
தொடர்ந்து கவிதை செய்ய, வற்றாத சுனை நெஞ்சில் ஊறிக் கொண்டிருக்க வேண்டும். நீர் தளும்பிக் கிடக்கும் நிறை சுனை, எழுதத் தெரிந்த எல்லோர் வாழ்விலும் நிகழ்ந்து விடுவதில்லை. அது கவிஞர் சீனு ராமசாமிக்கு வாய்த்திருக்கிறது, எழுதித் தள்ளுகிறார். முதலில் தயை என்ற தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இரண்டெழுத்து சொல் தான், அதிகம் யாராலும் உச்சரிக்கப்படாத, எழுதப்படாத வார்த்தை என்றாலும், அதற்கு ஒரு வசீகரம் இருக்கிறது.
பொதுவாகவே கவிஞர் சீனுவின் கவிதைகளைத் தொடர்ந்து வாசித்து வருபவன் என்ற முறையில் சொல்கிறேன். அவரது புத்தகத் தலைப்புகள் மிகுந்த வசீகரம் கொள்கின்றன. மிக எளிதாக வார்த்தைகள் வந்து என்னை எடுத்துக் கொள் என்று இறைஞ்சுகின்றன என்று எண்ணுகிறேன். கவிதைகளும் அப்படியே, காலத்திற்கு தகுந்தாற் போல சின்ன சின்ன கவிதைகளில், பெரிய பெரிய செய்திகளை மிகச் சாதாரணமாக லாவகமாக சொல்லிச் செல்கிறார். அவருக்கென்று ஒரு பிரத்யேக மொழியொன்றை வரித்துக் கொள்கிறார். இது ஒரு சிறந்த கவிதைத் தொகுப்பு என்பதற்கு இன்னுமொரு உதாரணம், மதிப்புரை எழுதியிருக்கும் ரியாஸ் குரானா. அவர் கறாரான விமர்சகர் தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டார். முகத்தில் அடித்தது போல சொல்ல மாட்டார். பகடி கலந்து அவர் செய்யும் விமர்சனம் எழுதுவேரை கன்னம் பிடித்துக் கிள்ளும். எந்நாளும் எழுத்தின் பக்கம் திரும்பிப் பார்க்காமல் ஒடி விடுவார்கள். தமிழில் யாருக்கும் பயப்படாத துணிச்சலான விமர்சகர். ஆகவே இத் தொகுப்பு பெருமதிப்பு மிக்கது இனி கவிதைக்குள்,
கருணை எனும் தலைப்பில் உள்ள கவிதையும், புத்தகத்தின் தலைப்பும் ஏறத்தாழ ஒன்றாக இருக்கிறது. இயற்கை ஜீவராசிகளுக்கு வற்றாத குளத்தை, சூரியன் வந்து குடித்து விட்டு போய் விடாமல் பொத்திப் பாதுகாக்கிறது.ஒரு சாமானியனுக்கு குளத்தில் நீரருந்தும் ஆடு மட்டுமே தெரிகிறது. ஆனால் ஒரு கவிஞன் மட்டுமே பிரபஞ்சம் வைத்திருக்கும் இயற்கையின் கருணையை பிரித்தறிகிறான்.
பொறுமையாக வயிற்றுக்கு
நீரருந்தி விட்டு
மீண்டும்
தலைதூக்கிப் பார்த்து
மந்தையை நோக்கி
மேய்ச்சல் ஆடு போயினும்
குளத்தில்
கருணையின் அளவு
குறையாமல்
நிறைந்திருந்தது
பிரபஞ்சம் எவரையும் நிராதரவாக விட்டு விடாது, பசிக்கு இரை எங்கிருந்தேனும் அனுப்பப் பட்டு விடும் என்று உறுதியாக நம்புகிறார். ஏழைச் சிறுமிகள் ஊற்றும் பாலில், தெரு நாய்கள் பசியாறுவதை உலகம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறது.பசியால் கோடிக்கணக்கான உயிர்கள் செத்துக் கொண்டிருந்தாலும், அவர்களுக்கான உணவு எங்கோ விளைந்து கொண்டிருக்கிறது என்று நம்புகிறார். அவரது நம்பிக்கை மெய்ப்படட்டும்.
பிரபஞ்சம்
ஆதரவற்றவர்கள்
பிறக்கும் போதே
ஆதரிப்பவர்களும் பிறந்து விடுகிறார்கள்
இப்பூவுலகில்
பசியில் அலையும்
நாய்க்குட்டிக்கு
வறுமையில்
வாடிக்கொண்டிருக்கும்
சிறுமி இந்நகரில்
எங்கிருந்தோ வந்து விடுகிறாள்
வலி மிகுந்த ஒரு கவிதை சமகாலச் சூழலில் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. நானும் இம்மாதிரி கவிதையொன்றை எழுதிப் பார்த்திருக்கிறேன். இவ்வளவு சொற்சிக்கனத்துடன் ஒரு கனத்தை நெஞ்சுக்குள் புகுத்தி விடுமளவு இல்லை. எனவே அந்தக் கவிதையை அழித்து விட்டு இந்தக் கவிதையை சுகிக்கத் துவங்கி விட்டேன். உலகம் ஒருவரை குழியில் போட்டு புதைக்க முடிவு செய்து விட்டால், அதற்கான அத்தனை ஆயுதத்தையும் தயார் செய்கிறது.
அவனது சமாதியில் காலத்திற்கும் நினைவு கூறும்படியான கதையொன்றை, ஒரு ரோசாப்பூவை சொருகுவது போல சொருகி வைக்கிறது. வந்து நுகர்வோர் எல்லாம் அந்த வாசத்தில் மதிமயங்கி, சொல்லக் கூடாத கதையெல்லாம் சொல்லி சொல்லி, சமாதிகளை கோபுரங்களாக்கி, தொழுத் துவங்கி விடுகிறார்கள். யார் எழுதினால் என்ன, இது எனது கவிதை என்று உரிமை கொண்டாடத் துவங்கி விடுகிறது கவிதையின் ஜீவன்.
ஒரு கதை
எதையும் சுமக்க நினைப்பவனை
முதலில் பைத்தியமாக்குகிறார்கள் பிறகு கத்தவிடுகிறார்கள்
மருத்துவப் பலனின்றி
ஒவ்வொரு ஊரின்
பேருந்து நிலையத்திலும்
அவனை விட்டு விடுகிறார்கள்
அவனுக்கு பின்னே
நடக்காத ஒரு கதையை
நாய் வாலில்
கட்டிவிடுவது போல
கட்டியும் விடுகிறார்கள்
மனம் நிறைந்த கவிதைத் தொகுப்பு. உங்கள் நெஞ்சிற்கு நெருக்கமாக நிற்கக் கூடிய பல கவிதைகள் இத் தொகுப்பில் இருக்கின்றன. நமக்கு எழுதத்தான் நேரமில்லை, வாசிக்கவாது நேரம் ஒதுக்கி தயவு கூர்ந்து தயையை வாசியுங்கள். நேரமில்லையென்று சோம்பித் திரிவோர்க்கு கவிஞர் சீனு ராமசாமி ஒரு நல்ல உதாரணம். தொடர்ந்து கவி செய்ய வாழ்த்துகள் தோழர். அழகிய முறையில் வடிவமைத்த வேரல் புக்ஸ் நிறுவனத்திற்கு பாராட்டுகள்.
– செ தமிழ்ராஜ்
செ.தமிழ்ராஜ் எழுத்துலகம்
1)https://maduraiseithi.in/documentary-thiruparankundram-files/
2)https://maduraiseithi.in/book-review-kodaimadam-by-samraj/



