ப.கவிதா குமார் எழுதும் ‘பக்தியிசை பரப்பிய பாவலர்கள்’: இசைத்தொடர்

கட்டுரையாளர் : ப.கவிதா குமார் தமிழ்நாட்டின் மிக முக்கிய திரைப்பட ஆய்வாளர். வெளிச்சம் பாய்ச்சப்படாததிரையிசைக் கலைஞர்களைத் தேடிப் பிடித்து அடையாளப்படுத்தி வருபவர். நூறாண்டு தமிழ் திரையிசை குறித்து இவர் எழுதிய உருவமறியா இசைவெளி கட்டுரை நூல் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது. குங்குமம் வார இதழில் இவர் எழுதிய அறியப்படாத தமிழ் திரையிசை கலைஞர்கள் குறித்த மிக முக்கிய தொடர், உயிர்மை பதிப்பகத்தின் சார்பில் இன்று இப்படம் கடைசி என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. அரசியல், சமூகம், சாதி குறித்து இவர் எழுதிய உத்தப்புரங்களும் சாதியத்தின் அந்தப்புரங்களும், உத்தப்புரம்: உடையும் சாதியம் ஆகிய நூல்கள் தமிழ் சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியவை.

கடந்த 30 ஆண்டுகளாக பத்திரிகைத்துறையில் பணியாற்றி வரும் இவர் இந்து தமிழ், தினகரன், தீக்கதிர் உள்ளிட்ட நாளிதழ்களில் பணியாற்றியுள்ளார். மேலும் பல இணைய இதழ்களிலும் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். காயப்படும் காற்று, காதல் இல்லையென்றால் காற்றுக்கும் வேர்க்கும், அழுக்கான நெருப்பு, தலைப்பை இன்னும் யோசிக்கவில்லை, மழையில் மீன் பார்க்கிறது பூனை, என் கன்னக்குழி நிரப்பும் உன் சொற்களுக்கு முத்தமென்றே பெயர் ஆகிய 6 கவிதை நூல்களையும் எழுதியுள்ளார்.

பக்தியிசை பரப்பிய பாவலர்கள்

40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கோ.புதூரை நினைத்துப் பார்க்கிறேன். இப்போது சக்தி ஸ்வீட்ஸ் இருக்கும் இடத்தின் அருகில் தான் ஆர்.சி.பள்ளி அன்று கூரைக் கொட்டகையாக இயங்கியது. நான் ஒன்றாம் வகுப்பு படித்த பள்ளி அது. பள்ளியைத் தாண்டினால் கண்மாய் தான். எனவே, பள்ளியை விட்டு எங்கும் வெளியே அப்பா விடமாட்டார். மதிய நேரத்தில் பள்ளியில் இருந்து லூர்தன்னை திருத்தலத்திற்கு அழைத்துச் செல்வார்கள். அங்கு தான் நிறைய பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தேன். விண்ணுலகில் இருந்து தேவன் இறங்கி வருகிறான் என ரேடியோவில் பாட்டு கேட்டவுடன் லூர்தன்னை திருத்தலம் தான் நினைவுக்கு வரும்.

ஆனால், அன்றைய வீடுகளில் நிறைய குழந்தைகள் இருந்தனர். அவர்கள் வீட்டில் கட்டாயம் வானொலி பெட்டி இருக்கும். அதாவது ரேடியோ பெட்டி இருக்கும். எங்கள் வீட்டிலும் 6 குழந்தைகளுடன் ஏழாவது பிள்ளையாக மர்பி ரேடியோ இருந்தது. அப்போது எங்கள் தெருவில் மின்சாரம் இல்லை. எவரெடி பேட்டரி உதவியால் ரேடியோ படிக்கும். கூடவே சேர்ந்து நாங்களும் படிப்போம். பி.சுசீலா என்றால் அக்காக்கள் சேர்ந்திசைக்க, டிஎம்எஸ் என்றால் நானும் சேர்ந்து கொள்வேன். அப்போது எங்களுக்கு ஒரே பொழுதுபோக்கு சினிமாவும், ரேடியோ பெட்டியும் தான். பேட்டரி கரைந்து அழுக ஆரம்பித்தால், குழந்தையைப் போல ரேடியோவை தூக்கி வைத்து கட்டையை கழற்றி வெயிலில் வைத்து மீண்டும் பாட வைப்போம். மழைக்காலம் வந்து விட்டால், பாடல் கேட்பதில் பெரும் சிரமம் தான்.

ஆனாலும், ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமையும் நண்பர்களுடன் காந்திபுரம், வண்டியூர் கண்மாய்களில் குளித்து மகிழ்வதும், அதற்காக அம்மாவிடம் அடிவாங்குவதும் வழக்கமானதாகி விட்டது. இப்போது போல அன்றை,க்கு வீடுகள் இல்லை. ஆளுக்கு ஒரு செல்போனுடன் என்ன நடக்கிறது என்று தெரியாதது இன்றைய உலகம்.

டெண்ட் கொட்டகை
ஆத்திகுளத்தில் இருந்த டெண்ட் கொட்டகையில் வாரம் தவறாமல் படம் பார்த்து விடுவேன். இன்று ஜவஹர்புரமாக காட்சி தரும் அந்த பகுதி இருள் சூழ்ந்த கண்மாயாக இருந்தது. அந்த கண்மாய்க்குள் இறங்கி தான் டெண்ட் கொட்டகைக்கு போக வேண்டும். தனியாகப் போக அப்போது பயமாக இருக்கும். ஆனால், திரையரங்கு உச்சியில் கட்டப்பட்ட குழாயில் இருந்து மதுரை சோமுவின் குரலில் மருதமலை மாமணியே பாடல் ஒலிக்க ஆரம்பித்து விட்டால், தடதடவென வீட்டில் இருந்து எடுக்கும் ஓட்டம் கொட்டகை வரை நிற்காது. படத்தின் இடைவேளையின் போது விற்கப்படும் கடலை மிட்டாய், முறுக்கு அவ்வளவு சுவையாக இருக்கும்.கடலை மிட்டாயைத் தின்றவாறு ஆற்று மணலை குவித்து வைத்து படம் பார்ப்பது அலாதி சுகம்.

எம்.ஜி.ஆர் படம் என்றால், வாரம் முழுவதும் பார்ப்பேன். எனவே, எம்.ஜி.ஆர் படப்பாடல்கள் அத்தனையும் மனப்பாடம். அப்போது எனக்கு கொட்டகையில் டிக்கெட் கிடையாது. காரணம் எனது உறவினர் கொட்டகையில் பொறுப்பில் இருந்தார். இது தவிர நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு திரைகட்டி இலவச திரைப்படம் காண்பிக்கும் பழக்கம் இருந்தது. இன்று மிகப்பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் ரிசர்வ் லைன் மாரியம்மன் கோயில் அப்போது சின்னது. அதன் பின்னே திரைகட்டி வார வாரம் படம் போடுவார்கள். அதற்கு எதிரே இருந்த ஆயுதப்படை மைதானத்திலும், இன்று தமிழ் ஜெயா திரையரங்கு இருக்கும் எதிரே இருக்கும் காவலர் குடியிருப்பிலும் வாரம் தவறாமல் திரைப்படம் ஒளிபரப்பாகும். புதூர், ஆத்திகுளம், காந்திபுரம், ராமவர்ம நகர், விஸ்வநாதநகர், சங்கர் நகர் என படையெடுக்கும் கூட்டத்தால் திரையரங்கை விட நிரம்பி வழியும். இது தவிர அப்போது புதிதாக கட்டப்பட்ட டி.ஆர்.ஓ.காலனி, ரேஸ்கோர்ஸ் காலனி ஆகியவற்றிலும் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இப்படி திரைப்பட சுவையோடு வளர்ந்த எனக்கு பாடல்கள் மீது தீராத ஆர்வம் ஏற்பட்டது

ஏவிஆர் லாட்டரி கடை
பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில், அதாவது புதூர் மார்க்கெட் எதிரே ஏவிஆர் லாட்டரி கடை என ஒன்று இருந்தது. அதற்கு அடுத்து மோகன் விறகு கடை இருந்தது. லாட்டரி சீட்டுக்கடையில் இருந்து பாடல் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அண்ணன், தம்பிகள் நடத்திய அந்த கடையில், ரிக்சா ஓட்டுபவர்கள், தூய்மை பணியாளர்கள்,, சுமை தூக்கும் தொழிலாளர்கள் தான் கஸ்டமர்கள். இதில் ரிக்சா ஓட்டுபவர்கள் பெரும்பாலும் எம்.ஜி.ஆர் ரசிகர்களாக இருப்பார்கள். திரையரங்கில் எம்.ஜி.ஆரை காட்டியவுடன் கையில் வைத்துள்ள கட்டு பேப்பரை புரஜொக்டர் ஒளியில் வீசுவார்கள். அது பறவை போல பறந்து போகும். இதற்காக காலாவதியான லாட்டரி சீட்டுகளை வாங்க ஏவிஆர் லாட்டரி கடைக்கு வாங்க வருவார்கள்.

