறார். அவரைப் பார்த்தவுடன்,” இந்த மனுஷன் தான் சிக்கினான் சின்னப் பையன்னு மாட்டக் கட்டுற கயித்தால ரத்தம் கொட்ட, கொட்ட அடிச்சுத் துவைச்சாரு. இன்னும் அந்த தளும்புகூட மறைஞ்சிருக்காது அதனால அவர குத்தி மல்லாத்தான் வந்திருக்கான் போலன்னு” மனசுக்குள்ள லேசா நிம்மதி பெருமூச்சு விட்டான். இப்படித்தான் மனிதர்கள் ஆபத்து தங்களை நெருங்கி வரும்போது, அந்த ஆபத்தில் இருந்து விலகிச்செல்ல அந்த ஆபத்துச்சுழலுக்குள் யாரையாவது தள்ளி விட்டுவிட்டு, தான் மட்டும் தப்பித்துச் செல்ல முயல்கிறார்கள்.

பெண்கள் தங்கள் கோபத்தை சட்டென வெளிப்படுத்திட பழகாதவர்களாக இருந்த காலம் அது. குஞ்சுமணியின் அம்மா சொல்கிறாள்.” இப்பிடி தண்ணீர் குழாயிக்கு பக்கத்தில இருக்கிற வீட்டில இப்பிடி திருட்டுப்பயல கொண்டு வந்து வச்சா எப்படி மத்த ஜனம் குடியிருக்கிறது. சின்னப் பிள்ளைங்க காதில கையில போட்டிருக்குற குண்டுமணி தங்கத்திற்க்கும் சேதாரம் வந்திராதா. இப்பிடி மச மசன்னு நின்னுக்கிட்டிருந்தா எப்படி? பேசாம மறுபடியும் போலீஸில் சொல்வோம்’..அந்த நேரம் பார்த்து மூனாவது வீட்டுக்காரரரு சைக்கிள்ல வாராரரு. அவரைப் பார்த்ததும் கோனார் மனசுக்குள்ள நினைச்சுக்கிறார். சம்பவத்தன்னைக்கு இதே மாதிரியா சைக்கிள்ல வந்த அந்தப் பையன் சைக்கிள்ல இருந்து இறங்கக்கூட இல்லை. அப்படியே உருண்டு திரண்டு இருக்கிற அந்தக் கால வச்சு நெஞ்சிலேயே மிதி மிதின்னு  இந்த மீசைக்காரன மிதிச்சாப்ல. ஒருவேளை அவரை வஞ்சம் தீர்க்கத்தான் இங்கயே வந்திருப்பான்.என அய்யர், பால்க்காரரை நினைச்சா, பால்க்காரர் இன்னொருத்தன நினைக்கிறாரு. இதுதான்யா மனுச சுபாவங்கிறதுன்னு இந்தக் கதையின் வழியே கோடிடுகிறார் எழுத்தாளர். பயம்தான் குடித்தனக்காரர்களின் அடையாளம்.

சைக்கிள்காரன் மெதுவாக வந்து நீ எப்பிடி இங்கன்னு கேட்கிறான். பதில் எதுவும் சொல்லவில்லை. வீட்டுக்காரர்ட்ட வாடகைக்கு வர்றரருதுக்கான அட்வான்ஸ் பண ரசீத காட்டுறான். சத்தமில்லாமா போன சைக்கிள்காரன். என்னப்பா இப்பிடி முதலியாரு திருட்டுப்பயல குடி வைச்சுப்புட்டாருன்னு புலம்பிக்கிட்டே போறான்.

மீசைக்காரனைப் பார்த்து அந்தக் காம்பவுன்டே பயப்படுது. அவன் வெளிவரும் நேரத்தில ஒருத்தரும் கண்ணில படுறதில்ல. அவனும், எங்க போறான்,எங்க வாறான்னு ஒன்னும் புலப்படல. பகல் எல்லாம் வீடு பூட்டியே கிடக்குது. ஒருநாள் பகல் பொழுதில பக்கத்து வீட்டு பாப்பா மீசைக்காரரு வீட்டுக்கு வருது. “ஆமா நீங்கதான் திருட்டு மாமாவா?. உங்ககிட்ட பேசக்கூடாது,  பார்க்கக்கூடாதுன்னு எங்க அம்மா சொல்லியிருக்கு. இன்னும் செத்த நேரத்தில கூப்பிட்டிரும். அதுக்குள்ள நீங்க சத்தமில்லாமா போயி, யாருக்குந் தெரியாமா அந்த பெட்டிக் கடையில இருந்து மிட்டாய் டப்பாவ மட்டும் எடுத்து தந்திரு…” மீசைக்காரருக்கு குழந்தையைப் பார்த்ததும் உள்ளம் நெகிழ்கிறது. உடனே கடைக்குப் போய் சாக்லெட் மிட்டாய்களை வாங்கி வந்து தருகிறான். எல்லாமே எனக்கு மட்டுந்தான்.  நான் யாருக்கும் தரமாட்டேன் என முதல் சாக்லெட் பேப்பரை பிரித்த மறுநொடியில் குழந்தையின் அம்மா கத்தி குழநந்தையைக் கூப்பிடுகிறாள். குழந்தையும் மிட்டாய் முழுவதையும் மாடாக் குழியில் போட்டுவிட்டு வீட்டுக்கு ஓடிவிடுகிறது.

எப்போதும் ஜெயகாந்தன்கதைகளில் வாசகன் முன்னுனர முடியாத சில ரகசிய பக்கங்களை பொதிந்து வைத்திருப்பார். அது பெரும்பாலும் கதையின் கடைசிப்புள்ளியில் தன்னை திறக்கும்போது வாசகர் அடைகிற பரவசம் அலாதியானது ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது கதையிலும் அப்படித்தான் செய்திருப்பார் எழுத்தாளர். ஒரு வாரமாக வீடு பூட்டியே கிடக்கிறது. அந்த காம்பவுன்டிற்குள் இயல்பான காலை விடிகிறது. அதுவரை இந்த திருட்டுப்பய எப்ப போவான் எனக் காத்திருந்து தண்ணீர் பிடித்துப் போன பெண்கள் பூட்டிக்கிடந்த வீட்டையே உற்றுப் பார்க்கிறார்கள். நல்ல வேளை தொலைஞ்சான் ,யாருக்கும் எதுவும் ஆகல என பேசி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு வந்த பெண்குழந்தை ஜன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப் பார்க்கிறது. அய்யய்யோ மிட்டாய் அப்படியே கிடக்கிறதே. வீடும் பூட்டிக் கிடக்கு. அப்பன்னா மிட்டாய் மாமா இனி வரவே மாட்டாரா என்கிறது குழந்தை…

எல்லோருக்கும் திருடனாக மட்டும் புரிதலுக்கு உள்ளாகியிருக்கும் அந்த மனிதன் குழந்தைக்கு மிட்டாய் மாமாவாக ஆகிப்போனார். குழந்தமை நம்மில் நிறைந்திருக்கும் போது குறைகளை நாம் கடந்து விடுவோம். குழந்தைமை நம்மை விட்டு அகல அகல மனித மனங்களுக்குள் குரூரம் குடிகொண்டுவிடுகிறது…அது நம் பக்கத்து வீட்டுக்காரர்களைக்கூட பகை காரர்களாக ஆக்கிவிடுகிறது. குழந்தமையை நமக்குள் வற்றாது நிறைத்து வைத்திடும் மனப் பயிற்சிகளே சம கால வாழ்வில் முதல் தேவையாக இருக்கிறது…
ம.மணிமாறன்         (தொடரும்)

1)https://maduraiseithi.in/m-manimarans-oru-kathai-1/

2)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-2/

3)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-3/

4)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-4/

5)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-5/

6)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-6/

7)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-7/

8)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-8/

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *