
சிறையில் வீட்டு உணவு வழங்க அனுமதிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக்கூறி ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பணமோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பு இன்று (அக்.30) காலை ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி முன்பு அன்பில் மகேஷ் தரப்பு மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி வாதாடினார். அதில், “சரியான உணவு வழங்கப்படாத காரணத்தினால், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷீக்கு 2 முதல் 4 கிலோ வரை உடல் எடை குறைந்துள்ளது. அக்டோபர் 29 முதல் நவம்பர் 2 வரை போலீஸ் காவல் கோரியுள்ளனர். ஆனால், அவர் கைது செய்யப்படுவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பாகவே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 16-ம் தேதியன்று அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டதோடு, செப்டம்பர் 18-ம் தேதியன்றும் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையின்போது அனைத்துக் கேள்விகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது. மேலும், ‘வேறு ஏதேனும் ஆவணங்கள் தேவைப்பட்டால் கேளுங்கள், தருகிறோம்’ என்று நாங்களே கூறினோம். எனவே, விசாரணையில் இருந்து மறைக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை” என்று வாதிட்டார்.
இதனிடையே, நீதிமன்ற உத்தரவை மீறி முதல் வகுப்பு மற்றும் சரியான உணவு வழங்கப்படவில்லை என்றும், மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் சப்பாத்தி மட்டுமே வழங்கப்பட்டதால் அதனை அவரால் சாப்பிட முடியவில்லை என்றும் வழக்கறிஞர்கள் அபுடுகுமார் ராஜரத்தினம் மற்றும் ரிச்சர்ட்ஸன் வில்சன் ஆகியோர் நீதிபதி முன்பு முறையிட்டனர். மேலும், அவருக்குச் சிறையில் வீட்டு உணவு வழங்க அனுமதிக்கக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