அந்த கடையில் இருந்த டேப்ரிக்கார்டரில் இருந்து அதிகம் பக்தி பாடல்கள் தான் ஒலிக்கும். அந்த கடையில் இருந்த ரஞ்சன் என்ற அண்ணன் ஏறு நெற்றியில் அழகாக திருநீற்றில் பட்டை போட்டிருப்பார். அவர் கடையில் இருந்து சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்கள் தான் அடிக்கடி ஒலிக்கும். நான் அந்த கடையில் அடிக்கடி நான் கேட்கும் ஒரு பாடல்,

கருணை வடிவானவளே கரம் குவித்தோம் அம்மா
கவலை யெல்லாம் தீர்த்து ஆளும் கருமாரி அம்மா…

இந்த பாடலை நாள் தவறாமல் கேட்பேன். அப்படியே எனது பள்ளியில் காலையில் பிரேயர் பொழுதில் ஒலிக்கும்

நீலக் கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
கால திரையில் எழில் பொங்கும்
கனகக் கருணை ஓவியமாம்…

பாடலை கேட்டு மகிழ்வேன் இந்த பாடலை அனைத்து குழந்தைகளும் சேர்ந்து பாடுவோம். ரேடியோ வழியே கேட்டுப் பழகிய குரல்கள் என்பதால் எல்.ஆர்.ஈஸ்வரி, சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன் ஆகியோரின் பெயர்கள் தெரியும். ஆனால், அந்த பாடலுக்கு மெட்டமைத்தவர்கள், பாடலை எழுதியவர்கள் யார் என்று அப்போது தெரியாது. ஏன் இப்போதும் அப்படித்தான். பக்தியிசை என்பது தமிழிசை தான். தந்தை பெரியார் தனது மேடையில் பக்தியிசை பாடல்களைப் பாடிக் கொண்டிருந்த சீர்காழி கோவிந்தராஜனுக்கு நிறைய வாய்ப்பளித்தார். காரணம், அதுவும் தமிழ் இசை என்பதனால் தான்.

பக்தியிசை
இன்றைய காலக்கட்டங்களில் ஒரே ஒரு சினிமா பாடலை எழுதியவரை ஒரு யூடியப் சேனல் காரர் பேட்டி எடுத்தால், ஊரில் இருக்கும் அனைத்து சேனல்களும் சம்பந்தப்பட்டவரை தேடிப்பிடித்து பேட்டி எடுத்து. இவர் தான் அந்தப் பாடல் எழுதியவர் என்று விளம்பரப்படுத்தி விடுகின்றன. திரையிசை பாடல்களுக்கு இவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் பக்தியிசைக்கு இன்று வரை கிடைக்கவில்லை. திரையிசைக்கு எந்த வகையிலும் குறைந்ததில்லை பக்தியிசை. தமிழிசை வளர்த்த வானம்பாடிகளான பக்தியிசை பரப்பிய பாவணர்கள் குறித்து இனி ஒவ்வொரு வாரமும் எழுதப்போகிறேன். நீங்கள் கேட்டு மகிழ்ந்த பாடல்களை எழுதியவர்கள் யார் என்ற தேடுதலோடு இந்த தொடரை துவங்குகிறேன்.
– ப.கவிதா குமார் (நினைவுகள் சுழலும்)

இப்போதே பகிருங்கள்

3 Comments

  1. நல்ல தொடக்கம். அறியாத பல வரலாறுகளை எதிர்பார்க்கிறேன்.
    இக்பால்

      • திரையிசையின் ஆரவாரங்களுக்கு மத்தியில், நம் பண்பாட்டின் வேராக விளங்கும் பக்தியிசையை முன்னிறுத்தி நீங்கள் எடுக்கவிருக்கும் இந்த முயற்சி மிகவும் போற்றத்தக்கது.
        ​”திரையிசைப் பாடல்களுக்குத் தரப்படும் விளம்பரம், இன்றுவரை பக்தி இலக்கியங்களுக்கும் அதை வளர்த்த சான்றோர்களுக்கும் சரிவரக் கிடைக்கவில்லை என்ற உங்களின் ஆதங்கம் மிகவும் நியாயமானது. புகழ்பெற்ற பல பக்தியிசைப் பாடல்களை முணுமுணுக்கும் பலருக்கு, அதை எழுதிய ‘வானம்பாடிகள்’ யாரென்று தெரிவதில்லை.
        ​தமிழிசை வளர்த்த அந்தப் பாவணர்களைத் தேடிப்பிடித்து, ஒவ்வொரு வாரமும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தத் துணிந்துள்ள உங்கள் தேடல் வெற்றிபெற வாழ்த்துகள். பக்தி என்பது வெறும் வழிபாடு மட்டுமல்ல, அது தமிழை வளர்த்த கலை வடிவம் என்பதையும் உங்கள் தொடர் நிரூபிக்கும் என நம்புகிறேன்.
        ​தொடரட்டும் உங்கள் இந்த உன்னதப் பணி!”
        – அன்புடன் கம்பம் விஜி-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *