கவின் ஆணவக் கொலை வழக்கில் திடீர் திருப்பம்… பெண் எஸ்.ஐ கைது

நெல்லை கவின் கொலை வழக்கில் 10 மாதங்களுக்கு பிறகு சுர்ஜித்தின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம். ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கவின் செல்வகணேஷ். பட்டியலின இளைஞரான இவர் கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீஸார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து சுர்ஜித்தின் பெற்றோரான தமிழ்நாடு சிறப்பு காவல்படை சார்பு ஆய்வாளர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் சரவணன், உறவினர் ஜெயபால் மற்றும் வழக்கில் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டனர்.

இதனால் சுர்ஜித்தின் தந்தை சரவணன் உள்ளிட்டோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், சிபிசிஐடி போலீஸார் இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, கொலை நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கவின் ஆணவக் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக சுர்ஜித்தின் தாயாரும், காவல்துறை சார்பு ஆய்வாளருமான கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த சிபிசிஐடி அதிகாரிகள், சம்பவத்துடன் தொடர்புடைய ஆதாரங்களின் அடிப்படையில் கிருஷ்ணகுமாரியை கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட அவரை போலீஸார், நெல்லை இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் நெல்லையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *